நெஞ்சோடு கலந்திடு - பாகம் 8

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 8

Published on: 2025-06-08 02:10:06

Enjoying this post?
Save it to your favorites to easily find it later.
View Favorites

அத்தியாயம் 28

அசோக் அந்த ஷாப்பிங் மால் முன்பாக பைக்கை நிறுத்தி பார்க் செய்தான். கண்ணுக்கு கொடுத்திருந்த குளிர் கண்ணாடியை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான். ஹெல்மட் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு கலைந்திருந்த தலையை, பைக்கின் மிரர் பார்த்து சரி செய்துகொண்டான். நடந்து அந்த ஷாப்பின் மாலுக்குள் நுழைந்தான்.

ஐந்தடுக்குகள் கொண்ட அந்த ஷாப்பிங் மாலின் முதல் தளத்தில்தான் அவன் செல்ல வேண்டிய ஷாப் இருந்தது. வாட்ச் சேல்ஸ் அண்ட் ரிப்பேர் ஷாப்..!! அலுத்துப்போயோ, ஆற்றல் தீர்ந்து போயோ ஓடாமல் சுணங்கும் கடிகார முட்களை மீண்டும் ஓட வைக்கும் இடம்..!!

போன வருடம் அசோக்கின் பிறந்த நாளுக்கு திவ்யா ஒரு வாட்ச் பரிசளித்திருந்தாள். அவளுடைய பாக்கெட் மணி எல்லாம் சேகரித்து வைத்து, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அந்த வாட்சை வாங்கி அசோக்கிற்கு பரிசளித்திருந்தாள். அசோக்கிற்கு அந்த வாட்ச் என்றால் உயிர்..!! என்னதான் இருந்தாலும் அவனுடைய உயிர்க்காதலி அவனுக்கு அளித்த அன்பு பரிசல்லவா..?

திவ்யா அசோக்கை விட்டு பிரிந்துவிட்டது அந்த வாட்சுக்கும் தெரிந்து விட்டதோ என்னவோ..? இரண்டு நாட்களுக்கு முன்பாக.. ஓடமாட்டேன் என்று அடம் பிடித்து, இரண்டு முட்களும் அசையாமல் ஓரிடத்தில் நின்றுகொண்டன. பேட்டரி மாற்றிப் பார்த்தும் புண்ணியம் இல்லை..!! நேற்றுதான் அந்த கடையில் வந்து சரி செய்வதற்காக கொடுத்திருந்தான். இன்று மாலை வந்து திரும்ப வாங்கிக்க சொல்லியிருந்தான் அந்த கடையின் முதலாளி..!!

முதல் தளத்தை அடைந்து அந்தக் கடையை நெருங்கிய அசோக், கடும் எரிச்சலுக்கு உள்ளானான். காரணம்.. கடை பூட்டப்பட்டு கிடந்ததுதான்..!! 'ப்ச்.. இதுக்காகத்தான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்பி வந்தனா.. ? முடியாட்டா ஏன் கமிட் பண்ணிக்கிறானுக..? நாட்டுல ஏன் எவனுக்குமே பொறுப்புன்றதே இருக்க மாட்டேன்னுது..?' சலிப்படைந்தவனின் கண்களில் கடைக்கு வெளியே, சிவப்பு பெயிண்டில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் தென்பட்டது.

"கடை உரிமையாளர் சி.சிட்டி பாபு. தொடர்பு கொள்ள - XXXXXXXXXX"

'சிட்டி பாபுவாம் சிட்டி பாபு.. சரியான சீட்டிங் பாபு..' மனதுக்குள் அந்த கடை உரிமையாளரை திட்டிய அசோக், செல்போன் எடுத்து கதவில் எழுதியிருந்த அந்த நம்பருக்கு கால் செய்தான். நான்கைந்து ரிங் சென்றதும் கால் பிக்கப் செய்யப்பட்டது. அடுத்த முனையில் கசகசாவென்று ஒரே இரைச்சல்.

"ஹலோ.."

"ஹலோ.."

"நான் பேசுறது கேக்குதா ஸார்..?"

"கேக்குதுப்பா.. சொல்லு.."

"என் பேர் அசோக்.. ஒரு வாட்ச் ஒன்னு.. ரிப்பேர் பண்ண கொடுத்திருந்தேன்.. நேத்து.."

"சரி.. அதுக்கு என்ன இப்போ..?"

"என்ன இப்போவா..? இன்னைக்கு ஈவினிங் வந்து வாங்கிக்க சொல்லிருந்தீங்க ஸார்.. வந்து பாத்தா கடை அடைச்சு கெடக்கு.."

"ஏன் தம்பி.. இன்னைக்குனா இன்னைக்கேவா வந்து நிப்ப..? போயிட்டு நாளைக்கு வா.. கடை இன்னைக்கு லீவு..!!"

"லீவா..?? வெளையாடாதீங்க ஸார்.. வாங்க.. வந்து எடுத்துக் குடுங்க..!!"

"வரவா..? நான் இப்போ ஆதம்பாக்கத்துல இருக்கேன் தம்பி.. உடனே அங்க வர முடியாது..!!"

"என்ன ஸார் இப்படி சொல்றீங்க..? அது எனக்கு ரொம்ப முக்கியமான வாட்ச் ஸார்.. நீங்க சரி பண்ணாட்டா கூட பரவால.. உடனே வந்து எனக்கு எடுத்து குடுங்க..!!"

"ஏன் தம்பி.. வாட்ச்சதான ஒப்படைச்சுட்டு போன..? என்னமோ உன் வாழ்க்கையையே ஒப்படைச்சுட்டு போன மாதிரி இப்படி பதர்ற..? நாளைக்கு வந்து வாங்கிக்கப்பா..!!"

"இல்லை ஸார்.. உங்களுக்கு புரியலை.. எனக்கு அந்த வாட்ச் ரொம்ப முக்கியம்.. அதை பிரிஞ்சு நான் ஒருநாள் கூட இருந்தது இல்ல..!! ப்ளீஸ் ஸார்..!!"

"என்னப்பா நீ..? அவன் அவன் இங்க வாக்கப்பட்டு வந்தவளையே பிரிஞ்சு போய் உக்காந்திருக்கான்.. நீ வாட்சை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்ற..?"

"என்ன ஸார் சொல்றீங்க..?"

"பொண்ணு மேட்டரா..? உன் ஆளு உனக்கு வாங்கி கொடுத்ததா..?"

"ஆமாம்.. ஏன் கேக்குறீங்க..?"

"நெனச்சேன்.. நான் அப்போவே நெனச்சேன்..!!" அந்த ஆள் இப்போது பெரிதாக கத்தினான்.

"என்னாச்சு ஸார்.. ஏன் இப்போ டென்ஷனாகுறீங்க..?"

"நம்பாத தம்பி.. இந்த பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாத..!! நம்பினேன்னு வச்சுக்கோ.. என்னை மாதிரி இப்படி பார்ல உக்காந்து ஒண்டியா பாட்டில் போட உட்ருவாளுக..!!"

"கடையை அடைச்சுப்போட்டு.. பாருக்கு போயிருக்கீங்களா..?"

"பின்ன என்ன போருக்கா போயிருக்கேன்..? பாருக்குதான் தம்பி..!! ஹ ஹ ஹ ஹ.." அந்த ஆள் இப்போது அழ ஆரம்பித்தான்.

"ஸார்.. ஏன் ஸார் அழறீங்க..?"

"எ..என் பொண்டாட்டி.. என் பொண்டாட்டி.. என்னை விட்டு ஓடிப்போயிட்டா தம்பி..!!"

"ஐயையே.. என்ன ஸார்.. இதுலாம் எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..?"

"ஏன்.. சொன்னா என்ன..? ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. உனக்கு தெரிஞ்சா என்ன..? அவளுக்காக நான் காலநேரம் பாக்காம வாட்ச் கடைல கெடந்து ஒழைச்சேன்.. அவ என்னடான்னா எங்க காலனி வாட்ச்மேனை கரெக்ட் பண்ணிட்டு.. ஓடிப்போயிட்டா தம்பி..!!"

"ஸார்.. அழாதீங்க ஸார்.."

"அதான் சொல்றேன்.. இந்த பொண்ணுகளை நம்பாதீங்க.. நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாளுக..!! அவளுகளுக்கு செலவு பண்ற காசலாம் ஏதாவது அநாதை விடுதிக்கு டொனேஷனா குடுங்க.. கொஞ்சம் புண்ணியமாவது கெடைக்கும்..!!"

"ஐயையே.. என்ன ஸார் நீங்க.. முன்னப்பின்ன தெரியாத எங்கிட்ட வந்து.. அழுது பொலம்பிக்கிட்டு..? அழாதீங்க ஸார்.."

அசோக் அந்த சிட்டிபாபுவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய நம்பருக்கு இன்னொரு கால் வந்தது. புது நம்பராக இருந்தது. 'யார் இது..?' என்று ஓரிரு வினாடிகள் குழம்பினான். அப்புறம் சிட்டி பாபுவிடம்,

"ஸார்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் அப்புறமா உங்களை கூப்பிடுறேன்.."

"சரி தம்பி.. நான் சொன்னதை மட்டும் மறந்துடாதீங்க..!! பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!"

"சரி ஸார்.. நம்பலை..நம்பலை.."

அசோக் சிட்டிபாபுவின் காலை கட் செய்துவிட்டு, அடுத்த காலை அட்டன்ட் செய்தான்.

"ஹலோ.." என்றான்.

"அசோக் செல்லம்.." அடுத்த முனையில் குழைவாக ஒரு ஆண் குரல்.

"ஹலோ.. யாரு..?"

"யாருன்னு தெரியலையா செல்லம்.. ஹாஹா.. ஹாஹா.."

அடுத்த முனை சிரிக்க ஆரம்பித்ததும், இப்போது அசோக்கிற்கு தெளிவாக தெரிந்து போனது.. அது யாரென்று..!! திவாகர்..!!

"திவாகர்..!!"

"பரவாலையே.. கரெக்டா கண்டு பிடிச்சுட்ட..??"

"என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்..?"

"ஜஸ்ட் இப்போத்தான்.. திவ்யாவோட ஹேன்ட் பேக் திறந்து. அவ செல்போனை நோண்டி கண்டு பிடிச்சேன்..!!"

"ஓ.. சரி என்ன விஷயம்.. சொல்லுங்க..!!!"

"எனக்கு உன்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா இருக்குது..?? லாட்ஸ் அண்ட் லாட்ஸ் ஆஃப் தேங்க்ஸ்..!!"

"என்ன.. நக்கலா..??"

"நோ.. சீரியஸ்..!! திவ்யா எனக்கு கெடைப்பாளோ மாட்டாளோன்னு ரொம்ப கவலைல இருந்தேன் ராஜா.. நீ அடிச்ச கூத்துல.. நான்தான் கதின்னு என் காலுல விழாத குறையா எங்கிட்ட வந்து செட்டில் ஆகிட்டா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அசோக்.. என் மனசார சொல்றேன்.. ஃப்ரம் மை ஹார்ட்..!! ஹஹாஹஹாஹஹா...!!"

"ரொம்ப சிரிக்காதீங்க திவாகர்.. திவ்யாவுக்கு கூடிய சீக்கிரமே உங்களை பத்தி தெரிய வரும்..!!"

"ஹாஹா.. அது தெரியிறப்போ பாத்துக்கலாம் செல்லம்.. இப்போ என்ன அவசரம்..?? ம்ம்ம்ம்.. அப்புறம்..?? திவ்யாவை நீயும் லவ் பண்ணுனியா கண்ணா.. ம்ம்.? ம்ம்..? ஹஹாஹஹா..!! எவ்வளவு பழகிருக்கோம்.. எங்கிட்ட கூட நீ சொல்லலை பாத்தியா..? ஹஹாஹஹா..!!" திவாகரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பியது,
"திவாகர்.. உங்க நக்கலுக்குலாம் நான் ஆளு இல்ல.. எனக்கு வேற வேலை இருக்கு..!!"

