நெஞ்சோடு கலந்திடு - பாகம் 4

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 4

Published on: 2025-06-04 02:50:06

Enjoying this post?
Save it to your favorites to easily find it later.
View Favorites

அத்தியாயம் 15

அன்று இரவு உணவுக்காக அசோக் வீட்டிற்கு வந்ததுமே, திவ்யா அவனை தன் அறைக்கு தனியாக அழைத்து சென்றாள். தனது மெயில் பாக்ஸ் திறந்து, தானும் திவாகரும் பேசிக்கொண்ட சேட் ஹிஸ்டரியை அவனுக்கு எடுத்து காட்டினாள். அசோக்கும் மிக கவனமாக அதை பார்வையிட்டான். திவாகர் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை, தன் மனதுக்குள் ஏற்றிக் கொண்ட அசோக், திவ்யா பேசியவற்றை மட்டும் சற்றே உன்னிப்பாக நோக்கினான். திருத்தங்கள் சொன்னான். வேறு எந்த மாதிரி பேசியிருக்கலாம் என்று ஆலோசனை கூறினான். திவ்யாவும் அசோக் கூறியவற்றை கூர்மையாக கவனித்துக் கொண்டாள்.

அப்புறம் அது தினசரி வாடிக்கை ஆனது..!! திவாகரும் திவ்யாவும் தினசரி சேட் செய்துகொள்வதும், அதை அன்றோ அடுத்த நாளோ.. அசோக்கும், திவ்யாவும் பேசி விவாதிப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாகிப் போனது..!! திவாகரை பற்றி நிறைய விஷயங்கள் அவர்களுக்கு தெரிய வந்தன. தெரிந்த விஷயங்கள் திருப்திகரமானதாகவே இருந்தன..!! திவ்யா சின்ன சின்ன விஷயங்களை கூட அசோக்கிடம் கேட்டு அனுமதி வாங்கிக் கொண்டே செய்தாள். அசோக்தான் தன் காதலை காக்க வந்த கண்கண்ட தெய்வமாக கருதினாள். சில நேரங்களில் இப்படி கூட நடக்கும்..

"டேய்.. நீ கொஞ்ச நேரம் இவர்கிட்ட பேசிட்டு இரேன்.. நான் இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன்.."

என்று திவாகரிடம் பாதி சேட் செய்து கொண்டிருக்கையிலேயே, லேப்டாப்பை தூக்கி அசோக்கிடம் கொடுத்துவிட்டு திவ்யா வெளியே சென்றுவிடுவாள். சென்றவள் ஒரு பத்து நிமிடங்கள் கழித்துதான், ஹார்லிக்சோ காம்ப்ளானோ கலந்து, இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு வருவாள். அசோக்கும் அதுவரை.. திவாகர் காதல் மயக்கத்தில் உளறுவதற்கெல்லாம் 'உம்' கொட்டிக்கொண்டிருப்பான். அப்புறம் லேப்டாப்பை திவ்யாவிடம் கொடுத்துவிட்டு, அவள் கையில் இருக்கும் கப்பை வாங்கி உறிஞ்சுவான்.

திவ்யாவுக்கு காதல் ஆலோசகனாக இருப்பது அசோக்கிற்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. தன் இதய வீட்டில் பூத்திருப்பவள், இன்னொருவனை கட்டிக்கொள்ள விரும்புவதும், அதற்கு அவனே ஆலோசனை சொல்லும் சூழ்நிலையாகிப் போனதும்.. அவன் கண் முன்னரே அவர்கள் காதல் மொழி பேசிக்கொள்வதும்.. அனுபவித்துப் பார்த்தாலே அந்த வலி புரியும்..!!

மனதெல்லாம் தாளமுடியாத அளவிற்கு வலி எடுத்தாலும், கலங்கிப்போகாத அளவிற்கு தெளிவாகவே இருந்தது..!! திவ்யாவின் சந்தோஷமான வாழ்க்கையை தவிர தனது காதலுக்கு வேறென்ன உயரிய லட்சியம் இருந்துவிட முடியும் என்ற தெளிவுதான் அது..!! அவள் சந்தோஷமாக இருந்தால்.. அதை விட தன் காதலுக்கு வேறென்ன வேண்டும் என்று தோன்றியது..!!

இந்த மாதிரியே ஒரு இரண்டு வாரங்கள் சென்றன..!! அப்போது ஒரு நாள்..

அசோக்கை பார்ப்பதற்காக அவன் அறைக்கு திவ்யா வந்தாள். அசோக் அப்போது அங்கே இல்லை. செல்வாதான் வெற்று மார்புடன் தரையில் மல்லாக்க படுத்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். திவ்யாவை பார்த்ததும், 'வா..வாம்மா திவ்யா.. வா..' என்று உளறியவர், பதறியடித்து உள்ளே ஓடிபோய் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே வெளியே வந்தார். திவ்யா பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு கேட்டாள்.

"அசோக் இல்லையா செல்வாண்ணா..?"

"கீழ்தான்மா போனான்.. நீ பாக்கலையா..?"

"இல்லையே.. நான் பாக்கலை.."

"ஹவுஸ் ஓனர் கூப்பிட்டு அனுப்பிச்சிருந்தாரு.. பாத்துட்டு வர்றேன்னு போனான்..!! அவன் நம்பருக்கு கால் பண்ணி பாரு..!!"

திவ்யா தன் செல்போன் எடுத்து அசோக் நம்பரை தேடி டயல் செய்தாள்..!! காதில் வைத்துக் கொண்டாள்..!!

'என்னை பந்தாட பிறந்தவளே..
இதயம் ரெண்டாக பிளந்தவளே'

அறைக்குள் இருந்த டேபிளின் ஒரு மூலையில் கிடந்த அசோக்கின் செல்போன் பாட்டு பாடியது. கீழே செல்லும்போது அசோக் செல்போனை அறையிலேயே விட்டு சென்றிருந்தான். ஏமாற்றம் அடைந்தவளாய் திவ்யா காலை கட் செய்தாள். அப்புறம் ஏதோ யோசனை வந்தவளாய்.. சற்றே கிண்டலான குரலில் செல்வாவிடம் சொன்னாள்.

"ம்ம்.. பையன் கலக்குறான்.. பாட்டுலாம் பட்டாசா இருக்கு.."

"எதை சொல்ற..?"

"அசோக்கோட ரிங்டோன்.."

"ஹாஹா.. ஆமாமாம்.. இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்.. இந்த மாதிரி பாட்டுத்தான புடிக்குது..?" என்று செல்வா உளறிக்கொட்ட, திவ்யா திகைத்தாள்.

"என்ன செல்வாண்ணா சொல்றீங்க..? அசோக் லவ் பண்றானா..?"

உளறிக் கொட்டிவிட்டோம் என்று செல்வா இப்போது தாமதமாக புரிந்துகொண்டார். உடனே சுதாரித்துக்கொண்டு சமாளிக்க முயன்றார்.

"ஆ.. இல்ல இல்ல.. இல்லையே..!! நான் எங்க எப்படி சொன்னேன்..?"

"ப்ச்.. இப்போ சொன்னீங்களேண்ணா..?"

"என்ன சொன்னேன்..?"

"இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்..' அப்டி சொன்னீங்களே..?"

"அப்டியா சொன்னேன்..? இல்லையே.. இந்தக்காலத்து பசங்களுக்குலாம்னு சொல்லிருப்பேன்.."

"இல்ல இல்ல.. நீங்க அப்படி சொல்லல.."

"அப்டித்தான்மா சொன்னேன்.."

"அட இல்லண்ணா.. நீங்க எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறீங்க.."

"ஐயோ இல்லம்மா.. நான் ஏன் மறைக்க போறேன்..?"

"ப்ச்.. பொய் சொல்லாதீங்க செல்வாண்ணா.. உண்மையை சொல்லுங்க.. அவன் யாரையாவது லவ் பண்றானா..?"

"அடடடா.. எனக்கு தெரிஞ்சா சொல்லிட மாட்டனா..? இதோ.. அசோக்கே வந்துட்டான்.. அவன்கிட்டேயே கேட்டுக்க நீ.. என்னை ஆளை விடு.."

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அசோக் உள்ளே நுழைய, இப்போது திவ்யா செல்வாவை விட்டுவிட்டு அசோக்கிடம் திரும்பி பாய்ந்தாள்.

"டேய்.. சொல்லுடா..!! நீ யாரையாவது லவ் பண்றியா..?"

அசோக் திக்கித்துப் போனான். உள்ளே நுழைந்ததுமே இந்த மாதிரி ஒரு கேள்வியை, அதுவும் திவ்யாவிடம் இருந்து.. அவன் எதிர்பார்க்கவே இல்லை..!! எதுவும் புரியாமல் செல்வாவை பார்த்தான். அவர் 'உளறி கொட்டிட்டேன்.. எப்படியாவது சமாளி..' என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு, திவ்யாவுக்கு தெரியாமல் இவனுக்கு சைகை செய்தார். அதற்குள்ளாகவே பொறுமை இல்லாமல் திவ்யா கத்தினாள்.

"கேக்குறேன்ல..? சொல்லுடா.. நீ யாரையாவது லவ் பண்றியா..?"

"ப்ச்.. இல்லை திவ்யா.."