"இருப்பா இருப்பா.. உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்..!!"

"என்ன..??"

"முன்னாடிலாம் நான்தான் திவ்யாகிட்ட கெஞ்சிட்டு இருப்பேன் அசோக்.. இப்போ என்னடான்னா.. அவ கெஞ்சுறாப்பா..!! நான் ஒன்னு சொன்னா.. அதை எப்படி விழுந்து விழுந்து பண்ணுறா தெரியுமா..?? எல்லாம் உன்னாலதான்..!! ம்ம்ம்ம்.. போற போக்கை பாத்தா.. எனக்காக என்ன வேணா செய்வா போல இருக்கு..!! என்ன வேணா..!!!" இரண்டாவதாக சொன்ன 'என்ன வேணா'விற்கு திவாகர் எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுக்க, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.

"இங்க பாருங்க திவாகர்.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க..!! நான் இப்போ அமைதியா இருக்குறதுக்கு ஒரே காரணம்.. திவ்யா மனசுல நான் இன்னும் மோசமானவனா போயிட கூடாதுன்னுதான்..!! அவளுக்கு உங்களால ஏதாவது கெடுதல் நடந்துச்சுன்னு வச்சுக்கோங்க.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!"

"ஹாஹா.. என்னடா கண்ணா பண்ணிடுவ..?"

"உங்க உயிரை பறிக்க கூட நான் தயங்க மாட்டேன்..!!"

"ஐயையோ.. எனக்கு பயத்துல உச்சா வந்துடுச்சே..!!!! ஹாஹாஹாஹாஹாஹா.. போடா டேய்..!! இந்த மிரட்டலை எல்லாம்.. எவனாவது கோயில் வாசல்ல உக்காந்து உண்டக்கட்டி துன்னுட்டு இருப்பான்.. அவன்ட்ட போய் உடு ராசா.. ஐ'ஆம் திவாகர்..!!"

"உசுருன்றது உனக்கும் உண்டக்கட்டி துன்றவனுக்கும் ஒண்ணுதான் ராசா.. கத்தியை எடுத்து சொருகுனா.. நீயும் செத்து போவேல..?"

"ஹாஹா.. சரி சரி.. இப்போ ஏன் தேவையில்லாம டென்ஷன் ஆகுற..? நான் என்ன இப்போவேவா அவளை அந்த 'என்னவேணா' செய்ய சொல்லப் போறேன்..? நல்ல ஜாலி மூடுல இருந்தேன்.. நீயும் டென்ஷனாகி என்னையும் டென்ஷனாக்கிட்ட..!! பாரு.. நான் எதுக்கு கால் பண்ணினேன்ற மேட்டரையே மறந்துட்டேன்.."

"எதுக்கு கால் பண்ணுனீங்க..?"

"உனக்கு ஒரு ஷோ காட்டலாம்னுதான்.."

"என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை.."

"அப்படியே உன் மொகறையை ரைட்ல திரும்பி.. கிரவுண்ட் ப்ளோரை பாரேன்.."

அசோக் அவன் சொன்னதை செய்ய, அங்கே கையை உயர்த்தி ஆட்டியவாறு திவாகர் காட்சியளித்தான். அந்த மாலின் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த அந்த திறந்தவெளி உணவகத்தில்..!! அவன் முன்பிருந்த வெண்ணிற டேபிளில்.. மூன்று பிளேட்டுகளில்.. ஏதோ உணவுப்பண்டங்கள்..!! அவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். அருகில் திவ்யாவை காணவில்லை.

"ஓ.. இங்கதான் இருக்கீங்காளா..?"

"ஆமாம்.. நீ அந்த வாட்ச் ஷாப்புக்கு வந்ததுல இருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்டா கண்ணா..!!"

"திவ்யா..?"

"அவளோட இதுல மசாலா கொட்டிப் போயிடுச்சு.. ஹஹாஹஹா..!! துப்பட்டால.. துப்பட்டால.. நீ தப்பா நெனச்சுக்காத.. ஹஹாஹஹா..!! அதை வாஷ் பண்ண போயிருக்கா..!!"

"ச்சே.. நீங்கல்லாம் மனுஷனே இல்ல திவாகர்.."

"ஹாஹா.. தேங்க்ஸ் அசோக் செல்லம்..!! சரிசரி.. நான் காலை கட் பண்றேன்.. நீ எங்கயும் போயிடாத.. அங்கேயே நில்லு..!! உன் ஆளு மேல கை போடுறேன்.. கண்ணு குளிர பாத்துட்டு போ..!!"

சொன்ன திவாகர் காலை கட் செய்தான். அவன் சொன்னதை புரிந்து கொள்வதற்கே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தது. அதற்குள் துப்பட்டா வாஷ் செய்ய சென்றிருந்த திவ்யா திவாகருக்கு அருகில் வந்து அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே திவாகர் அவளுடைய தோள் மீது கைபோட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளை இறுக்கிக்கொண்டு ஓரக்கண்ணால் அசோக் அந்த காட்சியை பார்க்கிறானா என்று கவனித்தான்.

அவ்வளவுதான்.. அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக்கிற்கு உடலும், மனதும் தீப்பற்றி எரிந்தது போல இருந்தது. துடித்துப் போனான். அவனுடைய கண்கள் பொலபொலவென நீரை கொட்ட ஆரம்பித்தன. மேலும் அந்த காட்சியை காண சகியாமல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். 'ச்சே.. என் தேவதையை யாரோ ஒரு கயவன் என் கண் முன்பே அணைத்துக் கொள்கிறான்.. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே..? எனக்கு ஏன் இந்த தண்டனையை கொடுத்தாய் இறைவா.. எனக்கு ஏன் இந்த கையாலாகாததனத்தை கொடுத்தாய்..? ஏன் இப்படி செய்கிறார்கள் இவர்கள்.. ஒரு பொது இடத்தில்.. இப்படி..? ச்சே.. திவ்யாவுக்கும் இதில் சம்மதம்தானா..?'

அசோக் அழுதான்..!! அவனை கடந்து சென்ற இரு கல்லூரி பெண்கள் அவனையே வித்தியாசமாக திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார்கள். அசோக் அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க விரும்பவில்லை. விறுவிறுவென நடந்து அந்த தளத்தின் ஒரு முனைக்கு ஓடினான். 'பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!' சிட்டிபாபு சற்றுமுன் கூறிய வார்த்தைகள், அவனுடைய காதுகளில் கொடூரமாய் மோதி அவனை விரட்டி அடித்தன. அங்கிருந்த ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டான். கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மனம் விட்டு அழுதான்.

ஓரிரு நிமிடங்கள்..!! அழுது முடித்ததும்.. முகத்தில் நன்றாக நீர் இறைத்து கழுவிக் கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அதற்குள்ளாகவே அவனது கண்களும், முகமும் வீங்கிப் போயிருந்தன. உதடுகள் இன்னும் படபடத்துக் கொண்டிருந்தன. யாராவது பார்த்தால் அழுதிருக்கிறான் என்று உடனடியாய் புரிந்து கொள்வார்கள். ஏதோ யோசனை வந்தவனாய் தன் பாக்கெட்டில் இருந்த குளிர் கண்ணாடியை எடுத்து கண்களுக்கு பொருத்தினான். உதடுகளை மடித்து உள்ளே வைத்துக் கொண்டான். இப்போது அவனது முகம் சலனமற்றுப் போய் காணப்பட்டது. அவனுக்கு திருப்தியாக இருந்தது.

ரெஸ்ட் ரூம் விட்டு வெளியே வந்தான். படியிறங்கி கீழ் தளத்துக்கு சென்றான். வேகமாக பார்க்கிங் ஏரியா நோக்கி நடையை போட்டான். அவன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்தை நெருங்கியவன், ஒரு சிறிய அதிர்ச்சிக்கு உள்ளானான். அவன் பைக்குக்கு அருகே திவ்யா நின்றிருந்தாள். அவனுடைய பைக்கை ஒரு கையால் தடவிக் கொண்டிருந்தாள். 'இவள் என்ன செய்து கொண்டிருகிறாள் இங்கே..?'

அசோக்கிற்கு ஏனோ இப்போது திவ்யாவின் மீது கொள்ளை கொள்ளையாய் ஒரு இனம்புரியாத எரிச்சல்..!! ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல், அவளை நெருங்கி முகத்தையும் குரலையும் இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

"எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் வழி விடுறீங்களா..? பைக்கை எடுக்கணும்..!!"

 


அத்தியாயம் 29

"அண்ணா.."

"ம்ம்ம்.."

"அண்ணா.."

"சொல்லு அசோக்.."

"அந்த நாயி என் முன்னாடியே திவ்யா மேல கை போட்டுட்டான்ணா.." அசோக் அழுகிற குரலில் சொல்ல,

"ம்ம்ம்.." செல்வா அசுவாரசியமாய் கேட்டுக்கொண்டார்.

அசோக் இப்போது பிளாஸ்டிக் கப்பில் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து கடகடவென தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான். ஒரு கை நிறைய சிப்சை அள்ளி வாயில் போட்டு கரகரவென பற்களால் அறைத்தான். விழுங்கினான். 'ஆஆஆவ்..!!' என்று பெரிதாக ஒரு ஏப்பம் விட்டான். கீழே கிடந்த கிங்ஸ் பாக்கெட் திறந்து ஒரு சிகரெட் எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். தலை நிலைகொள்ளாமல் தள்ளாட, விரல்கள் கட்டுப்பாடு இழந்து தடுமாற, மிகவும் சிரமப்பட்டு அந்த சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து வெளியே ஊதியவன், மீண்டும் ஆரம்பித்தான்.

"அண்ணா.."

"ம்ம்ம்.."

"அண்ணா.."

"சொல்லு அசோக்.."

"அந்த நாயி என் முன்னாடியே திவ்யா மேல கை போட்டுட்டான்ணா.." செல்வா இப்போது சற்றே எரிச்சலுற்றார்.

"ஐயையையையே.. வந்ததுல இருந்து ஆயிரம் தடவை சொல்லிட்ட அசோக்.. விடு அதை..!!"

"என்னண்ணா நீங்களே இப்படி சொல்றீங்க..? எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா..?"

"அதுக்காக சொல்லலை அசோக்.. அதையே நெனச்சு பொலம்பிட்டு இருந்தா.. வேதனை இன்னுந்தான் அதிகமாகும்.. அந்தப் பேச்சை விடு..!!"

"என்னால முடியலைன்னா.. நெஞ்செல்லாம் அப்படியே எரியுது.. !! 'உன் ஆள் மேல கை போடுறேன் பாருடா'ன்னு சொல்லிட்டு அவன் கை போடுறான்.. இவளும் ஈஈ'ன்னு இளிச்சுட்டு கம்முனு இருக்குறாண்ணா..!!"

"ம்ம்ம்.."

"நான் அவளை எவ்வளவு சின்சியரா லவ் பண்ணினேன் தெரியுமாண்ணா.. அவளுக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா..?"

"எல்லாம் எனக்கு தெரியும் அசோக்.. திவ்யாவுக்கும் அது தெரியும்..!! அவ கூடிய சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!!"

"இல்லண்ணா.. அவ்ளோதான்.. எல்லாம் போச்சு.. என் வாழ்க்கையே நாசமா போச்சு..!! இவ்வளவு நாளா அவகூட பேசிட்டு இருக்குறப்போவே அவளுக்கு என்னை பத்தி புரியலை.. இனிமேலா புரியப் போகுது..? சிட்டிபாபு அப்போவே சொன்னாரு..!!"