"எங்க.. என் மேல ப்ராமிஸ் பண்ணு.." திவ்யா அசோக்கின் கையை பிடிக்க, அவன் பதறிப்போய் உதறினான்.

"ஐயோ.. என்ன இது.. விடு திவ்யா.."

"அப்போ.. நீ யாரையோ லவ் பண்ற..?"

"ஆ..ஆமாம்.."

"இதை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லல..?"

"ச்சை.. கத்தாதடி..!! நீ வா.. நாம வெளில போய் பேசலாம்.."

அசோக் அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான். அவளை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் தெரிந்த படியேறி இருவரும் மொட்டை மாடியை அடைந்தார்கள். அறையில் கேட்ட கேள்வியை திவ்யா இப்போது மீண்டும் கேட்டாள்.

"ம்ம்.. இப்போ சொல்லு.. நீ லவ் பண்ற மேட்டரை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து மறைச்ச..?"

"ப்ச்.. மறைக்கனும்லாம் இல்ல திவ்யா..!! சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. அதுக்குள்ளே நீ உன் லவ் மேட்டரை சொல்லி.. அதுல பிரச்னையாகி.. அப்புறம் சொல்ல எனக்கு சான்ஸ் கிடைக்கலை..!!" அசோக் இதமான குரலில் சொல்ல, திவ்யா இப்போது சற்றே சமாதானம் அடைந்தாள்.

"ம்ம்ம்... ஓகே... பொழைச்சுப் போ..!! சரி.. எப்போ உன் ஆளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்க போற..?"

"அம்மா தாயே.. இது ஜஸ்ட் ஒன்சைட்..!! மொதல்ல டபுள் சைட் ஆகட்டும்.. அப்புறமா உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.."

"அட்லீஸ்ட் அவங்க பேராவது சொல்லேன்.."

"அது எதுக்கு உனக்கு..?"

"அடப்பாவி.. என்கிட்டயேவா..?" திவ்யா முறைக்க,

"ஹஹாஹஹாஹஹாஹஹா...!!" அசோக் எளிறுகள் தெரிய சிரித்தான்.

"சிரிக்காத..!! அப்போ அவங்களும் உன்னை லவ் பண்ற வரைக்கும்.. அவங்களை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?"

"என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..?"

"அவங்க யாருனு சொல்லு.."

"ம்ம்.. அவ ஒரு லூசு.."

"என்ன பண்றாங்க..?"

"லூசுத்தனமான வேலை எல்லாம் பண்ணுவா.."

"உன் லவ்வை அவங்ககிட்ட சொல்லிட்டியா..?"

"இல்ல.. அவளுக்கு புத்தி தெளியட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.."

"ஐயோ கடவுளே.. என்ன பதில்டா சாமி இது..?"

"பைத்தியக்காரத்தனமான பதிலா தோணுதா..? பரவால.. இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்..!! சரி.. நீ உன் மேட்டருக்கு வா.. என்ன விஷயமா வந்த..?"

"பாரேன்.. கடைசில நான் வந்த மேட்டரையே மறந்துட்டேன்..!! ம்ம்ம்.. ஆக்சுவலா உன்கிட்ட ஸாரி கேக்கலாம்னு வந்தேன்.."

"ஸாரியா.. எதுக்கு..?"

"நேத்து மிட்னைட் உனக்கு கால் பண்ணினேன்.."

"ம்ம்.. காலைல மிஸ்ட் கால்ல பார்த்தேன்..!! அதுக்குலாமா ஸாரி கேட்ப..?"

"ஐயோ.. அதுக்கு இல்லடா.. என்னை கொஞ்சம் பேச விடுறியா..?"

"சரி.. சொல்லு.."

"நேத்து நைட்டு அவருக்கு என் நம்பர் கொடுத்துட்டேன்.. அவரும் உடனே கால் பண்ணிட்டார்.. கொஞ்ச நேரம் பேசினோம்.." திவ்யா சற்றே குற்ற உணர்வுடன் சொல்ல, அசோக்கிடம் அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் ஏனோ இப்போது பட்டென குறைந்தது.

"ஓ..!!"

"சாரிடா.. அவர் ரொம்ப கெஞ்சினார்.. என் குரலை கேட்கனும்னு..!! நான் உனக்கு கால் பண்ணினேன்.. நீ பிக்கப் பண்ணவே இல்ல.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.. உன்கிட்ட கேட்காமலே நம்பர் கொடுத்திட்டேன்..!! நான் நம்பர் கொடுத்தது தப்பா அசோக்..?"

"சேச்சே.. இதுல என்ன இருக்கு..?"

"ம்ம்.. அ..அப்புறம் இன்னொரு விஷயம்.." திவ்யா மீண்டும் தயக்கமான குரலில் சொன்னாள்.

"என்ன..?" அசோக் உதறலாக கேட்டான்.

"இந்த வாரம் எங்கயாவது நேர்ல மீட் பண்ணலாமான்னு கேட்டார்.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..!!"

"ம்ம்.."

"நான் என்ன பண்ண அசோக்..? போய் மீட் பண்ணவா..?"

"ம்ம்.. போ.. போய் மீட் பண்ணு..!! நேர்ல பாத்து பேசினாத்தான அவரை பத்தி நீயும், உன்னை பத்தி அவரும் புரிஞ்சுக்க முடியும்..? இதுக்குலாமா என்கிட்டே பெர்மிஷன் கேட்டுட்டு இருப்ப..?" மனதுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே அசோக் சொன்னான்.

"அப்டி இல்லடா.. இத்தனை நாள் பரவால்ல.. சேட் மட்டுந்தான்..!! நேர்ல பாக்கனும்னதும்.. ஒரே உதறலாவே இருக்கு..!! நீ இருக்கேன்ற தைரியத்துலதான் நான் இருக்கேன்.. நீதாண்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்..!!"

"நானா..? நான் என்ன பண்றது..?"

"எங்கே மீட் பண்றது.. என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது.. எப்படி அவர்கிட்ட பேசுறது.."

"ஐயோ.. அதுலாம் ஒன்னும் மேட்டரே இல்ல திவ்யா.. ஏதோ ஒன்னு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"இல்லடா.. அவருக்கு புடிக்கனும்ல..?"

திவ்யா குறுக்கில் புகுந்து வெடுக்கென சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். அவளுடைய குழந்தைத்தனமான முகத்தையே சில வினாடிகள் பாவமாய் பார்த்தான். லேசாக புன்னகைத்தான். அப்புறம்..

"சரி.. நான் ஹெல்ப் பண்றேன்.." என்றான் சுரத்தே இல்லாத குரலில்.

"தேங்க்யூடா.. தேங்க்யூ வெரி மச்.."

உற்சாகமாக கத்திய திவ்யா அசோக்கை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இதமாக அணைத்துக் கொண்டான். அசோக்கிற்கு இப்போது இதயம் விரிசல் விடுவது மாதிரி ஒரு உணர்வு. திவ்யா தன்னிடம் இருந்து விலகிக் கொண்டே செல்கிறாள் என்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. ஒருவித விரக்தி மனோபாவம் அவனுள் பரவ ஆரம்பித்தது. அவனுடைய குரலிலும் அந்த விரக்தி தென்பட்டது.

"நானும் உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும் திவ்யா.."

"என்னடா..?"

"எனக்கு ஆன்சைட் போறதுக்கு ஒரு ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு.."

"வாவ்.. ரியல்லி..? எங்கே..?"

"ஜெர்மனி.."

"எவ்ளோ நாள்..?"

"மூணு வருஷம்..!!"

அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம், பட்டென சுருங்கிப் போனது. ஒரு இனம் புரியாத சோகம் ஒன்று அவளுடைய மனதை வந்து கவ்வியது மாதிரி இருந்தது. ஒரு வாரமோ, இரண்டு வாரமோ என்று எண்ணியிருந்தவள், மூன்று வருடங்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. அசோக்கின் முகத்தையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். சோர்ந்து போன குரலில் கேட்டாள்.

"என்னடா சொல்ற..? மூணு வருஷமா..?"

"ம்ம்.. கொஞ்சம் அதிகமா கூட ஆகலாம்.."

"கண்டிப்பா போகனுமா அசோக்..?"

"அப்படி இல்ல.. போறியான்னு கேட்டுருக்காங்க.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.."

"நீ என்ன சொல்லப் போற..?"

"இன்னும் டிஸைட் பண்ணல திவ்யா.."

இப்போது திவ்யா அவசரமாக சொன்னாள்.

"ப்ளீஸ் அசோக்.. நீ போக வேணாம்..!!"

"ஏன்..?"

"சொன்னா கேளேன்.. ப்ளீஸ்.. போக வேணாம்..!! நான் சொன்னா நீ கேட்பியா மாட்டியா..?"

"ஏன் போக வேணாம்னு சொல்லு..!! ஒருவேளை நான் போயிட்டா.. உன் லவ்க்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு யோசிக்குறியா..?"

"ச்சே.. என்ன பேசுற நீ..? என்னை என்ன அவ்ளோ செல்ஃபிஷாவா நெனச்சுட்ட..?"

"அப்புறம் என்ன..?"