"சிட்டிபாபுவா..? அது யாரு..?"

"அவர் பெரிய ஞானிண்ணா..!!"

"ஓஹோ..? என்ன சொன்னாரு அவரு..?"

"பொண்ணுகளை நம்பாதீங்கடா.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்கன்னு சொன்னாரு..!!"

"நல்ல தத்துவந்தான்..!!"

"நான்தான் அதுபுரியாம.. அவளை நம்பித் தொலைச்சேன்.. அவ எனக்கு சூப்பு கொடுத்துட்டு போயிட்டா..!!"

"அவ வருவா அசோக்.. கவலைப்படாத..!!"

"இல்லண்ணா.. அவள்லாம் வரமாட்டா.. அவ்ளோதான்..!!"

"சரி வராட்டா போறா.. விடு..!! அவ இல்லைன்னா என்ன.. உனக்கு வேற பொண்ணா கெடைக்காது..?"

"ஓஹோ..?? திவ்யா இல்லைன்னா.. திரிஷான்றிங்களா..??"

"ஆமாம்.."

"நோ..!! எனக்கு திரிஷாலாம் வேணாம்.. எனக்கு என் திவ்யாதான் வேணும்..!! ஆனா.. அது அப்புறம்.. இப்போ எனக்கு தீர்த்தம்தான் வேணும்..!!"

சொன்ன அசோக் பாதி காலியிருந்த அந்த விஸ்கி ஃபுல் பாட்டிலை கையிலெடுக்க, செல்வா அவசரமாய் அதை பறித்தார்.

"ம்ஹூம்.. குடிச்சது போதும்.. அவளை நெனச்சு நீ உன் உடம்பை கெடுத்துக்குற.. வேணாம்..!!"

"அண்ணா.. குடுங்கண்ணா.."

"சொன்னா கேளு அசோக்.. போதும்.. உனக்கு ஓவராயிடுச்சு.. உளற ஆரம்பிச்சுட்ட..!!"

"ப்ளீஸ்ண்ணா.."

"முடியாது..!!"

அவர்கள் அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான், அறை வாசலுக்கருகில் இருந்து அந்த மென்மையான குரல் கேட்டது.

"எ..என்னங்க.. ஒரு நிமிஷம்.."

அசோக்கும் செல்வாவும் ஒரே நேரத்தில் வாசலை திரும்பி பார்த்தார்கள். எண்ணெய் மினுக்கும் தலையும், எடுப்பாக சுற்றப்பட்ட தாவணியும், கருத்த தேகமும், களையான முகமுமாக அந்தப் பெண் நின்றிருந்தாள். கண்மணி..!!! அவளை பார்த்ததும் கையில் விஸ்கி பாட்டிலுடன் இருந்த செல்வா அப்படியே பதறினார். உளறினார்.

"எ..என்னம்மா.. இந்த நேரத்துல..?"

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. வாங்க.."

"இரு.. இரு.. வந்துட்டேன்.."

செல்வா விஸ்கி பாட்டிலை அசோக்கிடம் ஒப்படைத்துவிட்டு, வாசலை நோக்கி ஓடினார். அவரும், அந்த கண்மணியும் மொட்டை மாடியின் அடுத்த மூலையை நோக்கி நடக்க, அவர்கள் செல்வதையே அசோக் தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தான். போகையிலேயே..

"நீங்களுமா..?" அந்தப்பெண் கேட்டது.

"ஐயையோ.. நான் இல்ல.. அவன் மட்டுந்தான்.. நான் சும்மா வேடிக்கை பார்ப்பேன்.." செல்வா பதறினார்.

இருவரும் தூரமாக போய் நின்றுகொண்டு ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். விழிகள் சுழல.. தலை தள்ளாட.. அசோக் கொஞ்ச நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் சின்னதாகிப்போன சிகரெட்டை நசுக்கி அணைத்துவிட்டு, விஸ்கி பாட்டிலின் கழுத்தை திருகினான். ஆறாவது ரவுண்டை ஆரம்பித்தான். அவ்வப்போது செல்வாவையும், கண்மணியும் எட்டி பார்த்துக் கொண்டான்.

அவர்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசியிருப்பார்கள். அப்புறம் அந்தப்பெண் கிளம்பியது. போகும் முன் அறைக்குள் எட்டிப்பார்த்து 'வர்றேண்ணா' என்று அசோக்கிடமும் சொல்லி சென்றது. 'வாம்மா தங்கச்சி..' என்று அசோக்கும் உளறினான். உள்ளே வந்த செல்வா கேட்டார்.

"என்ன.. அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுட்டியா.. சொல்ற பேச்சையே நீ கேட்கவே மாட்டேன்ற அசோக்..!!"

"ஐயோ.. அது கெடக்குது விடுங்க..!! என்னண்ணா நடக்குது இங்க..?"

"எ..என்ன நடக்குது.. ஒன்னும் நடக்கலை.." செல்வாவிடம் இப்போது ஒரு தடுமாற்றம்.

"அந்தப்பொண்ணு ஏன் இங்க வந்துட்டு போகுது..?"

"அ..அது.. அது சும்மா வந்துட்டு போகுது.."

"இல்ல.. என்னமோ இருக்குது.. என்னன்னு சொல்லுங்க.."

"ஒண்ணுல்ல அசோக்.. நீ சாப்பிடு.. நான் இன்னொரு நாள் சொல்றேன்.."

"இன்னொரு நாளா..? இப்போவே சொல்லுங்கண்ணா.. அந்த இன்னொரு நாள் வருதோ வரலையோ..?"

"ஏன் அசோக் இப்படிலாம் பேசுற..?"

"அப்போ என்ன மேட்டர்னு சொல்லுங்க..!!"

அசோக் செல்வாவை விடாமல் துளைத்தெடுத்தான். செல்வா கொஞ்ச நேரம் தயங்கினார். அப்புறம் தொண்டையை கனைத்துக்கொண்டு மெல்லிய குரலில் சொன்னார்.

"நானும் கண்மணியும் கல்யாணம் பண்ணிக்க போறோம் அசோக்.."

"அண்ணா.. என்னண்ணா சொல்றீங்க.. நெஜமாவா..?" அசோக் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் கேட்டான்.

"ஆமாம் அசோக்.. நாளைக்கு அவளோட மாமா ஒருத்தர் ஊர்ல இருந்து வராராம்.. அவர் என்னை பார்த்து பேசணும்னு ஆசைப்படுறாராம்.. அதான் காலைல வீட்டுக்கு வாங்கன்னு.. இப்போ வந்து சொல்லிட்டு போறா..!!"

"என்னண்ணா நீங்க.. எவ்வளவு சந்தோஷமான விஷயம்.. ஏண்ணா இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலை..?"

"ஒருவாரமா இந்த மேட்டரை உன்கிட்ட சொல்லனும்னுதான் நானும் நேரம் பாத்துட்டு இருந்தேன் அசோக்.. ஆனா நீ எந்த நேரமும் திவ்யாவை நெனச்சுக்கிட்டு சோகமா இருக்குற.. அதான் சொல்லலை.."

"இதுல என்னண்ணா இருக்கு..?"

"எப்படி அசோக்.. நீ கஷ்டத்துல இருக்குறப்போ.. நான் எப்படி உன்கிட்ட வந்து 'நான் சந்தோஷமா இருக்குறேன்'னு சொல்ல முடியும்..?"

"அடப்போங்கண்ணா.. எனக்கு என்ன கஷ்டம்.. நான் நல்லாத்தான் இருக்குறேன்..!! அதுசரி.. கண்மணியை எப்படி சம்மதிக்க வச்சிங்கன்னு சொல்லவே இல்லையே..?"

"கண்மணி ரொம்ப பாவம் அசோக்.."

"என்னண்ணா சொல்றீங்க..?"

"அவ சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி.. புருஷனை இழந்தவ அசோக்..!! பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.. ஒரே வருஷத்துல அவ புருஷன் மஞ்சகாமாலை வந்து இறந்து போயிட்டான்..!! கிராமத்துல இருக்குறவங்க 'அதிர்ஷ்டம் கெட்டவ.. புருஷனை முழுங்கிட்டா..' அப்படின்னு கண்மணியை பேசிருக்காங்க.. அந்த பேச்சை தாங்கிக்க முடியாம.. எல்லாத்தையும் காலி பண்ணிட்டு இங்க வந்து மெஸ் ஆரம்பிச்சிருக்காங்க..!!"

"ஓ..!!"

"எனக்கே இப்போ ரெண்டு வாரம் முன்னாடிதான் தெரியும்..!! அவளே அடக்கிக்க முடியாம.. எல்லாத்தையும் எங்கிட்ட கொட்டிட்டா..!! நான்தான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிருகேன்ல.. அவளுக்கு ஆரம்பத்துல இருந்தே என் மேல ப்ரியம் அசோக்.. ஆனா.. அவ நெலமையை நெனச்சுக்கிட்டு.. அவளோட காதலை என்கிட்டே இருந்து மறைச்சுட்டா..!! போன வாரம் எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சு.. அவ அம்மாகிட்டயே போய் நேரடியா பேசிட்டேன்.. ஆரம்பத்துல அவங்க தயங்குனாங்க.. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க..!! அடுத்த மாசம் கல்யாணம் வச்சுக்கலாம்னு பேசி முடிச்சிருக்கோம்..!!"
"ம்ம்ம்.. இவ்வளவு மேட்டர் நடந்திருக்கு.. எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே..?"

"என்ன அசோக்.. நான்தான் ஏன் சொல்லலைன்னு சொன்னேன்ல..?"

"ம்ம்ம்.. அந்த கண்மணியை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குண்ணா.. உங்க காதலை புரிஞ்சுக்கிட்டு உங்ககிட்ட வந்து சேர்ந்துட்டாளே.. ரியல்லி கிரேட்ணா..!! எனக்குந்தான் ஒருத்தி வந்து வாச்சிருக்குறாளே..? லூசு சிறுக்கி.. என்ன பண்ணு.. எவ்வளவு சொல்லு.. ஒன்னும் அவ மண்டைல ஏறாது..!!"
"விடு அசோக்.. அதெதுக்கு இப்போ..?"

"சரி விடுங்க..!! ரொம்ப ஹெப்பியான ந்யூஸ் சொல்லிருக்கீங்க.. ஐயோ.. இப்போ இதை நாம செலப்ரேட் பண்ணியே ஆகணுமே..!! அந்த பாட்டிலை எடுங்கண்ணா..!!"

"சொன்னா கேளு அசோக்.. போதும்.."

"ப்ளீஸ்ண்ணா.."

"ம்ஹூம்.. நான் அல்லோ பண்ண மாட்டேன்.."

"சரி.. பாட்டில்தான் தர மாட்டேன்றீங்க.. பாட்டாவாது போடுங்க.... எனக்கு டான்ஸ் ஆடனும் போல இருக்கு.."

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. பத்துநாளா அந்த பாட்டை திருப்பி திருப்பி போட்டு.. சிடியே தேஞ்சு போச்சு அசோக்.."

"பரவாலண்ணா போடுங்க.. ப்ளீஸ்.."

செல்வா அந்த சிடியை எடுத்து செருகி, பாடல் செலக்ட் செய்து வால்யூம் அதிகரித்தார். அசோக் அந்தப் பாடலின் தாளத்துக்கு தகுந்தவாறு குத்தாட்டம் போட ஆரம்பித்தான்.

"காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெண்ணீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல"

கொஞ்ச நேரம் அறைக்குள்ளேயே ஆடியவன், அப்புறம் வெளியே ஓடினான். பதறிப்போன செல்வா அவனுக்கு பின்னாலேயே ஓடினார். அறைக்கு வெளியில் எரிந்த குண்டு பல்பு, அந்த மொட்டை மாடி முழுதும் வெளிச்சம் பரப்பியிருந்தது. அசோக் மொட்டை மாடியின் மையமாக சென்று நின்றுகொண்டு, மனம் போன போக்கில் ஆட ஆரம்பித்தான். செல்வா அவனை சமாளித்து உள்ளே அழைத்து செல்ல முயன்றார்.

"அசோக்.. என்ன அசோக் இது... உள்ள வா.."

"விடுங்கண்ணா.. நான் டான்ஸ் ஆடனும்.."

"ஆடு.. ரூமுக்குள்ள வந்து ஆடு.."


"இல்ல இல்ல.. நான் இங்கதான் ஆடுவேன்.."

செல்வா எவ்வளவோ முயன்றும் அசோக் கேட்காமல் அடம்பிடித்து, அங்கேயே நின்று ஆடிக்கொண்டிருந்தான். செல்வாவும் ஒரு கட்டத்தில் சலித்துப் போய் அவனை ஆடட்டும் என்று விட்டுவிட்டார். கைகளை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டார். காதல் வேதனை தாங்காமல், கையை காலை அசைத்து குத்தாட்டம் போடுகிற அசோக்கையே, கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அத்தியாயம் 30

சித்ரா அப்போதுதான் சமையலை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். 'அவரும் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலை.. இந்த திவ்யா கழுதையும் இன்னும் ஆளைக்காணோம்..' என்று சலிப்பாக மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். ஆண்பாவம் பார்க்கலாம் என்று டிவியை போட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பார்த்திருப்பாள். அதற்குள் அவளது செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது. அப்பாதான் ஊரில் இருந்து கால் செய்தார்.

"ஹலோ.. சொல்லுங்கப்பா.."

"ஹலோ.."

"ம்ம்.. சொல்லுங்கப்பா.."

"ஹலோ.. நீ பேசுறது கேக்கலைம்மா.. நான் பேசுறது கேக்குதா..?"

"ஒரு நிமிஷம் இருங்கப்பா.. வெளில வரேன்.." சித்ரா செல்போனில் சிக்னல் ஐகானை கவனித்துக்கொண்டே, கதவை திறந்து வீட்டுக்கு வெளியே வந்தாள்.

"ம்ம்.. சொல்லுங்கப்பா.. இப்போ கேக்குதா..?"

"ம்ம்.. இப்போ கேக்குதும்மா.."

"சொல்லுங்கப்பா.. நல்லாருக்கீங்களா.. அம்மா நல்லாருக்காங்களா..?"

"நாங்க நல்லா இருக்குறது இருக்கட்டும்.. இந்த அசோக்கு பயலுக்கு என்னாச்சு..?"

"ஏன்ப்பா.. என்ன பண்ணுனான்..?"

"வாரம் ஒரு தடவையாவது ஃபோன் பண்ணுவான்.. ரெண்டு வாரமா அதுவும் பண்ணலை.. நான் பண்ணுனாலும் எடுக்கவே மாட்டேங்குறான்.. சாயந்திரம் ஃபோன் பண்ணினேன்.. எடுத்தான்.. ரெண்டு வார்த்தைதான் பேசுனான்.. எப்படிடா இருக்கேன்னு கேட்டேன்.. படக்குன்னு கட் பண்ணிட்டான்..!! இப்போ அரை மணிநேரமா அடிச்சு அடிச்சு பாக்குறோம்.. எடுக்கவே மாட்டேன்றான்..!! இப்போ அடிச்சா சுச் ஆப்புன்னு வருது..!! ஏன் இப்டிலாம் பண்ணுறான்.. என்னம்மா ஆச்சு அவனுக்கு..??"

"அது.. அது வந்து.."

"சொல்லும்மா.. என்னாச்சு..??"

"ஒன்னுல்லப்பா.. அவன் ஆபீஸ்ல ஏதோ பிரச்னைன்னு சொல்லிட்டு இருந்தான்.. அதான் அப்படி இருக்கான் போல.."

"என்ன பிரச்னையாமாம்..?"

"தெரியலைப்பா.. நான் கேட்டுக்கலை..!!"

"என்னம்மா நீ.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்குற..?" அவர் சித்ராவை திட்டிக் கொண்டிருக்கும்போதே, லிஃப்ட் கதவு திறந்து கொள்ள திவ்யா வெளிப்பட்டாள்.

"ஐயோ.. அப்டிலாம் இல்லப்பா.."

"உன்னை நம்பித்தான அவனை அங்க விட்டுருக்கோம்..? அக்கா இருக்கா.. அம்மா மாதிரி பாத்துப்பான்னுதான அனுப்பி வச்சோம்..?"

"ஆமாம்ப்பா.."

"அப்புறம் நீயே இப்படி சொன்னினா..? அவனுக்கு எதுனா பிரச்னைன்னா.. மொதல்ல நீயே அதை சரி பண்ணிருக்கணும்..? உன்னால முடியலைன்னா.. எங்கிட்டயாவது சொல்லிருக்கணும்..!! எதுவுமே பண்ணலைன்னா எப்படி..?"

திவ்யா சித்ராவை ஏறிட்டு கூட பார்க்காமல், தலையை குனிந்தவாறே அவளை கடந்து சென்றாள்.

"இல்லப்பா.. நான்.."

"நீ எதுவும் சொல்ல வேணாம் சித்ரா.. போய் அவன்கூட பேசு.. அவனுக்கு என்ன பிரச்னைன்னு பாரு.. உன்னால முடியலைன்னா அப்பாக்கு போன் அடி.. புருஷன், நாத்தனார்னு அவுகளையே கவனிச்சுட்டு இருக்காத.. தம்பியையும் கொஞ்சம் பாத்துக்க.."

"ம்ம்.. சரிப்பா.."

"மொதல்ல அவனை போன் அடிக்க சொல்லு.. உன் அம்மா இங்க கெடந்து பொலம்பிட்டு இருக்கா.. 'என் புள்ளைக்கு என்னாச்சோ.. ஏதாச்சோ'ன்னு.. 'அழுவாதடி.. அவனுக்கு ஒன்னும் ஆவாது'ன்னு சொன்னாலும்.. கேட்டுத் தொலைய மாட்டேன்றா.. எழவெடுத்தவ..!! போய் உடனே அவனை போன் அடிக்க சொல்லு..!!"

"சரி சொல்றேன்.."

"வச்சிடவா..?"

"ம்ம்ம்.."

சித்ரா இப்போது சற்றே எரிச்சலுற்றாள். 'இந்த அசோக் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்..? அப்பாவிடம் இப்படி திட்டு வாங்க வைத்துவிட்டான்..? அந்த திவ்யா போய் தொலைந்தால்தான் என்ன..? வேறு பொண்ணா கிடைக்காது இவனுக்கு..? ச்சே.. எல்லாம் என் நேரம்.. எனக்குன்னு வந்து வாச்சிருக்குதுக பாரு எல்லாம்..!!'

உடனடியாய் அசோக்கை சென்று பார்க்கவேண்டும் என்று சித்ராவிற்கு தோன்றியது. அடுத்த முறை அப்பாவிடம் இருந்து கால் வந்தால், இவ்வளவு பொறுமையாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். திவ்யாதான் வந்துவிட்டாளே.. கதவை கூட சாத்தாமல்.. காலில் மட்டும் செருப்பை அணிந்து கொண்டு சித்ரா கிளம்பி விட்டாள்.

ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த தெருவில் தம்பி வசிக்கும் வீட்டை சென்றடைந்தாள். பக்கவாட்டில் தெரிந்த படிக்கட்டை அடைந்து பொறுமையாக மேலேறினாள். மொட்டை மாடியை அடைந்தவள், அங்கே தன் தம்பி நின்றிருந்த கோலத்தை கண்டதும் அப்படியே அதிர்ந்து போனாள்.

அறைக்கு உள்ளே ஏதோ பாட்டு ஓடிக்கொண்டிருக்க, வெளியே அசோக் பைத்தியக்காரன் மாதிரி ஆடிக் கொண்டிருந்தான். செல்வாவோ கைகளை கட்டி சுவற்றில் சாய்ந்தவாறு அவன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். உடன் பிறந்த தம்பியை அந்த கோலத்தில் கண்டதும், சித்ராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினாள்.

"டேய்.. அசோக்.. என்னடா பண்ணிட்டு இருக்குற..?"

"ஹேய்.. டான்ஸ்க்கா.. தெரியலை..?"

"என்ன செல்வாண்ணா.. இவன் பாட்டுக்கு இப்படி ஆடிட்டு இருக்கான்.. நீங்களும் பாத்துட்டு இருக்கீங்க..?"

"நான் சொன்னேன்மா.. கேக்க மாட்டேன்றான்.."

"டேய்.. ஆடுனது போதும் நிறுத்துடா.." சித்ரா சென்று அசோக்கின் கைகளை பற்ற,

"விடுக்கா.. நான் அப்படித்தான் ஆடுவேன்..!! அண்ணா.. இன்னும் கொஞ்சம் சவுண்டு வைண்ணா.."

"அசோக்.. இப்போ ரூமுக்குள்ள போகப் போறியா இல்லையா..?"

"முடியாது.. என்ன பண்ணுவ..?"

"உள்ள போடா.." அவள் கத்தினாள்.

"ம்ஹூம்.."

அவ்வளவுதான்..!! சித்ரா பொறுமை இழந்தாள்..!! அசோக்கின் கன்னத்திலேயே 'பளார்.. பளார்..' என அறைந்தாள்.

"ஐயோ.. என்னம்மா நீ.. விடும்மா.. அடிக்காத அவனை.." செல்வா வந்து சித்ராவை தடுக்க முயன்றார்.

"விடுங்க செல்வாண்ணா.. என்ன நெனச்சுட்டு இருக்குறான் இவன்..?"

செல்வாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சித்ரா அசோக்கின் கன்னத்தில் இன்னும் ரெண்டு அறை விட்டாள். இப்போது அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அழுதுகொண்டே பெரிய குரலில் கத்தினான்.

"அடிக்கா.. அடிச்சே என்னை கொன்னுடு.. நான் நிம்மதியா செத்து போயிடுறேன்.." அசோக் கத்த, சித்ரா இப்போது ஸ்தம்பித்து போனாள்.

"ஏண்டா இப்படி எல்லாம் பண்ற..?"

"என்னால முடியலைக்கா.."

"இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இந்த ஆட்டம் ஆடுற..?"

"இன்னும் என்ன ஆகணும்..?"

"என்ன ஆச்சுன்னு சொல்லு.."

"இன்னைக்கு நான் ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்க்கா.. இவளும் அந்த திவாகரும் அங்க சாப்பிட வந்திருந்தாங்க.. நான் அவங்களை கவனிக்கலை.. அந்த பாடு என் செல்லுக்கு கால் பண்ணி சொல்லுறான்க்கா.. 'உன் ஆளு மேல கையை போடப் போறேன்.. பாத்துட்டு போடா பன்னாடை'ன்னு.. என் முன்னாடியே அவன் அவ மேல கைபோட்டு என்னை நக்கலா பாக்குறான்க்கா.. என்னால ஒரு மசுரும் புடுங்க முடியலை..!! நான்லாம் ஏன் இன்னும் இருக்குறேன்..?"

"ச்சை.. என்ன பேசுற நீ..? அவ போனா.. போய்த் தொலையுறான்னு விட மாட்டியா..? அவளையே நெனச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை பாழாக்கிப்பியா..?"

"உனக்கு என்ன..? உன் கூந்தல்ல இருந்து எதோ வுழுந்துட்ட மாதிரி சொல்வ..? நாந்தான அவளை லவ் பண்ணினேன்.. என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்..??"