"என்னன்னு எனக்கு சொல்ல தெரியலைடா. ஆனா உன்னை பிரியுறது.. நெனச்சு பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு.. அவ்ளோ நாள் என்னால உன்னை பார்க்காம இருக்க முடியாது..!! ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"

திவ்யா பரிதாபமாக கெஞ்ச ஆரம்பிக்க, சற்று முன் இழந்த உற்சாகத்தை அசோக் இப்போது மீண்டும் பெற்றான். அவன் உடலுக்குள் ஏதோ புது ரத்தம் பாய்வது மாதிரி உணர்ந்தான். கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்த புன்னகை இப்போது மீண்டும் அவன் உதடுகளில் வந்து ஒட்டிகொண்டது. திவ்யாவின் தோள் மீது உரிமையாக கைபோட்டு, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"சரி.. உன்னை விட்டு எங்கயும் போகலை.. போதுமா..?" என்றான்.

"தேங்க்ஸ்டா..!!"

சொல்லிவிட்டு திவ்யாவும் அசோக்கின் தோளில் சுகமாக சாய்ந்து கொண்டாள்.

 

அத்தியாயம் 16

அந்த வார இறுதியில் ஒருநாள் திவ்யாவும் திவாகரும் நேரில் சந்தித்துக் கொள்வது என்று முடிவானது. 'ஏதாவது காபி ஷாப்ல மீட் பண்ணிக்குங்க..' என்று அசோக் கொடுத்த ஐடியாவைத்தான், திவ்யா திவாகருக்கு முன்வைத்தாள். அவனும் ஒத்துக் கொண்டான். அவளை சந்திக்க மிக ஆர்வமாக இருப்பதாக சொன்னான். இடையில் இருந்த நான்கு நாட்களில் திவ்யா அசோக்கை கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு வறுத்தெடுத்து விட்டாள்.

"என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது..? ஸாரி ஓகேவா..?"

"அதுலாம் வேணாம்.. உன் ஆளுக்கு புடிக்காது.."

"உனக்கு எப்படி தெரியும்..?"

"நானும் அவர் கூட சேட் பண்ணிருக்கேன்ல..? அவரோட டேஸ்ட் என்னன்னு ஓரளவு என்னால அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியுது.."

"ஓ..!! அப்போ நீ என்ன சஜஸ்ட் பண்ற..?"

"ஜீன்ஸ் டி-ஷர்ட்..!!"

"போடா.. எனக்கு ஜீன்ஸே பிடிக்காது.."

"உனக்கு புடிக்காட்டா என்ன.. அவருக்கு புடிக்கனுமா இல்லையா..?"

"ஆமாம்.. புடிக்கணும்.."

"அப்போ போட்டுட்டு போ..!!"

"அது எப்படி அவருக்கு புடிக்கும்னு நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற..?"

"ஒரு ஆம்பளை மனசு.. இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்..!!"

"ஆஆஆ...!! அப்பா... முடியலை..!!"

"ஹாஹா..!! ம்ம்ம்.. கொஞ்சம் கிளாமரா.. கொஞ்சம் செக்ஸியா.. போ..!! ஜீன்ஸ்ல.. பேன்ட் கூட வேணாம்.. குட்டியா ஷார்ட்ஸ் இருக்குல.. அது போட்டுட்டு போ.. உன் ஆளுக்கு ரொம்ப பிடிக்கும்..!!"

"அய்யே.."

"நல்லா மேக்கப் போட்டு போ.. லிப்ஸ்டிக் மறக்காத.."

"அதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காதுடா.."

"உனக்கு பிடிக்குமா இல்லையான்னு யார் கேட்டா இங்க..?"

"சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.. போட்டுட்டு போறேன்..!! சரி.. எப்போ போகலாம்..?"

"எங்க..?"

"எனக்கு ட்ரஸ் செலக்ட் பண்றதுக்கு.."

"அடிப்பாவி.. அதுவும் நான்தான் பண்ணனுமா..?"

அன்று மாலையே ஒரு கடைக்கு சென்று திவ்யாவுக்கு உடைகள் வாங்கினார்கள். மாடர்னாக.. அணிந்து கொண்டால் கவர்ச்சியை கொப்பளிக்கும்.. நான்கைந்து செட் உடைகள்..!! ட்ரையல் ரூம் சென்று அணிந்து கொண்டு வந்து, அசோக்கிடம் காட்டி ஒப்பீனியன் கேட்டாள்.

"நல்லாருக்காடா..? ரொம்ப வல்கரா இருக்கோ..?"

"அதெல்லாம் ஒண்ணுல்ல.. உனக்கு எது போட்டாலும் அழகாத்தான் இருக்கும்..!!"


உடை விஷயம் மட்டும் இல்லை. திவாகரிடம் எப்படி பேச வேண்டும் என்பது பற்றியும் நிறைய ஆலோசனைகள் கேட்டுக் கொண்டாள். அசோக்கும் அட்வைஸ்களை வாரி வழங்கினான்.

"அவர்கிட்டயும் போய் லூசு மாதிரி வளவளன்னு பேசிட்டு இருக்காத.. அவருக்கு பேச சான்ஸ் கொடு.. நீ பேசுறதை விட.. அவர் பேசுறதை கவனி.."

"ம்ம்.."

"சந்தோஷமான மேட்டர் மட்டுமே பேசு.. உன் கவலைலாம் அவர்கிட்ட சொல்லி புலம்பிட்டு இருக்காத.. ஆம்பளைங்களுக்கு அழுமூஞ்சி பொம்பளைங்களை புடிக்கவே புடிக்காது..!! "

"ம்ம்.."

"அவர் ஏதாவது ஜோக் அடிச்சா நல்லா சிரி.. மொக்கை ஜோக்கா இருந்தா கூட பரவால.."

"ஹாஹா..!! ஓகே..!!"

"முக்கியமான விஷயம்.. அவர் செய்ற சின்ன சின்ன விஷயங்களை கூட பாராட்டி பேசு.. மறந்து கூட எதுக்காகவும் அவரை கிரிட்டிசைஸ் பண்ணாத.."

"ஏன்..?"

"உன் ஆளுக்கு அதை தாங்கிக்கிற மென்டாலிட்டி கிடையாது.. நான் கவனிச்சிருக்கேன்..!! அப்டியே ஏதாவது சொல்றதா இருந்தாலும்.. சாஃப்டா, நாசூக்கா சொல்லு.."

"ம்ம்.. ஓகேடா.."

அவர்கள் சந்திக்கும் நாளும் வந்தது..!! ஆர்வ மிகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திவ்யா அந்த காபி ஷாப்பை அடைந்திருந்தாள். நொடிக்கொருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள். திவாகர் எப்போது வருவான் என்று பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அசோக்கிற்கு அவ்வப்போது கால் செய்து அப்டேட் கொடுத்தாள்.

"ரொம்ப போரடிக்குதுடா.."

"உன்னை யார் இவ்ளோ சீக்கிரம் அங்க போக சொன்னது..?"

"நான் என்ன பண்றது..? அந்த ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டான்.. வந்து பார்த்தா திவாகர் இன்னும் வரவே இல்ல.."

"அவனை உதைச்சா எல்லாம் சரியா வரும்.."

"எவனை..?"

"ம்ம்.. அந்த ஆட்டோக்காரனை..!! சரி.. அவர் வர்றதுக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு.. அங்கேயே உக்காந்துட்டு இருக்காத.. எல்லாம் ஒருமாதிரி பாக்க போறாங்க.. பக்கத்துல எங்கயாது போய் சுத்திட்டு வா.."

"பக்கத்துல என்ன இருக்குது.. ஒரே ஒரு புக் ஸ்டால்தான் இருக்குது.."

"நல்லதா போச்சு.. ஏதாவது ஒரு புக் வாங்கி அவருக்கு பிரசன்ட் பண்ணேன்.. சர்ப்ரைசா இருக்கும்..!!"

"வாவ்... நல்ல ஐடியாவாத்தான் இருக்குது..? என்ன புக் வாங்குறது..?"

"அது கூட நான்தான் சொல்லனுமா..? போய் பாருடி.. சோம்பேறி..!!"

"சரி சரி.. திட்டாத..!!"

திவ்யா அந்த புத்தக கடைக்குள் நுழைந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சுற்றி சுற்றி வந்தாள். அப்புறம்.. 'திவாகருக்குத்தான் கவிதைகள் மீது மிகவும் ஆர்வம் ஆயிற்றே. ஏதாவது கவிதைத்தொகுப்பு வாங்கிக் கொடுக்கலாம்' என்று முடிவு செய்தாள். கவிதைத்தொகுப்பு பகுதிக்கு சென்று தேடினாள். மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் செலவழித்து அந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தாள். மீரா எனும் கவிஞருடைய கவிதைத்தொகுப்பு..!!

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

பக்கங்கள் புரட்டி ஒரு சில கவிதைகளை வாசித்த திவ்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த புத்தகத்திற்கு பில் போட சொன்னாள். பர்ஸ் திறந்து பணம் எடுத்து கொடுத்தாள். மீதிப்பணம் தந்த பெண்ணிடம்..

"பென் இருக்கா..?" என்று கேட்டாள்.

அந்தப்பெண் ஒரு பேனாவை எடுத்து நீட்ட, புத்தகத்தின் முதல் பக்கம் திறந்து 'அன்புடன் திவ்யா..' என்று எழுதினாள். இல்லை இல்லை.. எழுத முயன்றாள். ஆனால்.. பேனா ஒத்துழைக்கவில்லை. மை தீர்ந்து போயிருந்தது போலிருக்கிறது. 'இது எழுதலைங்க..' என்று மீண்டும் அந்தப் பெண்ணிடமே திரும்ப, அவளோ இப்போது வேறு ஒரு கஸ்டமருக்கு பில் போடுவதில் பிஸியாக இருந்தாள்.