"என்ன உன் கஷ்டம்.. பெரிய கஷ்டம்..? நான்தான் ஆரம்பத்துல இருந்தே படிச்சு படிச்சு சொன்னேனடா.. அவ உனக்கு வேணாம் வேணாம்னு.. அறிவில்லாம காதலிச்சுட்டு.. இப்போ அவஸ்தைப்படுற..!! சரி.. அது கெடக்கட்டும்.. !! செல்லை எதுக்கு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குற.. அப்பா கால் பண்ணி கத்துறாரு..!!"

"அவர் தேவையில்லாம சும்மா சும்மா கால் பண்றாருக்கா.. அவன் அவன் இங்க நொந்து போயி கெடக்குறான்.. அவரு கால் பண்ணி 'நல்லா இருக்கியா நல்லா இருக்கியா'ன்னு நாப்பது தடவை கேக்குறாரு.. அதான் ஆஃப் பண்ணி போட்டேன்..!! என்னை டார்ச்சர் பண்ண வேணாம்னு அவர்கிட்ட கொஞ்சம் சொல்லி வையி..!!"

"அப்படியே அறைஞ்சன்னா..?? அவர் உன்னை பெத்தவருடா.. நல்லா இருக்கியான்னு கேட்க கூடாதா..? அங்க அம்மாவும், அப்பாவும் உனக்கு என்னாச்சோன்னு துடிச்சு போய் கெடக்காங்க..!! இரு.. நான் அவருக்கு கால் பண்றேன்.. மொதல்ல அவர்கிட்ட நாலு வார்த்தை பேசு..!!"

"போடு போடு.. பேசுறேன்..!! ஆனா.. இன்னொரு தடவை நல்லாருக்கியான்னு கேட்டா.. செத்து பொணமாயிட்டேன்னு சொல்லிருவேன் பாத்துக்கோ.."

"ஏண்டா இப்படி என்னை வதைக்கிற..?"

"நான் என்ன வதைக்கிறேன்.. நீ ஃபோனை போடு.. நான் பேசுறேன்.."

"விடு.. நீ ஒன்னும் பேச வேணாம்..."

"குடுக்கா.."

"சொல்றேன்ல..? விடு.. இந்த நெலமைல நீ ஒன்னும் பேச வேணாம்.. நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்.. நீ நாளைக்கு காலைல.. போதைலாம் தெளிஞ்சப்புறம் அவர்கிட்ட பேசு..!!"

"சரி விடு.. உன் இஷ்டம்.."

"மொதல்ல நீ ரூமுக்குள்ள போ.." சித்ரா அசோக்கின் கையை பிடிக்க, அவன் உதறினான்.

"விடுக்கா.. நானே வரேன்.."

நடந்தவன் ஒரு அடிதான் எடுத்து வைத்திருப்பான். அதற்கே தடுமாறினான். சித்ரா அவனை தாங்கி பிடித்துக் கொண்டாள்.

"என் மேல கை போட்டுக்கடா.. அக்கா உன்னை கூட்டிட்டு போறேன்.."

"என்னை என்ன புதுசா குடிக்கிறவன்னு நெனச்சியா..? எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன்.. இதுவரைக்கும் என் குடியுலக வாழ்க்கைல.. நான் வாமிட்டே எடுத்தது இல்லை.. தெரி.. ஓஓஓஓவ்வ்வ்வ்வ்..!!!!"

சொல்லி முடிக்கும் முன்பே அசோக் வாந்தி எடுக்க ஆரம்பித்தான். குடித்த விஸ்கியையும், அரைத்த சிப்சையும் வாய் வழியாக வெளியே கொட்டினான். சித்ரா பதறிப் போனாள். தம்பியின் நிலையை கண்டு கலங்கிப் போனாள். அவன் குனிந்து வாந்தி எடுக்க, இவள் சென்று அவனுடைய தலையை இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டாள். அவனோ அவளுடைய கையை தட்டிவிட்டான். வயிற்றை பிடித்துக்கொண்டு அந்த மொட்டை மாடியின் மையத்திலேயே குடம் குடமாய் வாந்தி எடுத்தான்.

சித்ரா அசோக்கையே பரிதாபமாக பார்த்தாள். பார்க்க பார்க்க அவளால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். செல்வாவோ செய்வதறியாது திகைத்து, நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வயிற்றில் இருந்ததை எல்லாம் அசோக் வெளியில் கொட்டிய பிறகு, சித்ராவும் செல்வாவும் அவனை அழைத்து சென்று, படுக்கையில் கிடத்தினார்கள். அவன் வாந்தி எடுத்ததை சுத்தம் செய்கிறேன் என்று சொன்ன சித்ராவிடம், 'விடும்மா.. நான் பாத்துக்குறேன்..' என்று கூறினார் செல்வா. ஒரு பக்கெட் நிறைய தண்ணீரும், விளக்குமாறும் எடுத்துக்கொண்டு சென்று, நீரை ஊற்றி ஊற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

சித்ரா அசோக்கின் அறைக்கு திரும்பினாள். விழிகள் செருக உறங்கிக் கொண்டிருந்த தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அவனுடைய முகத்தையே அமைதியாக பார்த்தாள். அசோக்கின் உடல் சலனமில்லாமல் கிடக்க, அவனுடைய உதடுகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன. ஏதோ ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தான். சித்ரா தன் காதுகளை கூர்மையாக்கி, அவன் என்ன முனகுகிறான் என்று கேட்டாள்.

"தி..திவ்யா.. தி..திவ்யா.. தி..திவ்யா.."

சித்ராவுக்கு இப்போது அழுகையை அடக்க முடியவில்லை. உதடுகள் துடிதுடிக்க அழுதாள். 'என் தம்பியின் வாழ்க்கையை எப்படி ஆக்கி வைத்திருக்கிறாள் அந்த பாதகத்தி..? கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்துக்கொண்டு எவ்வளவு சந்தோஷமாய் திரிவான் என் தம்பி..? இப்படி சுணங்கிப்போய் சுருண்டு படுக்க வைத்துவிட்டாளே..? சிறு வயதில் இருந்து இவன் அழுதே நான் பார்த்தது இல்லையே..? இன்று தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கின்றானே..?’

சித்ரா அசோக்கின் தலைமுடியை இதமாக கோதி விட்டாள். உடனே அசோக் தன் இமைகளை திறந்து அக்காவை பார்த்தான். இருவரும் ஒரு சில வினாடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்புறம் சித்ரா ஆற்றாமை தாளாமல் கேட்டாள்.

"ஏண்டா தம்பி இப்படிலாம் பண்ற..? அக்காவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?"

"நான் ஏன் இப்படிலாம் பண்றேன்னு உனக்கு தெரியலையாக்கா..?"

"தெ..தெரியலைடா.."

"நெஜமா தெரியலை..?"

"ம்ஹூம்.."

"என்னால திவ்யா இல்லாம இருக்க முடியாதுக்கா..!! அவ எனக்கு வேணும்க்கா.. அவ எனக்கு வேணும்..!! என் காதலியாவோ, என் பொண்டாட்டியாவோ கூட அவ எனக்கு வேணாம்.. எப்படியோ அவ என் லைஃப்ல இருந்தா போதும்..!! இத்தனை நாளா அவளுக்கு என் மேல காதல் இல்லைன்னு தெரிஞ்சா கூட.. அவகூட பேசிக்கிட்டு.. அவ சிரிப்பை பாத்துக்கிட்டு.. அவளை என் நெஞ்சுல சாச்சுக்கிட்டு.. சந்தோஷமா இருந்தேன்க்கா.. இப்போ அந்த சந்தோசம் கூட எனக்கு இல்லையேக்கா..? நான் என்ன பண்ணுவேன்..?" அசோக்கின் கண்களில் இருந்து இப்போது நீர் கசிய ஆரம்பித்தது. உடனே சித்ராவுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது.

"அவ இல்லைன்னா என்னடா.. நாங்கல்லாம் இல்லையா உனக்கு..?"

"அ..அவ எனக்கு முக்கியம்க்கா.. எ..எனக்கு.. வேற எதுவும் சொல்ல தோணலை..!!"

"அவளை அவ்ளோ புடிக்குமாடா உனக்கு..?"

சித்ரா உணர்ச்சிப் பூர்வமாக கேட்க, அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. அவனுடைய மனக்கண்ணில் ஒரு படம் ஓட ஆரம்பித்தது. சிறு வயதில் இருந்து திவ்யாவைப் பற்றிய அவனது நினைவுகள். திவ்யா சிரித்தது.. அழுதது.. வெட்கப்பட்டது.. கோவப்பட்டது.. கன்னம் கிள்ளியது.. காதை திருகியது.. தலையில் குட்டியது.. நெஞ்சில் சாய்ந்தது.. மடியில் உறங்கியது.. வெறுப்பாக பார்த்து அமில வார்த்தைகளை துப்பியது.. எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக.. வரிசையாக அவன் மனக்கண்ணில் ஓடியது..!! உதடுகளை பிரித்து மெல்லிய குரலில் சொன்னான்.

"புடிக்கும்க்கா.. ரொம்ப ரொம்ப புடிக்கும்..!!"

அவ்வளவுதான்..!! சித்ரா தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அவளுடைய மனதில் பலவித யோசனைகள்..!! இத்தனை நாளாய் அசோக் திவ்யாவை காதலிக்கிறான் என்பது அவளைப் பொறுத்தவரை ஒரு நகைப்புக்குரிய விஷயமாக இருந்தது. இன்று.. அந்த திவ்யா தன் தம்பியின் மனதில் எந்த அளவுக்கு ஆழமாய் பதிந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள். அவள் இல்லாமல் இனி இவன் சிரிக்கவே போவதில்லை என்று தோன்றியது. அப்படியே சிரித்தாலும் அது அடுத்தவர்களுக்காக பூசிக்கொள்ளும் அரிதார சிரிப்பாகவே இருக்கும்.

இல்லை.. இதை இப்படியே விடக் கூடாது..!! இப்படியே விட்டால் என் தம்பியின் வாழ்க்கை நாசமாக போய் விடும். அவளுடைய நினைவில் இவன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட தயங்க மாட்டான். இவனுடைய வாழ்க்கையை காப்பாற்ற நான் என்ன செய்யப் போகிறேன்..? சற்று முன் அப்பா சொன்னாரே..? 'அக்கா இருக்கா.. அம்மா மாதிரி பாத்துப்பான்னுதான அனுப்பி வச்சோம்..?' இதுவரை இவனுக்கு அம்மா போலவா நான் நடந்து கொண்டிருக்கிறேன்..? என்ன செய்யலாம்..? யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

"அசோக்.." தம்பியை அன்பாக அழைத்தாள்.

"ம்ம்.."

"அக்கா மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..?"

"ம்ம்.. இருக்குக்கா.."

"சரி.. இப்போ அக்கா சொல்றேன் கேட்டுக்கோ..!! அவளை உன்கூட அக்கா சேர்த்து வைக்கிறேன்..!! நம்ம ஊரு சனமெல்லாம் கூடியிருக்க.. நீ திவ்யா கழுத்துல தாலி கட்ட.. அவ உன் கையை புடிக்க.. நான் அவ கையை புடிச்சு.. அக்னியை சுத்தி வரத்தான் போறோம்..!! இது கண்டிப்பா நடக்கும்..!! இப்போ நீ எந்த கவலையும் இல்லாம.. நிம்மதியா தூங்கு..!!"

"அக்கா.." அசோக் அக்காவையே நம்பமுடியாமல் பார்த்தான்.

"அக்கா சொல்றேன்ல.. தூங்கு..!!"

சித்ரா அசோக்கின் தலை முடியை கோதி விட, கொஞ்ச நேரத்திலேயே அவன் தூங்கிப் போனான். சித்ரா உடனே தன் வீட்டுக்கு கிளம்பி விடவில்லை. அவள் ஒரு முடிவுடன்தான் இருந்தாள். அசோக் உறங்கிய பிறகும் நெடுநேரம் செல்வாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். செல்வாவும் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்தார். அசோக்கை பற்றியும், திவ்யாவின் மீதான அவனுடைய காதலைப் பற்றியும் தனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சித்ராவிடம் கொட்டி தீர்த்தார்.