எழுதாத பேனாவை வைத்து தலையை சொறிந்தவாறு திவ்யா நின்றிருக்கையில்தான், அவள் முன்னே அந்த கரம் நீண்டது. விரல்களுக்கிடையே ஒரு பால்பாயின்ட் பேனாவை பிடித்திருந்தது அந்த கரம். கரிய நிறத்தில்.. நீளமான.. கூர்மையான.. பால்பாயின்ட் பேனா..!! கூடவே மென்மையாக அந்த குரலும் ஒலித்தது.

"Wherever you go.. don't forget your pen..!!"

திவ்யா திகைத்துப் போய் திரும்பி பார்க்க, வெண்பற்கள் தெரிய சிரித்தவாறு திவாகர் நின்றிருந்தான். மழமழவென்று ஷேவ் செய்து பளிச்சென வந்திருந்தான். ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்திருந்தான். கண்ணுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான். அவனுடய உடலில் இருந்து ஒரு உயர் ரக சென்ட் வாசனை வெளிப்பட்டு.. அருகில் இருப்பவர்களின் நாசியில் குப்பென ஏறியது..!!

"ஹா..ஹாய்..." என்றாள் திவ்யா திகைப்பு மாறாமலே.

"பேனா வேணாமா..?"

"ஆங்.. வேணும் வேணும்.."

அவசரமாக சொன்ன திவ்யா அவன் கையில் இருந்த பேனாவை வாங்கிக் கொண்டாள். வெட்கம் அவளை பிடுங்கி தின்றது. கன்னங்கள் சிவக்க ஓரக்கண்ணால் திவாகரை பார்த்துக் கொண்டே, புத்தகம் திறந்து 'அன்புடன் திவ்யா..' என்று எழுதினாள். பேனாவை மீண்டும் அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்ட திவாகர், சற்றே கிண்டலான குரலில் சொன்னான்.

"சொல்வேன்னு எதிர்பார்த்தேன்.. நீ சொல்லலை.."

"என்னது..?"

"தேங்க்ஸ்..!!"

"ஓ.. ஸாரி..!! தேங்க்ஸ்.. ஃபார் யுவர் பென்.." திவ்யா அசடு வழிந்தாள்.

"இட்ஸ் ஓகே.." திவாகர் சிரித்தான்.

"அண்ட் தென்.. திஸ் இஸ் ஃபார் யூ.."

திவ்யா புத்தகத்தை அவனிடம் நீட்ட, அவன் 'ஓஹ்.. தேங்க்ஸ்..' என்று ஆச்சரியப்பட்டவாறே அதை வாங்கிக்கொண்டான். பக்கங்களை புரட்டி மேலோட்டமாக வாசித்தான். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான்.

"லவ்லி..!!"

"யா.. நானும் சில கவிதைகள் வாசிச்சு பாத்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது.."

"நான் கவிதையை சொல்லல.."

"அப்புறம்..?"

"உன்னை சொன்னேன்..!! யூ லுக் லவ்லி..!!"

திவாகர் திவ்யாவின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு சொல்ல, திவ்யாவின் முகத்தில் இப்போது குப்பென்று ஒரு நாணம் வந்து குடிகொண்டது. 'ஓஹ்.. தேங்க்ஸ்..' என்று வெட்கப்பட்டவள், தலையை குனிந்து கொண்டாள்.

"ஷேல் வீ மூவ்..?" திவாகர் கேட்க.

"ம்ம்.. யா.." திவ்யா தலையசைத்தாள்.

இருவரும் காபி ஷாப்புக்குள் நுழைந்தார்கள். ஓரமாய் கிடந்த ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்து கொண்டார்கள். ஆளுக்கொரு காபி ஆர்டர் செய்து கொண்டார்கள். கண்ணாடி தடுப்பு வழியாக.. வெளியே சாலையில் செல்லும் வாகனங்கள் பளிச்சென தெரிந்தன. வேடிக்கை பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான்.

"ஃபோட்டோவை விட நேர்ல நீ ரொம்ப அழகா இருக்குற திவ்யா.."

"ம்ம்.."

"உன் மேக்கப், லிப்ஸ்டிக், உன் ட்ரஸ்.. எல்லாமே.. ஜஸ்ட் பெர்ஃபக்ட்..!!"

"நான் போட்டிருக்குற ட்ரஸ் பிடிச்சிருக்கா..?"

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.."

"ம்ம்.. அசோக்தான் செலக்ட் பண்ணினான்.. அவனுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.." திவ்யா அந்த மாதிரி வெகுளித்தனமாக சொல்ல,

"ஓ.." என்றவாறு திவாகர் பட்டென முகம் சுருக்கினான்.

"என்னாச்சு..?"

"ஒண்ணுல்ல..!! ட்ரெஸ் கூட அவனை கேட்டுத்தான் செலக்ட் பண்ணுவியா..?"

"ஆமாம்.. அவன் எது சொன்னாலும் கரெக்டா இருக்கும் தெரியுமா..? நானும் எது பண்ணினாலும் அவனை கேட்டுத்தான் பண்ணுவேன்.." திவ்யா ரொம்பவே பெருமையாக சொன்னாள்.

"ரொம்ப பிடிக்குமோ அவனை..?"

"என்ன இப்படி கேட்டுட்டீங்க..? அசோக்தான் எனக்கு எல்லாமே..!!"

"ம்ம்ம்ம்.." என்று இறுக்கமாக சொன்னவாறு, திவாகர் ஒரு பெருமூச்சு விட்டான்.

"ஆமாம்.. ஏன் இதெல்லாம் கேக்குறீங்க..?"

"இல்ல.. சேட்லயும் எப்போ பார்த்தாலும் அசோக் புராணம் படிக்கிற.. நேர்லயும் அதேயே ஆரம்பிச்சுட்டியே.. அதான் கேட்டேன்..!!"

"ஓ.. ஸாரி.."

"இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்... நாம ஒரு அக்ரீமன்ட்டுக்கு வரலாமா திவ்யா..?"

"என்ன..?"

"இனிமே நாம பேசுறப்போ.. அசோக்கை பத்தி எதுவும் பேசவேணாம்..!! நம்மை பத்தி பேசிக்கவே ஆயிரம் விஷயம் இருக்குறப்போ.. எதுக்கு தேவையில்லாம அவனை பத்தி பேசி.. நேரத்தை வேஸ்ட் பண்ணனும்..? ம்ம்..? நீ என்ன சொல்ற..?"

உதடுகளில் அழகாக ஒரு புன்னகையோடும், கண்களை இடுக்கி கூர்மையாக பார்த்தவாறும் திவாகர் கேட்க, திவ்யா திகைத்துப் போனாள். அவன் முன்வைத்த ஒப்பந்தம் அவளுடைய மூளைக்குள் புகுந்து, இதயத்தை பற்றி பிசைந்தது..!! தான் சிறுவயதில் இருந்து ஆதரவாக பற்றியிருந்த அசோக்கின் கையை, யாரோ வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து.. பிரிப்பது மாதிரி ஒரு உணர்வு..!!

"ம்ம்.. சரி.." என்றாள் மனதில் ஒரு உறுத்தலுடனே.

 

அத்தியாயம் 17

திவ்யாவும், திவாகரும் ஒரு மணி நேரம்தான் பேசியிருப்பார்கள். ஆனால் அவள் அதைப்பற்றி இரண்டு மணி நேரங்கள் அசோக்கிடம் கதையளந்தாள். 'அவர் அப்படி.. அவர் இப்படி..' என்று..!! அசோக் பற்றி இனி பேசவேண்டாம் என்று திவாகர் சொன்னதை மட்டும் அசோக்கிடம் மறைத்து விட்டாள். அதையே வேறு மாதிரி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

"அவர் ரொம்ப பொசஸிவ் தெரியுமா..? அவர் அப்படி இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு.."

அவள் சொல்ல சொல்ல அசோக்கிற்கு எரிச்சல் கிளம்பும். இருந்தாலும் எல்லாவற்றையும் உள்ளே போட்டு மறைத்துக் கொண்டு அவள் சொல்லுவதற்கெல்லாம் 'உம்' கொட்டிக் கொண்டிருப்பான்.

திவ்யா இந்த மாதிரி அவனை இம்சை செய்தாள் என்றால், சித்ராவின் டார்ச்சர் வேறு மாதிரி இருந்தது. எப்படி என்கிறீர்களா..? இது.. திவ்யாவும், திவாகரும் சந்தித்துக் கொண்டதற்கு அடுத்த நாள் நடந்தது..!!

மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு அசோக்கும், சித்ராவும் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள். அசோக் பைக்கை ஓட்ட, பின் சீட்டில் அமர்ந்தவாறே சித்ரா தொணதொணத்துக் கொண்டு வந்தாள்.

"என்னடா.. அவ நேத்து அந்தப்பையனை போய் பார்த்தாளாமா..?"

"ம்ம்.. ஆமாம்.. போய் பார்த்துட்டு.. ஹண்ட்ரட் ரூபிசுக்கு காபி குடிச்சுட்டு வந்திருக்கா.."

"எப்படி.. அவளுக்கு புடிச்சிருந்ததாமா..?"

"காபியா..?"

"அடச்சை..!! அந்த பையனைடா..!!"

"புடிச்சதாலதானக்கா பார்க்கவே போனா.." அசோக் எரிச்சலாக சொன்னான்.

"நீ ஏண்டா இவ்வளவு கோவப்படுற..? ஹ்ம்ம்... நெனச்சா எனக்கும் பாவமாத்தான் இருக்கு..!!"

"என் நெலமையை நெனச்சா..?"

"இல்லடா.. அந்தப்பையனை நெனச்சா..!! இந்த அடங்காப் பிடாரியை கட்டிக்கிட்டு அவன் என்ன பாடு படப்போறானோ..? அவன் வாழ்க்கை கெட்டு குட்டிச்சுவராத்தான் ஆகப் போகுது..!! ஷேர் வாங்கி விக்கிறானா அவன்..? சோறு கூட இல்லாம தெருத்தெருவா பிச்சை எடுக்க போறான் பாரு..!!" சித்ரா திவ்யாவை திட்ட, அசோக்கிற்கு கோவம் வந்தது.

"இப்போ எதுக்கு தேவையில்லாம அவளை திட்டுற..? நீயும் லேசுப்பட்டவ இல்லக்கா.. எப்பவும் அவளை விட ஒரு படி மேலத்தான் நிக்கிற நீயும்..!!"

"ம்க்கும்.. அவுகளை சொன்னதும்.. இவுகளுக்கு கோவத்தை பாரு.."

"ஏன் சொல்லமாட்ட..? உனக்குலாம் என் கஷ்டம் எங்க புரியப்போகுது..? உனக்கு எல்லாமே நக்கலாத்தான் இருக்குது..!!"

"அப்படி என்ன தம்பி உனக்கு கஷ்டம்..?"

"காதலிக்கிற பொண்ணுக்கே.. இன்னொரு பையனை அவ காதலிக்க ஐடியா கொடுக்குற கொடுமை இருக்கே.. அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்.."

"ஹாஹா..!! உன்னை யாரு அப்படிலாம் கஷ்டப்பட சொன்னது..? உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத வேலை எல்லாம்..?? பெரிய தியாகி இவரு.. 'எங்கிருந்தாலும் வாழ்க'னு எடுத்ததுக்கெல்லாம் அவளுக்கு அட்வைஸ் கொடுத்துக்கிட்டு இருக்காரு..!! அவதான் உனக்கு இல்லைன்னு ஆகிப் போச்சுல..? அவ எக்கேடோ கெட்டு போறான்னு.. விட்டு தலை முழுகி தொலைக்க வேண்டியதுதான..?"

"ப்ச்.. அப்டிலாம் என்னால விட முடியலைக்கா..!! பாவம் அவ.. அப்பாவி..!! என் ஹெல்ப் இல்லன்னா அவ ரொம்ப கஷ்டப்படுவா..!!"

"உன்னை வேணாம்னு சொன்னவளுக்காக இப்படி உருகுறியேடா..? இங்க பாரு.. அக்கா சொல்றதை கேளு.. இந்த லவ் அட்வைஸ் கொடுக்குற வேலையலாம் இன்னைக்கோட ஸ்டாப் பண்ணிடு.. அவ சங்காத்தமே வேணாம்னு தலை முழுகிடு.. அவளுக்கு என்ன கஷ்டமோ அதை அவளே பார்த்துக்கட்டும்..!!"

"ம்க்கும்.. அவளை நான் தலைமுழுகுனா அவளுக்கு கஷ்டமா இருக்கோ இல்லையோ.. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!"

"ஏன்..?"

"அவளோட சீக்ரட்லாம் அப்புறம் யாரு உனக்கு வந்து சொல்றது..?"

"அடச்சீய்.. அவ சீக்ரட்டை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்..?" என்று வெறுப்பாக சொன்ன சித்ரா, அடுத்த நொடியே..

"ம்ம்ம்.. அப்புறம்.. வேற என்ன சொன்னா அவ..?" என்று அசோக்கை கேட்டாள்.

"ம்ம்ம்..?? நான் செலக்ட் பண்ணின ட்ரஸ் அவருக்கு புடிச்சிருந்ததாம்.. நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி மேக்கப்லாம் போட்டுட்டு போனாள்ல.. அதுவும் அவரை ரொம்ப அட்ராக்ட் பண்ணிச்சாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்க,

"ஹாஹாஹாஹாஹாஹா.." சித்ரா பெரிதாக சிரித்தாள்.

"எதுக்கு சிரிக்கிற இப்போ..?" அசோக் புரியாமல் கேட்டான்.

"இல்ல.. நீ அவளை பிக்கப் பண்ணலாம்னு பார்த்த.. அவ உன்னை மேக்கப் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாளடா தம்பி..?? அதை நெனச்சா அக்காவால தாங்க முடியலை..!!"

கிண்டலாக சொன்ன சித்ரா, அசோக்கின் முதுகில் முகத்தை வைத்து, 'ம்ம்.. ம்ம்.. ம்ம்..' என்று போலியாக அழுது காட்ட.. அசோக் நொந்து போனான்..!! வெறுப்புடன் கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை சர்ரென முறுக்கினான்.

இந்த மாதிரி.. இரண்டு பெண்களின் இம்சைகளும்.. மேலும் இரண்டு, மூன்று வாரங்கள் தொடர்ந்தன. திவாகரும் திவ்யாவும் வாரம் ஒருமுறை நேரில் சந்தித்துக் கொண்டார்கள். தினமும் ஆன்லைனிலும், போனிலும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியதை திவ்யா அசோக்கிடம் கொட்டி தீர்ப்பாள். அசோக்கும் எரிச்சலுடன் எல்லாம் கேட்டுக் கொள்வான். எல்லாவற்றையும் அப்படியே சொல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அந்த விஷயங்களை அக்காவிடம்.. அவளுடைய துருவல் தாங்காமல் அசோக் ஒப்பிப்பான்..!! சித்ராவும் எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு. அப்புறம் அவனையே நோகடிப்பாள்..!!

இப்போதெல்லாம் அசோக் அடிக்கடி மதுவின் துணையை நாட ஆரம்பித்துவிட்டான். சில நேரங்களில்.. ஆபீசில் இருந்து கிளம்புகையிலேயே.. அருகில் இருக்கும் ஒரு பார் சென்று.. ஆல்கஹாலை உள்ளே ஊற்றிவிட்டு.. அப்புறமாய் வீட்டுக்கு செல்வான்..!! அன்றும் அப்படித்தான்.. ஆபீசில் இருந்து கிளம்பியவன்.. பைக்கை அந்த பார் முன்பாக பார்க் செய்தான். உள்ளே நுழைந்தான்..!!

கொஞ்சம் காஸ்ட்லியான பார் அது..!! நீல நிறத்தில் மந்தமான வெளிச்சம் அந்த இடம் முழுவதையும் நனைத்திருந்தது..!! ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் இருந்து.. ஒரு ஆங்கிலப் பாடல் மெலிதாக கசிந்து கொண்டிருந்தது..!! கருப்பு நிற சோபாக்கள்.. அவற்றின் மீது கையில் கோப்பையுடன் ஆட்கள்..!! நாற்பத்திரண்டு அங்குல எல்.ஸி.டி-யில்.. சச்சின் திரும்ப திரும்ப கிளீன் போல்ட் ஆகிக்கொண்டிருந்தார்.. ரீப்ளே..!!

மேட்ச் பார்க்க வசதியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அசோக் அமர்ந்து கொண்டான். மெனு கார்ட் நீட்டிய பேரரிடம்.. அதை வாங்காமலே..

"ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. டூ லார்ஜ்.. ஒன் ப்ரஞ்ச் ப்ரை..!!"

என்று ஆர்டர் செய்தான். பத்தே நிமிடங்களில் ஆர்டர் செய்தவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது. மேட்ச் பார்த்துக்கொண்டே.. விஸ்கியை உள்ளே விட்டுக் கொண்டே.. விரல் சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே..!!


ஒரு அரை மணி நேரம்..!! பில் வந்தது. கிரெடிட் கார்ட் எடுத்து கொடுத்தான். வாங்கி சென்ற பேரர், இரண்டு நிமிடங்கள் கழித்து திரும்ப வந்து, பில் புத்தகத்தை டேபிளில் வைத்து சென்றான். அசோக் அதை திறந்து பார்த்தான். சற்றே எரிச்சலானான். உள்ளே கார்ட் ஸ்வைப் செய்யப்பட்ட ஸ்லிப் இருந்தது. ஆனால் அதில் கையொப்பம் இடுவதற்கு பேனா வைக்க மறந்திருந்தான். அசோக் அந்த பேரரின் முதுகை பார்த்து கத்தினான்.

"ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..!! பேனா..!!" அவன் கத்திக் கொண்டிருக்கும்போதே,

"Wherever you go.. don't forget your pen..!!"

என்ற அந்த குரல் அவனுக்கு மிக அருகே ஒலித்தது. அதே நேரம் பேனாவுடன் அந்தக்கை அவன் முன்னே நீண்டது..!! பேனாவை வாங்கிக்கொண்டே, அசோக் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் நின்றிருந்தான். திவாகர்..!!!! மொழுமொழு முகத்துடன்.. உதட்டில் சிரிப்புடன்.. கண்ணுக்கு குளிர் கண்ணாடியுடன்..!!