சித்ராவும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அவளுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக தோன்றின. செல்வா சொல்ல சொல்ல.. அசோக் திவ்யாவின் மீது கொண்டுள்ள காதலின் தீவிரம் அவளுக்கு முழுமையாக புரிய ஆரம்பித்தது..!!

சித்ரா மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது கார்த்திக் திரும்பியிருந்தான். ஆனால் திவ்யா இரவு உணவு கூட உண்ணாமல், அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'செய்வதை எல்லாம் செய்துவிட்டு.. நிம்மதியாக உறங்குவதை பார்..' என்று சித்ரா திவ்யாவை மனதுக்குள் திட்டினாள். அடுத்த நாள் காலையிலும் திவ்யா சீக்கிரமே எழுந்து காலேஜுக்கு ஓடிவிட்டாள்.

அன்று மாலை.. சீக்கிரமே திவ்யா வீட்டுக்கு திரும்பிவிட்டாள். அவள் காலிங் பெல் அடித்தபோது, சித்ராதான் சென்று கதவு திறந்து விட்டாள். திறந்துவிட்டவள் அவளையே முறைத்து பார்க்க, அவளோ அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அவளுடைய அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள்.

திவ்யா உள்ளே சென்றதும், சித்ரா இந்தப்பக்கம் குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் அலைந்தாள். அடிக்கடி திவ்யாவின் அறையையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டாள். அவள் மனதில் பல்வேறு குழப்பங்கள். எல்லாம் நன்றாக நடக்கவேண்டுமே என்ற பயம் வேறு..!! கொஞ்ச நேரம் அந்த மாதிரி அவஸ்தையாக அலைந்தவள், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள். அறையை நெருங்கியவள் கதவை 'லொட்.. லொட்..' என்று தட்டினாள்.

வெளியே செல்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த திவ்யா, அசுவாரசியமாய் திரும்பி பார்த்தாள். வாசலில் சித்ரா நிற்பதைக் கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் திகைத்து போனாள். சித்ரா இந்த மாதிரி திவ்யாவின் அறை வாசலில் வந்து நிற்பது இதுவே முதல் முறை. அதுதான் திவ்யாவிடம் அப்படி ஒரு திகைப்பு..!!

திவ்யா அந்த மாதிரி திகைத்துக் கொண்டிருக்கும்போதே.. சித்ரா பதினைந்து வருடங்களுக்கு அப்புறமாக.. திவ்யாவின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.. தன் வாய் திறந்து.. பேச ஆரம்பித்தாள்..!!

"எ..எனக்கு.. உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..!!"

 

அத்தியாயம் 31

நியூட்டனின் மூன்றாம் விதி மிக பிரபலம்..!! இயற்பியல் பயிலாதவர்கள் கூட, அந்த விதியை மிக இயல்பாக மேற்கோள் காட்டி பேசுவது, நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான்..!! நான் இங்கு சொல்லப் போவது வேறு.. எனக்கு நியூட்டனின் முதல் விதியை மிகவும் பிடிக்கும்..!! உங்களில் எத்தனை பேர் அவருடைய முதல் விதியை படித்திருக்கிறீர்கள்..? படித்தவர்களில் எத்தனை பேருக்கு அது இப்போது ஞாபகம் இருக்கிறது..??

என்னடா இவன்.. கதை படிக்க வந்தால் கத்தியை போடுகிறான் என்று எண்ணாதீர்கள்.. காரணம் இருக்கிறது..!! சரி. அந்த முதல் விதியை நான் என்னுடைய சொந்த வரிகளில் சற்று எளிமையாக சொல்கிறேன்..!!

'வெளிப்புற அழுத்தம் எதுவும் இல்லாமல், எந்தப் பொருளும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாது..!!'

இது ஒரு இயற்பியல் விதி..!! ஆனால்.. மனிதர்களுக்கும், அவர்களுடைய மனங்களுக்கும் இந்த விதி மிகவும் பொருந்தும்..!! புத்தியில் வலுவாக ஒரு அடி விழாத வரை எந்த மனிதனின் அடிப்படை குணமும் மாறாது..!! நல்லவனோ, கெட்டவனோ.. திருடனோ, தீவிரவாதியோ.. அரசியல்வாதியோ, ஆன்மீகவாதியோ.. அவர்களுடைய அடிப்படை குணம் மாற வேண்டும் என்றால்.. அவர்களுடைய மூளையை பலமாக ஏதோ ஒன்று பாதித்திருக்க வேண்டும்..!!

சித்ராவின் மனமாற்றத்திற்கும் அதுதான் காரணம். நேற்று அவள் புத்தியில் வலுவான ஒரு அடி விழுந்தது. தம்பியின் காதல் தோற்றுப் போனால், அவனை அவள் இழக்க நேரிடுமோ என்ற பயம்தான் அந்த வலுவான அடி..!! அதனால்தான் தனது பதினைந்து வருட பிடிவாதத்தை தூக்கி எறிந்து விட்டு, அவளுடைய அடிப்படை குணத்தை மாற்றிக்கொண்டு, இன்று திவ்யாவின் அறை வாசல் வந்து நிற்கிறாள்..!!

"எ..எனக்கு.. உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..!!"

ஆனால், திவ்யா அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. இறுதி வரை இவள் தன்னுடன் பேசவே மாட்டாள் என்ற எண்ணம்தான் அவள் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. இப்போது அவள் தன் அறை வாசலிலேயே வந்து நின்று, பேசவேண்டும் என்றதும் அதிர்ந்து போனாள். திகைத்தாள்.. திணறினாள்.. தடுமாறினாள்..!!

சித்ரா இப்போது திவ்யாவின் அறைக்குள் நுழைய, திவ்யாவை ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. தன் கண்களையே கூர்மையாக பார்க்கும் சித்ராவின் பார்வையை, ஏனோ திவ்யாவால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவள் இந்த மாதிரி ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டதே இல்லை. அவளுடைய உடல் நடுக்கம் எடுக்க, அந்த சூழ்நிலை இப்போது அவளுக்கு அசௌகர்யமாக பட்டது.

திவ்யாவுக்கு அங்கே நிற்பது பிடிக்கவில்லை. அந்த சூழ்நிலையை தவிர்த்துவிட வேண்டும் என்று எண்ணினாள். அவசரமாக அறை வாசலை நோக்கி ஓடினாள். திவ்யாவின் எண்ணம் சித்ராவுக்கு உடனே புரிந்து போனது. அவளும் வேகமாக குறுக்கே நகர்ந்து, 'நில்லுடி...!!' என்று கோபமாக கத்தியவாறு, திவ்யாவின் இடது கையை எட்டிப் பிடித்தாள். இழுத்து அவளை மீண்டும் அறைக்குள்ளேயே தள்ளினாள்.

உள்ளே தள்ளப்பட்ட திவ்யா தடுமாறிப் போனாள். கால்கள் இடற, மெத்தையிலே சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்தவள், சித்ராவின் முகத்தை ஏறிட்டு பார்க்க விரும்பாமல், அப்படியே தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய நுரையீரல் இப்போது அதிவேகமாய் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளிவிட, திவ்யாவுக்கு 'புஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தது. அவளுடைய மார்புப்பந்துகள் ரெண்டும் 'குபுக்.. குபுக்..' என விரிந்து விரிந்து சுருங்கி கொண்டிருந்தன. சித்ரா இப்போது சற்றே ஆவேசமாக பேச ஆரம்பித்தாள்.

"போதும் திவ்யா.. என்னை பாத்து.. நீ மெரண்டு மெரண்டு ஓடுனது போதும்..!! நான் எதிரே வந்தா மூஞ்சியை அந்தப்பக்கம் திருப்பிக்கிறதும்.. க்ராஸ் பண்றப்போ தலையை குனிஞ்சிக்கிறதும்.. ரூம் விட்டு வெளில வர்றப்போ நான் வெளில நிக்கிறனான்னு எட்டிப் பாத்துட்டு வர்றதும்.. போதும்.. எல்லாம் போதும்..!! என்னை பாத்தா ராட்சசி மாதிரி தெரியுதா உனக்கு..? பேசுனா கடிச்சா வச்சிடுவேன்..? உன் அண்ணிதான..? அண்ணன் பொண்டாட்டிதான..? பேசு என்கூட..!!"

திவ்யா எதுவும் பேசவில்லை. 'புஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தவாறு, தனது பெரிய விழிகளை அகலமாய் திறந்து, தரையையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். சில வினாடிகள் காத்திருந்துவிட்டு, பின் சித்ராவே தொடர்ந்தாள்.

"பேசு திவ்யா.. இன்னைக்கு நீ பேசித்தான் ஆகணும்.. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!! என் தம்பியை நெனச்சா எனக்கு பயமா இருக்கு..!! உன் மேல இருக்குற பிரியத்துல.. உன்கூட பேசாம இருக்குற ஏக்கத்துல.. அவன் ஏடாகூடமா ஏதாவது செஞ்சுக்குவானோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!! நேத்து அவன் இருந்த நிலைமையை நீ பாத்திருந்தா.. உனக்கு புரிஞ்சிருக்கும்.. அவனை அந்த கோலத்துல பாத்த எனக்கு நெஞ்சே வெடிச்சு போச்சு திவ்யா..!! ஏன் இப்படி செஞ்ச.. ஏன் அவனை இந்த நெலமைக்கு ஆளாக்கி வச்சிருக்குற..??"

சித்ரா கத்த, இப்போது திவ்யா தனது தலையை சரக்கென திருப்பி, தன் அண்ணியை கூர்மையாக ஒரு உக்கிரப்பார்வை பார்த்தாள். 'நான் என்ன பண்ணுனேன் உன் தம்பியை..?' என்பது மாதிரி இருந்தது அந்தப்பார்வை..!! ஓரிரு வினாடிகள்தான் அப்படி பார்த்திருப்பாள். உடனே மீண்டும் தலையை கவிழ்த்துக் கொண்டாள். ஆனால் அதற்கே சித்ரா சற்று மிரண்டு போனாள். பட்டென தன் குரலில் ஒரு மென்மையை குழைத்துக்கொண்டு பேசினாள்.

"இங்க பாரு திவ்யா.. நான் உன்னை குறை சொல்றேன்னு நெனைக்காத..!! நீ அவசரப்பட்டு நெறைய முடிவு எடுக்குற.. அது உனக்கு நல்லது இல்லம்மா..!! அசோக்கை பத்தி நான் சொல்லி.. நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல.. உனக்கே அவனைப் பத்தி நல்லா தெரியும்..!! உன்மேல அவனுக்கு எவ்வளவு பாசம் தெரியுமா.. உன்னை திட்டுறேன்னு எத்தனை தடவை என்கிட்டே சண்டைக்கு வந்திருக்கான் தெரியுமா..? அவன் எவ்வளவு நல்லவன்.. எப்படி கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சுட்டு திரிவான்.. அவனுக்கு புடிக்காத ஆளுங்ககிட்ட கூட.. அவங்க மனசு நோகாம நடந்துக்குவான்தான..?? எதிரிக்கு கூட கெடுதல் நெனைக்க மாட்டான் என் தம்பி.. அவன் உயிருக்கு உயிரா காதலிக்கிற உனக்கா கெடுதல் நெனைப்பான்..?? கொஞ்சம் யோசிச்சு பாரும்மா..!!"