அசோக் அதிர்ந்து போனான். திவாகரை சந்திப்போம் என்று அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில்..!! இவனுக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று திவ்யா சொல்லியிருக்கிறாளே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? மிகவும் குழம்பிப் போனான்.

ஆனால் திவாகர் மிகவும் கேஷுவலாக இருந்தான். அவனுக்கு இவன்தான் அசோக் என்று தெரியாதே..? இயல்பாக அசோக்கிற்கு எதிரே வந்து அமர்ந்தான். இவனை பார்த்து ஸ்னேஹமாய் புன்னகைத்தான். திவாகரையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் குனிந்து கையொப்பம் இட்டான்.

அதற்குள் பேரர் வந்து சேர்ந்திருக்க, திவாகர் அவனிடம் மிகவும் உரிமையாக பேசினான். அடிக்கடி இந்த பாருக்கு வருவான் போலிருக்கிறது. ஸ்டைலாக.. ஆங்கிலத்தில் பேசி.. சில மதுவகைகளை ஆர்டர் செய்தான். பேரர் சென்றதும் அசோக் திவாகரிடம் பேனாவை நீட்டினான். அவன் வாங்கி பாக்கெட்டில் செருகிக் கொண்டான். அப்புறமும் அசோக் அவனையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க,

"தேங்க்ஸ்லாம் சொல்ல மாட்டீங்களா..?" திவாகருடைய குரலில் ஒருவித கேலியும், கடுப்பும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

"ஸாரிங்க.. தேங்க்ஸ்..!!" என்றான் அசோக்.

"ம்ம்.. ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"இல்ல.. சொல்லுங்க.."

"வெளில போறப்போ.. பாக்கெட்ல எப்போவும் ஒரு பேனா வச்சுக்குறது ரொம்ப நல்ல பழக்கம்.. அதை ஏன் யாருமே பண்ண மாட்டேன்றீங்கன்னு எனக்கு தெரியலை..!!"

"ம்ம்.. நீங்க சொல்றது சரிதான்.. இனிமே அதை ஃபால்லோ பண்ண ட்ரை பண்றேன்.."

"ஹாஹா..!! நான் என் மனசுல பட்ட ஒரு நல்ல விஷயத்தை சொன்னேன்.. டோன்ட் மிஸ்டேக் மீ..!!" என்று திவாகர் அழகாக சிரிக்க,

"இல்லீங்க.. நான் தப்பா எடுத்துக்கலை.."

அசோக் அமைதியாக சொன்னான். திவாகர் ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் இதழ்கள் விரித்து புன்னகைத்தான். படக்கென்று அவனது வலது கையை அசோக்கின் முன்பு நீட்டி..

"பை தி வே.. ஐ'ஆம் திவாகர்..!!" என்றான். அசோக்கும் அவனுடைய கையை பிடித்து குலுக்கினான்.

"ஐ'ஆம் அரவிந்த்.." என்று பொய்யான பெயரை சொன்னான்.

 

அத்தியாயம் 18

கோயில் குளங்கள் ஒரு ஊருக்கு தனி அழகை கொடுக்கத்தான் செய்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் சொன்னதனாலோ என்னவோ, புளியங்குள மக்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பே தங்கள் கிராமத்தில் அழகான ஒரு கோயிலை கட்டி முடித்திருந்தார்கள். ஊர்க் கண்மாய்க்கு முன்பாக அனாமத்தாக கிடந்த இடத்தை சுத்தம் செய்து, அவ்விடத்தில் ஆதி பரமேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் எழுப்பிவிட்டார்கள். ஆண்டு தவறாமல் பொங்கல் வைத்து, விழா எடுத்து, அம்மனை மனம் குளிர செய்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பாக கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் கூட நடத்தினார்கள்.

பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுவார்கள். அடுத்த வாரம் செவ்வாயும், புதனும் திருவிழா..!! திருவிழாவுக்கு முந்தைய அந்த ஒரு வாரமும் ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று ஊர் கோலாகலப்படும். மைக்செட்டு, சீரியல் அலங்காரம், வீதியெங்கும் குழல் விளக்குகள் என.. ஊரே ஒலியும், ஒளியுமாய் இருக்கும்..!! திருவிழா நடக்கும் அந்த இரண்டு நாட்களும், கொண்டாட்டம் இன்னும் உச்சத்தை எட்டும்..!! செவ்வாய் இரவு கரகாட்டமோ, வில்லுப்பாட்டோ, பாட்டு கச்சேரியோ வைத்துக் கொள்வார்கள். புதன் இரவு வள்ளி திருமண நாடகம் என்பது எழுதப்படாத ஒரு விதி..!!

அவர்கள் எடுக்கும் விழா, அம்மனை மகிழ்விக்க உதவியதோ இல்லையோ.. ஊரை ஒன்றுபடுத்த பெரிதும் உதவியது..!! மீசை நரைத்த பெருசுகளும், அரும்பு மீசை சிறுசுகளும், கைகோர்த்துக்கொண்டு அம்மன் காரியம் செய்வார்கள்..!! எவ்வளவுதான் ஒருவொருக்கொருவர் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும்.. தாளாத மனக்கசப்பு இருந்தாலும்.. ஊர்க்காரியம் என்றால் ஒன்று கூடி விடுவார்கள் புளியங்குள மக்கள்..!!

"வாங்கப்பு.. வந்து பந்தக்காலை ஊன்டுங்க.. நீங்க ஊன்டுறதுதான வழக்கம்..?"

என்று ஒரு ஊர்ப்பெரியவர், தனக்கு பிடிக்காத இன்னொரு ஊர்ப்பெரியவரை முகம் ஏறிட்டு பாராமல் அழைப்பார். அந்த இன்னொரு பெரியவரும்..

"அட இதுல என்ன இருக்குப்பா.. யார் ஊன்டுனா என்ன..? சரி வா.. ரெண்டு பெரும் சேர்ந்தே ஊன்டுவோம்.." என்பார்.

இருவரும் சேர்ந்து பந்தல் கால் நடுகையில், அவர்களுடைய கைகள் லேசாக உரசிக் கொள்ளும். நெடு நாட்களுக்கு அப்புறம், ஒருவர் முகத்தை இன்னொருவர் ஏறிட்டு பார்த்துக் கொள்வார்கள். இருவருடைய இதழ்களிலும் ஒரு சிநேகப் புன்னகை படரும். பந்தல் கால் நட்டுவிட்டு, இருவரும் ஒன்றாக.. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, 'தாயே..!!!' என்று ஆதி பரமேஸ்வரி அம்மனை வணங்குவார்கள். வெறுப்பையும், மனக்கசப்பையும் தூக்கி எறிந்துவிட்டு, அம்மனின் முன்பு அரிவாள் மீசை முளைத்த குழந்தைகளாய் நிற்பார்கள்..!!

அசோக், திவ்யா, சித்ரா, கார்த்திக்.. இவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஒரு வருடம் கூட ஊர் திருவிழா தடைப்படவில்லை. எல்லா வருடமும், அதற்கு முந்தைய வருடத்தை விட இன்னும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது. இவர்களும் அந்த சமயத்தில் எங்கிருந்தாலும், ஒருமுறை கூட திருவிழாவை காண தவறியதில்லை. கல்லூரியோ, அலுவலகமோ.. விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு விரைந்து விடுவார்கள்.

அது.. திருவிழாவுக்கு முந்தைய வாரத்தின் வெள்ளிக்கிழமை இரவு..!! பயணத்துக்கு தேவையான வேலைகளை சித்ரா கவனித்துக் கொண்டிருந்தாள். முதலில் அன்று இரவே ஊருக்கு பயணிக்கத்தான் திட்டமிட்டிருந்தார்கள். இரவு ட்ரெயினில் வெயிட்டிங் லிஸ்ட் மூவ் ஆகாததால்.. அடுத்த நாள் காலை பஸ்ஸில் பிரயாணம் செல்லலாம் என்று திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள்.

கார்த்திக்குக்கு பிரயாணத்தின்போது கொறிக்க ஏதாவது நொறுக்குத்தீனி வேண்டும். நேற்றே வெல்ல சீடை பொரித்தெடுத்து ஒரு பொட்டலம் கட்டியாயிற்று. இன்று வீட்டில் மிச்சமிருந்த முந்திரி பருப்புகளை சித்ரா பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ ஞாபகம் வந்தவளாய், கையிலிருந்த சல்லடை கரண்டியுடனே சமையலறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலை நோக்கி நடந்தாள்.

ஹாலில் அண்ணனும், தங்கையும் அமர்ந்து டிவியில் 'கனா காணும் காலங்கள்' பார்த்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திக்குடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த திவ்யா, அண்ணியை கண்டதும், பார்வையை தொலைக்காட்சியின் பக்கம் திருப்பிக் கொண்டாள். சித்ராவும் அவளை கண்டுகொள்ளாமல், கணவனிடம் கேட்டாள்.

"முந்திரி பருப்பும் வறுத்து வச்சுட்டேங்க.."

"ஓகே.. வெரி குட்.."

"சும்மா அப்படியே சாப்ட்டுக்குறீங்களா..? இல்ல.. உப்பு, மொளகாத்தூள் போட்டு வைக்கவா..?"

"நோநோ.. அதெல்லாம் வேணாம்.. அப்புறம் போற வழில வயிறு புடுங்கிக்கப் போவுது..!! ப்ளெயின் முந்திரி பருப்பு மட்டும் போதும்..!!"

"ம்ம்.. சரிங்க.."

சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நுழைய முற்பட்டபோதுதான் அசோக் வீட்டுக்குள் நுழைந்தான். ஆபீசில் இருந்து இப்போதுதான் திரும்புகிறான். தம்பி வந்ததும் அக்கா அங்கேயே நின்றுகொண்டாள். அசோக் திவ்யாவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான். வந்ததுமே சென்னை ட்ராபிக் பற்றி புலம்ப ஆரம்பித்தவனிடம், பேச்சை மாற்றும் விதமாக கார்த்திக் கேட்டான்.

"அப்புறம் அசோக்.. உன் லீவ் அப்ரூவ் ஆயிடுச்சா.. நீ என்னைக்கு ஊருக்கு வர்ற..?"

"ப்ச்.. இல்லைத்தான்.. லீவ் அப்ரூவ் ஆகலை..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.

"அச்சச்சோ.. அப்போ திருவிழாவுக்கு நீ வரலையா..?"

"ம்ஹூம்..!! ஃபர்ஸ்ட் டைம்.. நம்ம ஊர் திருவிழாவை மிஸ் பண்ண போறேன்..!!"

"ப்ச்.. என்ன அசோக்.. இப்படி சொல்ற..? திருவிழா நேரத்துல நீ இருந்தாத்தான் வீடே களை கட்டும்..!!"

"என்னத்தான் பண்றது..? ப்ராஜக்ட் ரிலீஸ் டைமாகிப் போச்சு..!! நெறைய வேலை.. அதில்லாம.. எங்க டீம்லேயே.. நான்தான் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ்..!!"

அசோக் கேஷுவலாக அதே நேரம் பெருமையாக சொல்ல, திவ்யா 'ம்க்கும்.. சரியான பெருமை பீத்த களைய பய..' என்று முனுமுனுத்தவாறு, முகத்தை வேறு அஷ்ட கோணலாக்கியபடி வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.

"கண்டிப்பா போயே ஆகணும்னு சொன்னேன் அத்தான்.. ஆனா.. மேனேஜர் என் கால்ல விழாத குறையா கெஞ்சுனாரு.. எனக்கும் பாவமா போச்சு.. 'சரி போ போ.. போகலை'ன்னு சொல்லிட்டேன்..!!" அசோக் சோகமாக சொல்லி முடிக்க, கார்த்திக் இப்போது சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

"ச்சே.. இப்படி ஆயிடுச்சே.. எல்லாரும் இருக்குறப்போ நீ மட்டும் இல்லைன்னா.. அது அவ்வளவு நல்லா இருக்காதே..!! அட்லீஸ்ட் புதன்கிழமை கெடா வெட்டுக்காவது வந்து.. கறி சோறு சாப்பிட்டு போகலாம்ல அசோக்..?"

கார்த்திக் சீரியசாக சொல்ல, அசோக் இப்போது அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். 'ங்கொய்யால.. அப்போவாச்சும் புதன்கிழமை திருவிழாவுக்கு வந்து சாமி கும்பிட்டு போகலாம்லன்னு சொல்றானா பாரு..? திங்கிறதுலயே இருக்கான்யா.. ச்சே..!!' என்று மனதுக்குள் காறி துப்பினான். அப்புறம் அக்கா புருஷனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்று அசோக்கிற்கு தோன்றியது. குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே எள்ளல் தொனிக்க கேட்டான்.

"கெடா வெட்டு செவ்வாக்கிழமைலத்தான்..? புதன்கிழமைன்னு சொல்றீங்க..?"

அசோக் கேட்க, கார்த்திக் இப்போது 'கெக்கேபிக்கே'வென சிரிக்க ஆரம்பித்தான். தன் பானை வயிறு குலுங்க சிரித்தவன், அப்புறம் அந்த சிரிப்பை அடக்க முடியாமலே சொன்னான்.

"ஹ்ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹ்ஹா.. எந்த உலகத்துல இருக்குற நீ..? இத்தனை வருஷம் திருவிழா பார்த்திருக்குற.. என்னைக்கு கெடா வெட்டுன்னு கூட உனக்கு தெரியலையா..? புதன்கிழமைதான்பா கெடா வெட்டு..!!"


"இல்லைத்தான்.."

"அட ஆமாம்பா.. எனக்கு நல்லா தெரியும்..!!"

"அப்போ செவ்வாய்க்கிழமை..?"

"அன்னைக்கு பொங்கல் வைப்பாங்க..!! சக்கரை பொங்கலும், வெண்பொங்கலும்.. சாமிக்கு உடைச்ச தேங்கா சில்லை எடுத்து.. வாழைப்பழத்தையும் கடிச்சுக்கிட்டே சாப்பிடுவோமே.. மறந்து போச்சா..?"

"அப்போ.. அந்த அதிரசம், முறுக்குலாம் என்னைக்கு..?"

"ப்ச்.. அதுதான் திங்கக்கெழமை நைட்டே சுட்ருவாங்களே அசோக்..? ரெண்டு சட்டி.. ஒரு சட்டில அதிரசம்.. ஒரு சட்டில முறுக்கு..!!"

கார்த்திக் ஆர்வமாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் இப்போது கருவிழிகளை சுழற்றி ஓரக்கண்ணால் தன் அக்காவை பார்த்தான். அவளோ தம்பியின் கேள்விகளுக்கு 'படார்.. படார்..' என பதிலளித்துக் கொண்டிருந்த தன் கணவனையே பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்..!! அசோக் இப்போது லேசாக தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தான்.

"கலக்குறீங்கத்தான்.. எல்லாம் என்னைக்குன்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!! ம்ம்ம்ம்.. குட் குட்.. அப்படியே இன்னொன்னும் என்னைக்குன்னு சொல்லிருங்களேன்..?"

"எது..?"

"அக்காவோட பர்த்டே..!!"

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் பிரகாசமாக இருந்த கார்த்திக்கின் முகம், இப்போது இன்ஸ்டன்ட்டாய் இஞ்சி தின்ற குரங்குடையது மாதிரி மாறிப்போனது..!! அவ்வளவு நேரம் ஈசியான கொஸ்டின்ஸ் வர வர, 'பட் பட்' என ஆன்சர் செய்தவன், இப்போது டஃப் கொஸ்டின் வந்ததும் திணறினான்.. திருதிருவென விழித்தான்..!! தெரியாத ஆன்சரை கெஸ் செய்ய முயன்றான்..!!

"பி..பிப்ரவரி 24-த்..?"

"ப்ச்.. அது நம்ம சீஃப் மினிஸ்டர் பர்த்டே.. நான் கேட்டது சித்ரா அக்காவோட பர்த்டே..!!"

"இல்ல அசோக்..பிப்ரவரி 24-தான்..!! அதானடி..?"

என்றவாறு கார்த்திக் திரும்பி சித்ராவை பார்க்க, அவளுடைய முகம் அகோரமாய் மாறி நெடுநேரமாகியிருந்தது. தன் முட்டைக் கண்களை உருட்டி, எரித்து விடுவது போல அவள் கணவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக்கிற்கு தன் அக்காவை பார்க்க, அவர்கள் ஊர் ஆதி பரமேஸ்வரி ஞாபகத்துக்கு வந்தாள். கார்த்திக்கோ அர்த்த ஜாமத்து ஆவியைப் பார்த்தவன் போல குலைநடுங்கிப் போனான்.

"எ..என்னாச்சுடி.. ஏ..ஏண்டி அப்படி பாக்குற..? அப்போ.. பிப்ரவரி 24 இல்லையா..?"

சித்ரா ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றாள். கையில் வைத்திருந்த கரண்டியாலேயே கணவனின் உச்சந்தலையில் 'டங்..!!!' என்று ஒரு போடு போட்டாள். கோபத்துடனே படக்கென்று திரும்பி, அவசரமாய் உள்ளே நடந்தாள்.

"அடப்பாவி.. இப்படி எக்கச்சக்கமா என்னை மாட்டி விட்டுட்டியே.. நீ நல்லாருப்பியா..? உனக்கும் ஒரு அடங்காப்பிடாரிதான் பொண்டாட்டியா வரப்போறா.. அவகிட்ட நீ நல்லா அடிவாங்கப் போற.. இது என் சாபம்..!!"

என்று அசோக்கை கரித்துக் கொட்டிய கார்த்திக், எழுந்து தன் மனைவியின் பின்னால் ஓடினான். அவளை சமாதானம் செய்யும் குரலிலேயே..

"சித்தூ.. சித்தூம்மா.. பிப்ரவரி 24- தானடி..? போத்திஸ்ல போய் உனக்கு பொடவைலாம் வாங்கித்தந்தேனேடி..? அன்னைக்குத்தான..? சித்தூ.. சித்தூம்மா..!!"

என்று பரிதாபமாக கூவிக்கொண்டே சென்றான். இங்கே அசோக்கும், திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சித்ரா இருந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு சிரித்த திவ்யா, அவள் சென்றபின் தாராளமாக சிரித்தாள்.

"ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா... ஐயோ.. அசோக்.. முடியலைடா.. பாவம்டா..!!"