திவ்யா அமைதியாக தரையை பார்த்து அமர்ந்திருந்தாலும், அவளது மூளை அவளையுமறியாமல் சித்ரா சொன்ன விஷயங்களை அசை போட்டு பார்த்தது. 'சித்ரா சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அசோக் நல்லவன்தான்.. யாரையும் நோகடிக்காத நல்ல மனசுக்காரன்தான்.. ஆனால்.. ஆனால்.. அதற்காக அவன் என் காதலை அழிக்க நினைத்தது எந்த விதத்தில் சரியாகும்..??' திவ்யா யோசிக்க, அதற்குள் அவளது மனதை படித்தவளாய் சித்ரா சொன்னாள்.

"தயவு செஞ்சு.. அசோக் உன் காதலை கெடுக்க நெனச்சவன்னு மட்டும் சொல்லிடாத..!! ஆரம்பத்துல.. உன் மேல இருந்த காதலால.. மனசு தடுமாறி அவன் ஒருதடவை அந்த மாதிரி செஞ்சது என்னவோ உண்மைதான்..!! ஆனா.. அப்புறம்.. திவாகர் திரும்ப வந்தப்புறம்.. அவனோட காதலை எல்லாம் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டு.. உன் காதலுக்கு எவ்வளவு உதவி செஞ்சான்னு நெனைச்சு பாரு.. உனக்கு எவ்வளவு யோசனை சொன்னான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திவாகருக்கு புடிக்கிற மாதிரி உன்னை மாத்தினது.. அவன்கிட்ட எப்படி பேசணும்.. எப்படி பழகனும்னு உனக்கு டிப்ஸ் கொடுத்தது.. எல்லாம் யோசிச்சு பாரு..!! திவாகரோட குடிப்பழக்கம் உனக்கு தெரிஞ்சப்போ.. அவரோட காதலை முறிச்சுக்க நீ ரெடியானப்போ.. அவசரப்படாத திவ்யான்னு உன்னை தடுத்தது யாரு..? உன் காதலை கெடுக்கனும்னா.. அசோக் ஏன் இதெல்லாம் செய்யணும்..? அவனுக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்றதை தவிர வேற எந்த நோக்கமும் இல்ல திவ்யா.. தயவு செஞ்சு இதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!"

திவ்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய மூளை இப்போது சற்றே குழம்பியது. 'ஆமாம்.. எல்லாம் சரியாகத்தான் செய்தான்.. நானும் அப்படித்தான் நம்பினேன்.. அப்புறம் ஏன் அன்று வந்து திடீரென அப்படி சொன்னானாம்..? திவாகரை மறந்துவிடு என்று..!! ஏதோ நண்பர் மூலம் விசாரித்தேன் என்று கதையெல்லாம் அளந்தானே..? ஏன் அப்படி பொய் சொல்லி என் காதலை பிரிக்க நினைக்கவேண்டும்..?' திவ்யாவின் மூளை குழம்பிக்கொண்டிருக்க, சித்ரா தொடர்ந்தாள்.

"உனக்கு அந்த திவாகரைப் பத்தி சரியா தெரியலை திவ்யா.. அந்த ஆள் சரி கிடையாது.. ரொம்ப மோசமான கேரக்டர்..!! 'திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிச்சு காட்டுறேன்'னு அசோக்கிட்டயே வந்து சவால் விட்டு பேசிருக்கான்.. தன்னோட மோசமான குணங்களை பத்தி சொல்லி.. 'முடிஞ்சா திவ்யாகிட்ட இதெல்லாம் சொல்லிப்பாரு.. அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்'னு திமிரா பேசிருக்கான்..!! திவாகர் மேல இருந்த கோவத்துலதான்.. அசோக் அன்னைக்கு 'திவாகரை மறந்துடு'ன்னு உன்கிட்ட சொன்னது..!! அசோக் சொன்னவிதம் வேணா.. அவசரப்பட்டு, அறிவில்லாம சொன்னதா இருக்கலாம்..!! ஆனா.. அதுக்கும் அவன் உன் மேல வச்சிருந்த அக்கறைதான் காரணம் திவ்யா..!! இந்த மாதிரி ஒரு ஆள்கிட்ட நீ சிக்கிட கூடாதுன்ற அக்கறைதான்..!!"

திவ்யா இப்போது சற்றே ஏளனமாக சித்ராவை ஒரு பார்த்தாள். 'இது என்ன புதுக்கதையாக இருக்கிறது..? ஒருமனிதன் எதற்காக தன்னைப் பற்றியே கேவலமாக சொல்லிக் கொள்ள வேண்டும்..? திவாகர் அப்படிப்பட்டவர் கிடையாது.. அக்காவும், தம்பியும் சேர்ந்துகொண்டு என்னை குழப்ப நினைக்கிறார்கள்..!!' மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்ட திவ்யா, மீண்டும் தன் பார்வையை சித்ராவின் முகத்திலிருந்து வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள்.

திவ்யாவுடைய நெஞ்சு இன்னும் மேலும் கீழுமாய் வேகமாக ஏறி இறங்கி, அவசர மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. சித்ராதான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் திவ்யாவிற்கு தாகமெடுத்தது. டேபிள் மீது இருந்த தண்ணீர் ஜக்கை எட்டி எடுத்தாள். 'கடகட'வென நீரை தொண்டைக்குள் நிறைய சரித்துக் கொண்டாள். திவ்யா நீர் அருந்தி முடிக்கும் வரை, அவளுடைய முகத்தையே சித்ரா பொறுமையில்லாமல் முறைத்துக் கொண்டிருந்தாள்.

நீரருந்தி முடித்த திவ்யா, இப்போது செல்போனை கையிலெடுத்து நோண்ட ஆரம்பிக்க, சித்ரா நிஜமாகவே படு எரிச்சலானாள். அவளுடைய கையிலிருந்த செல்போனை வெடுக்கென பிடுங்கி மெத்தை மீது எறிந்தாள். திவ்யா எதுவும் சொல்லவில்லை. சித்ராவை ஏறிட்டும் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு தன் சுவாசத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். சித்ரா இப்போது எரிச்சலான குரலில் திவ்யாவிடம் கேட்டாள்.

"நான் இவ்வளவு சீரியஸா இங்க பேசிட்டு இருக்கேன்.. நீ செல்லை நோண்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?? நான் உன் வாழ்க்கையைப் பத்தித்தாண்டி பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு..?? நீ எவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கிருக்கேன்னு உனக்கு புரியுதா..?? அந்த திவாகர் ரொம்ப ஆபத்தானவன் திவ்யா.. அவன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து..!! அவனை பத்தி இன்னும் சொல்றேன்.. அவன் எந்த மாதிரி ஆளுன்னு நீயே ஒரு முடிவுக்கு வா..!!"

கண்கள் மூடி அமைதியாக இருந்த திவ்யா, இப்போது தன்னையும் அறியாமல் தன் காதுகளை கூர்மையாக்கி, சித்ரா என்ன சொல்லப் போகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தாள். சித்ரா அவள் பேசிய வேகத்திலேயே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

"நேத்து அந்த திவாகர் என்ன பண்ணிருக்கான் தெரியுமா..?? நீயும் அவனும் ஏதோ ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட போயிருந்தீங்களாமே..? அசோக்கும் அப்போ அங்கதான் இருந்திருக்கான்.. நீ ஹேன்ட் வாஷ் பண்ண போயிருந்தப்போ.. அசோக்குக்கு ஃபோன் பண்ணி.. 'இப்போ உன் ஆளு வருவா.. அவ மேல கை போடுறேன்.. பாத்துட்டுப்போ..'ன்னு எகத்தாளமா சொல்லிருக்கான்..!! எவ்வளவு ஒரு கேவலமான, வக்கிரமான புத்தி இருந்தா.. ஒரு ஆளு இப்படி சொல்லிருப்பான்..? அவன் கைல உன் வாழ்க்கையை ஒப்படைச்சா.. என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு..!!"

சித்ரா சொல்ல சொல்லவே, திவ்யாவின் மூளைக்குள் சுருக்கென்று ஏதோ தைத்தது..!! அவ்வளவு நேரம் வேண்டா வெறுப்பாக அண்ணியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவளுடைய முகத்தில், பட்டென ஒரு சீரியஸ்னஸ் வந்து உட்கார்ந்து கொண்டது. நிமிர்ந்து அமர்ந்தாள். அவளுடைய மனம் பரபரப்பாய் பலவிஷயங்களை யோசிக்க ஆரம்பித்தது.

'என்ன சொல்லுகிறாள் இவள்..? இவள் சொல்வது உண்மையா..? ஆமாம்.. நான் துப்பட்டாவை வாஷ் செய்துகொண்டிருந்தபோது, திவாகர் தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாரே..? அது வேறு யாரிடமோவா.. இல்லை இவள் சொல்வது மாதிரி அசோக்கிடமா..? ஒருவேளை அசோக்கிடம்தானோ..? அவனிடம்தான் இவள் சொல்வது மாதிரி பேசினாரோ..? அதனால்தான் என்றும் இல்லாத வழக்கமாய் என் தோள் மீது கை போட்டு அணைத்தாரா..? அதைப் பார்த்த ஆத்திரத்தில்தான் அசோக் அப்படி அசுர வேகத்தில் பைக்கில் பறந்தானோ..? இந்தமாதிரி எல்லாம் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளக் கூடிய ஆளா திவாகர்..? இல்லை.. இல்லை.. அவருக்குத்தான் அசோக்குடைய செல்நம்பரே தெரியாதே..? அப்புறம் எப்படி பேசியிருப்பார்..?? இரு இரு.. ஏன் முடியாது..?? என்னுடைய செல்போனில் அசோக்குடைய நம்பர் இருக்கிறதே.. ஹேன்ட் பேக்கின் சைட் ஜிப் வேறு திறந்திருந்ததே..?? ஒருவேளை...??? ஐயோ...!!! இப்போது ஏன் இவர்கள் பேச்சைக் கேட்டு திவாகரை தவறாக எண்ணுகிறாய்..?? இயல்பாக நடந்த விஷயங்களை இவர்கள் ஏதோ திரித்து சொல்கிறார்கள்..!! ஒருவேளை அவை இயல்பாக நடந்தவை இல்லையோ.. இவர்கள் சொல்வதுதான் உண்மையோ..?? ஆஆஆ...!!'

திவ்யா இப்போது உச்சபட்ச குழப்பத்துக்கு உள்ளானாள். அவளுடைய மனக்குளத்தில் ஒரே நேரத்தில் ஓராயிரம் கற்கள் விழுந்த மாதிரியாக, அலைஅலையாய் குழப்ப அதிர்வுகள்..!! சிந்திக்க சிந்திக்க.. மூளை கொதிப்பது போல வலியெடுத்தது திவ்யாவுக்கு..!! திவ்யாவுடைய மாற்றத்தை கவனியாது சித்ரா தொடர்ந்து வேகமாக பேசிக் கொண்டிருந்தாள்.

"நல்ல யோசி திவ்யா.. இந்த மாதிரி ஒரு ஆளை நீ காதலிக்கனுமா..? ஹ்ஹ.. சொல்லப்போனா.. அந்த ஆள் மேல உனக்கு இருக்குறது காதலான்னு கூட எனக்கு சந்தேகமா இருக்குது..!! 'அவனை காதலிக்கட்டுமா..?'ன்னு அசோக்கிட்ட அபிப்ராயம் கேட்டியாமே..?? காதல்ன்றது ஒரு பொண்ணுக்கு இப்படியாடி வரும்..?? இங்க இருந்து வரணும்டி.. நெஞ்சுல இருந்து வரணும்..!! மனசு சொல்லணும்.. 'இவன் நமக்கு சொந்தமானவன்.. கடைசிவரை இவன்கூடத்தான் இருக்கப் போறோம்'னு.. மனசு அப்படி சொன்னப்புறம் யார் பேச்சை கேட்டும் அதை மாத்தக்கூடாது..!! உன் மனசு அப்படி சொல்லிருந்ததுன்னா.. அசோக்கிட்ட அந்தமாதிரிலாம் நீ அபிப்ராயம் கேட்டிருக்கமாட்ட.. 'இவனைத்தான் நான் காதலிக்கிறேன்'னு.. பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிருப்ப..!!"