"ஹ்ஹாஹ்ஹா.. சரியான காமடி பீஸ்டி உன் அண்ணன்..!! பொங்கச்சோறு என்னைக்கு ஆக்குவாங்கன்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.. பொண்டாட்டி என்னைக்கு பொறந்தான்னு கேட்டா திருதிருன்னு முழிக்கிறான்..!!"

"ஐயோ நான் அவனை சொல்லலைடா.. நான் பாவம்னு சொன்னது உன் அக்காவை..!! ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா...!!" திவ்யா இன்னும் வாயெல்லாம் சிரிப்பாக சொல்ல, அசோக்குடைய சிரிப்பு இப்போது பட்டென்று நின்றது.

"என்னடி சொல்ற..?" என்றான் சற்றே இறுக்கமான குரலில்.

"ஆமாம்.. அவ மூஞ்சி போன போக்கை பார்த்தியா அசோக்..?? ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா... வெளக்கெண்ணை குடிச்ச தேவாங்கு மாதிரி..!! ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா...!!"

"ஏய்.. ஏஏஏஏய்ய்ய்.. நிறுத்து... நிறுத்துடி..!!" அசோக் சற்றே கடுப்பாக சொன்னான்.

"ஏன்..??" திவ்யா பட்டென சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்டாள்.

"ஏனா..?? உங்க ரெண்டு பேரையும் திருத்தவே முடியாதுடி..!!"

"நான் ஒரு ஆளுதான..? அது யாரு இன்னொருத்தரு..?"

"ம்ம்ம்..? என் அக்கா..!!" அசோக் சொல்ல, இப்போது திவ்யா கடுப்பானாள்.

"ப்ச்.. இங்க பாரு.. திட்டுறதா இருந்தா என்னை மட்டும் தனியா திட்டு.. அவ கூட சேர்த்து வச்சு திட்டாத..!! எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஆமாம்..!!"

"ஐயோ.. ராமா ராமா..!!"

அசோக் தலையை பிடித்துக் கொண்டான். 'திட்டு வாங்குவது கூட அவளுடன் சேர்ந்து வாங்க மாட்டேன்.. தனியாகத்தான் வாங்குவேன்..' என்கிறாளே என்று நொந்து போனான். அப்புறம் சில வினாடிகள் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். சில விநாடிகளிலேயே சூழ்நிலையின் இறுக்கம் சற்று தளர்ந்தது. இருவரும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டார்கள். திவ்யாதான் மெல்லிய குரலில் சொன்னாள்.

"ம்ம்ம்ம்... போடா.. நீ இல்லாம.. எனக்குத்தான் திருவிழா ரொம்ப போரடிக்க போகுது.."

"ம்ம்ம்.. அதுலாம் ஒண்ணுல்ல..!! ஆமாம்.. காலைல எத்தனை மணிக்கு பஸ்..?"

"எட்டரைக்கு..!! ஆனா.. நான் நைட்டுதான் போறேன்..!!"

"நைட்டா..? ஏன்..??"

"நாளைக்கு மேட்ச் இருக்கு அசோக்.. இன்டர் காலேஜ் டோர்ணமன்ட்.. ஃபைனல்..!! போன வருஷம் கப் மிஸ் பண்ணிட்டோம்.. இந்த தடவை விட கூடாது..!!"

"ஓ..!! சொல்லிட்டு இருந்தேல..? மறந்துட்டேன்..!! ஆமா.. அந்த மேட்ச்சுக்காக நீ தனியா நைட்-ட்ராவல் பண்ண போறியா..? பேசாம மேட்ச் கேன்சல் பண்ணிட்டு.. நீயும் காலைலயே இவங்க கூட போயிடேன் திவ்யா..??"

"இல்ல அசோக்.. நாளைக்கு நான் கண்டிப்பா விளையாடியே ஆகணும்.. நாளைக்கு மேட்ச் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்..!!" சொல்லும்போதே திவ்யாவின் குரலில் ஒருவித சோகம் தொணித்ததை அசோக்கால் உணர முடிந்தது.

"அ..அப்படி என்ன ஸ்பெஷல்..?"

"நாளைக்கு மேட்ச்தான்.. நான் விளையாடப் போற கடைசி மேட்ச்..!!" திவ்யா சொல்ல, அசோக் அதிர்ந்தான்.

"எ..என்ன சொல்ற திவ்யா..? கடைசி மேட்சா..? ஏன்..?"

"திவாகருக்கு நான் ஸ்போர்ட்ஸ்ல இருக்குறது பிடிக்கலை அசோக்.. 'அதெல்லாம் எதுக்கு.. விட்டுடேன்..?'னு சொன்னாரு..!! நான்தான் 'இந்த டோர்ணமன்ட் முடியட்டும்.. எல்லாம் ஸ்டாப் பண்ணிர்றேன் ..'னு சொல்லி வச்சிருக்கேன்..!!" திவ்யா சொல்ல சொல்ல, அசோக் கடும் எரிச்சலுக்கு உள்ளானான்.

"ஓ..!! அப்போ.. இதுக்கப்புறம் நீ விளையாட போறது இல்லையா..?"

"ம்ஹூம்..!! பாலை கைல கூட தொட்டு பார்க்க மாட்டேன்..!!"

"இதெல்லாம் என் மனசுக்கு சரியா படலை திவ்யா..!!"

"எது..?"

"அவருக்காக நீ உன் திறமையை குழி தோண்டி புதைக்கிறது..!! காதல்ன்றது காதலிக்கிறவங்களோட நிலைமையை மேல உயர்த்துறதா இருக்கணும்.. இப்படி கீழ புடிச்சு தள்ளி விடுறதா இருக்க கூடாது..!!"

"ச்சே..!! என்ன பேசுற நீ..? நான் அப்டிலாம் நினைக்கலை..!! எனக்கு புடிச்ச மாதிரி அவர் நடந்துக்குறதும்.. அவருக்கு புடிச்ச மாதிரி நான் நடந்துக்குறதும்.. அதுதான காதல்..? விட்டுக் கொடுக்குறதுதான லவ்வோட பேசிக்ஸ்..?? அதைத்தான் நான் செய்றேன்..!!" திவ்யா அழுத்தமாய் எதிர் வாதம் செய்ய, அசோக் சலிப்பாய் ஒரு பெருமூச்சு விட்டான்.

"சரி விடு.. நான் ஆர்க்யூ பண்ண விரும்பலை..!! ம்ஹ்ஹ்ம்.. இன்னும் அவரை நீ லவ் பண்றேன்னே சொல்லலை.. அதுக்குள்ளே அவருக்கு புடிச்ச மாதிரி உன்னை மாத்த ஆரம்பிச்சுட்டாரா..?"

"அப்டிலாம் இல்ல அசோக்.. அவரும்தான் எனக்காக அவரை மாத்திட்டு இருக்காரு..?"

"ஓ..!! என்ன பண்ணினார்..?"

"எனக்கு யெல்லோ பிடிக்காதுன்னு சொன்னேனா..? இனி யெல்லோ கலர்ல ட்ரெஸ் போட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்காரு..!!" திவ்யா சொல்ல, அசோக் எரிச்சலானான்.

"சுத்தம்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எனிவே.. ஆல் தி பெஸ்ட்..!! நான் சொன்னது நாளைக்கு மேட்சுக்கு..!!" சொல்லிவிட்டு அவன் எழ முயல,

"அசோக்.." திவ்யா அவனை அழைத்தாள்.

"ம்ம்.."

"நாளைக்கு எங்க காலேஜுக்கு மேட்ச் பார்க்க வர்றியா..? நாளைக்கு சாட்டர்டே.. உனக்கு லீவ்தான..?"

"இல்ல திவ்யா.. நான் ஆபீஸ் போகணும்..!! வேலை இருக்கு.. வர முடியாதுன்னு நெனைக்கிறேன்..!!"

"ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!! ஈவினிங்.. கொஞ்ச நேரம் மட்டும்..!! எனக்காக.. ப்ளீஸ்..!! நீ வந்தா.. கேலரில உக்காந்து நீ பாக்குறேன்னு தெரிஞ்சா.. நான் நல்லா விளையாடுவேன்..!! என்னோட லாஸ்ட் மேட்ச்.. நான் நல்லா விளையாடனும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. எனக்காக.. !!"

திவ்யா குழந்தை மாதிரி கெஞ்ச ஆரம்பிக்க, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் உற்ற தோழியையே.. உயிரில் கலந்த காதலியையே.. அன்பும், ஆசையுமாய் பார்த்தான். இதமான குரலில் சொன்னான்..!!

"ம்ம்ம்ம்... நான் மேட்ச் பார்க்க வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்டா..!! போதுமா..??" என்றவாறே திவ்யாவின் முன் நெற்றியில் வந்து விழுந்திருந்த கொத்து மயிர்களை, அழகாக பின்னுக்கு ஒதுக்கி விட்டான்.

"தேங்க்ஸ் அசோக்..!!" திவ்யா உற்சாகமாக துள்ளி குதித்தாள்.

"சரி வா.. இப்போ நம்ம வீட்டு மேட்ச்சை போய் வேடிக்கை பார்க்கலாம்..!!"

"நம்ம வீட்டு மேட்ச்சா..?"

"ம்ம்.. பாக்ஸிங்..!! என் அக்காவுக்கும், உன் அண்ணனுக்கும்..!!" சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட,

"ஹஹாஹாஹஹா..!!!" திவ்யா கலகலவென சிரித்தாள்.