நிஜமாகவே திவ்யாவிற்கு இப்போது பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது..!! அவளுடைய புத்தியில் சம்மட்டியால் அடித்தது போல பலமாக ஒரு அடி விழுந்தது..!! 'என்ன சொல்கிறாள் இவள்..? அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. கடைசியில் என்னுடைய காதலையே சந்தேகிக்கிறாளே..? திவாகர் மீது எனக்கிருப்பது காதல் இல்லையா..?? காதல் இல்லாமல் வேறென்ன..??'

"அந்த ஆள் ஏதோ விஷம் குடிக்கப் போறேன்னு சொன்னானாம்.. உடனே நீ அழுதுக்கிட்டே 'ஐ லவ் யூ..' சொன்னியாம்..?? என்னடி இதுலாம்..?? இதுக்கு பேரா லவ்வு..???" சித்ரா சீற்றமாய் கேட்க, திவ்யா மூச்சு விடாமல் அமர்ந்திருந்தாள்.

"சரி.. இப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..? நான் சொல்றதெல்லாம் கொஞ்சம் கண் மூடி நிதானமா யோசிச்சு பாரு.. உன் மனசு என்ன சொல்லுதுன்னு பாரு..!!" சித்ரா சொல்ல, திவ்யா தலையை குனிந்தவாறே.. அவளுடைய கட்டுப்பாடின்றியே.. அதற்கு தயாரானாள்.

"அசோக்கை நெனைச்சு பாரு.. அசோக்.. உன் அசோக்.. உனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச உன் அசோக்..!! சின்ன வயசுல இருந்தே அவன் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தான்னு கொஞ்சம் நெனச்சு பாரு.. உனக்கு எது புடிக்கும், எது புடிக்காதுன்னு பாத்து பாத்து செய்வானே..? உன் சந்தோஷத்துக்காக அவன் என்னெல்லாம் பண்ணிருக்கான்னு நெனச்சு பாரு.. அவனை விட உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாராவது உண்டான்னு யோசி..!! அவனை கட்டிக்கிட்டா நீ எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு நெனச்சு பாரு.."

சித்ரா சொல்ல சொல்ல.. திவ்யாவின் மனதுக்குள் ஒரு படம் ஓட ஆரம்பித்தது..!! அசோக்கை தன் காதலனாக.. கணவனாக.. கழுத்தில் மாங்கல்யம் சூட்டுபவனாக.. காதலோடு மார்பில் சாய்த்துக் கொள்பவனாக..!! நினைக்க நினைக்க.. ஒரு இனம்புரியாத உணர்ச்சி அலை திவ்யாவின் உடலெங்கும் ஓடியது..!! படக்கென தன் தலையை பலமாக உதறி, அந்த உணர்வை வெட்டி எறிந்தாள்..!! 'என்ன இது.. என் மனம் ஏன் இப்படி எல்லாம் வெட்கமில்லாமல் சிந்திக்கிறது..?'

திவ்யா உச்சபட்ச குழப்பத்தில் சிக்கி திளைத்துக் கொண்டிருக்க, சித்ராவின் கண்களில் இப்போது திடீரென கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. விழிகளில் தேங்கிய நீருடன் தழதழத்துப் போன குரலில் சொன்னாள்.

"என் மனசாட்சியை தொட்டு சொல்றேண்டி.. அசோக் மாதிரி ஒரு நல்ல புருஷன் சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டான்..!! அவனை வெறுத்து ஒதுக்கி.. அவன் வாழ்க்கையையும் பாழாக்கி, உன் வாழ்க்கையையும் பாழாக்கிக்காத..!!"

சொல்லி முடிக்கும் முன்பே, கண்களில் தேங்கியிருந்த நீர் இப்போது சித்ராவின் கன்னங்களை நனைத்து ஓட ஆரம்பித்தது. அழுகிற விழிகளுடனே.. அவளது கைகள் இரண்டையும் கூப்பி.. தொழுது.. திவ்யாவிடம் பரிதாபமாக கெஞ்சினாள்..!!

"ப்ளீஸ் திவ்யா.. அண்ணி உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! என் தம்பியை ஏத்துக்கோ.. அவன் வாழ்க்கையை காப்பாத்து..!! ப்ளீஸ்..!!"

திவ்யா இப்போது தனது விழிகளை உயர்த்தி, தன் எதிரே நிற்கும் சித்ராவை ஏறிட்டாள். ஏறிட்டவள் அவள் நின்றிருந்த கோலத்தை கண்டதும், ஒருகணம் அப்படியே திகைத்துப் போனாள். இவள் ஒருநாள் இப்படி ஒரு கோலத்தில் தன் எதிரே நிற்கப் போகிறாள் என்று திவ்யா கனவிலும் எண்ணியது இல்லை. கைகூப்பி தன் முன் நிற்கும் அண்ணியைப் பார்த்து திவ்யா கலங்கிப் போனாள். ஆனால் அந்த கலக்கத்தை வெளியில் காட்ட விருப்பம் இல்லாதவளாய், மீண்டும் தன் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

இப்போது சித்ரா அழுகையை நிறுத்தினாள். இரண்டு கையாளும் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். புதிதாய் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் சொன்னாள்.

"இரு.. ஒரு நிமிஷம் இங்கயே இரு..!! உனக்கு நான் ஒன்னு காட்டனும்.. அசோக் உன்னை எந்த அளவு நேசிக்கிறான்னு உனக்கு காட்டனும்..!! ஓடிடாத.. அண்ணி இதோ வந்துடுறேன்..!!"

சொன்ன சித்ரா அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். திவ்யாவுக்கு ஏனோ இப்போது எழுந்து ஓடவேண்டும் என்று தோன்றவில்லை. சித்ரா இன்னும் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. 'அசோக் எந்த அளவுக்கு என்னை நேசிக்கிறான்..?' தெரிந்து கொள்ள அவளுடைய உள்மனம் ஆர்வமாக இருந்தது.

அரை நிமிடம் கூட ஆகியிருக்காது. சித்ரா மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய கையில் இப்போது புதிதாக ஒரு பை முளைத்திருந்தது. அந்தப் பையை திவ்யா அமர்ந்திருந்த கட்டிலுக்கு மேலாக உயர்த்தி பிடித்து, தலை குப்புற கவிழ்த்தாள். பொலபொலவென ஏதேதோ பொருட்கள், அந்தப் பைக்குள் இருந்து விழுந்து, மெத்தையில் விழுந்து ஓடின..!! 'என்ன இதெல்லாம்..?' என்பது போல திவ்யா அவற்றை பார்த்தாள்.

பார்க்க பார்க்க.. அவளுடைய உடம்பின் அனைத்து செல்களிலும் ஒரு பரவசமான உணர்ச்சி உடைப்பெடுத்து ஓட ஆரம்பித்தது..!! வார்த்தைகளில் சொல்ல முடியாத மாதிரியான.. ஒரு புதுவிதமான.. அதுவரை அவள் அனுபவித்திராத அற்புதமான உணர்ச்சி..!! வீணையின் தந்திகளை விரல்களால் மீட்டுவது போல.. அவள் உடலின் நாடி நரம்புகள் அத்தனையையும் மீட்டிப் பார்த்தது அந்த வினோதமான உணர்ச்சி..!!

மெத்தையில் சிந்திக் கிடந்தது எல்லாம், சிறுவயதிலிருந்தே திவ்யாவின் ஞாபகார்த்தமாக அசோக் சேர்த்து வைத்திருந்த பொருட்கள்..!! சில உடைந்த வளையல் துண்டுகள்.. ஒரு நெளிந்து போன நட்ராஜ் ஜியாமட்ரி பாக்ஸ்.. குப்பையில் வீசிஎறிந்த இயர்ஃபோன்.. குற்றாலத்தில் தவறவிட்ட காதணி.. மறந்து போயிருந்த இதயவடிவ கீ செயின்.. தொலைந்துபோனது என எண்ணியிருந்த பூனை படம் போட்ட கர்ச்சீஃப்.. எப்போதோ அசோக்கிற்கு பரிசளித்த பேனா.. எதற்காக எடுத்து வைத்திருக்கிறான் என்றே தெரியாத கடல் கிளிஞ்சல்கள்..!!

இன்னும் ஏதேதோ பொருட்கள்.. கலர் கலராய்.. சிறிதும் பெரிதுமாய்.. புதிதும், பழையதுமாய்..!! எல்லாப் பொருட்களுக்கும் மையமாய் அந்த டைரி திறந்த வாக்கில் விழுந்திருந்தது..!! ஃபேன் காற்றில் டைரியின் காகிதங்கள் படபடத்தன..!! அதனுள்ளே செருகி வைத்திருந்த காதல் சொல்லும் கார்டுகள், இப்போது வெளிய வந்து கட்டில் முழுதும் சிதறி கிடந்தன..!! டைரியின் சில பக்கங்களில் தென்பட்ட திவ்யாவின் கோட்டு சித்திரங்கள்..!! ஒரு சித்திரத்தின் நெற்றியில் அவளுடைய ஸ்டிக்கர் போட்டு..!! எல்லா பக்கங்களிலும் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த எக்கச்சக்கமான 'I LOVE YOU DIVYA ..!!'க்கள்..!!

"பாரு திவ்யா.. அவன் உன் மேல வச்சிருக்குற காதலை பாரு..!! என் தம்பி எந்த அளவுக்கு உன் மேல பைத்தியமா இருந்திருந்தா.. இதெல்லாம் சேர்த்து வச்சிருப்பான்..? நல்லா பாரு..!! இவன் உனக்கு வேணாமா திவ்யா.. உன் மேல உயிரையே வச்சிருக்குற இவன் உனக்கு வேணாமா..?"

தழதழத்த குரலில் சொன்ன சித்ரா அப்படியே மடங்கிப்போய் தரையில் அமர்ந்தாள். கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.

திவ்யா உண்மையிலேயே திகைத்துப் போனாள். அசோக் அவளை காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால்.. 'எப்போதிருந்து..?' என்ற உண்மை இப்போதுதான் அவளுடைய புத்தியில் வலுவாக அறைந்தது. விவரம் தெரியாத சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பொறுக்கி எடுத்து பொக்கிஷமாக சேகரித்து வைத்திருக்கிறான் என்றால்..?? திவ்யாவின் மனக்கண்ணில் இப்போது அசோக்கின் காதல் திடீரென அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. மளமளவென மலை அளவு வளர்ந்து அவள் முன்பு பிரம்மாண்டமாக நிற்க, அதை அவள் அண்ணாந்து பார்த்தாள்.

திவ்யாவுடைய கண்கள் இரண்டும் இப்போது கண்ணீரை கசிய ஆரம்பித்தன. சொட்டு சொட்டாய் கண்ணீர் வெளிப்பட்டு அவளுடைய கன்னங்களை நனைத்து ஓட, அவளது உதடுகள் படபடத்தன. பற்களால் அழுத்தி தன் உதடுகளை கடித்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முயன்றாள். கொட்டிக்கிடந்த பொருட்களை தனது வலது கையால் அப்படியே தடவிப் பார்த்தாள். அவளுடைய விரல்கள் ஐந்தும் அந்தப் பொருட்கள் மீது அலைஅலையாய் ஊர்ந்து சென்றன. ஒவ்வொரு பொருளாக கடந்து சென்ற அவளுடைய கை.. ஒரு பொருளை மட்டும் பற்றி மேலெழும்பியது..!!

அது.. திவ்யாவின் ஒற்றைக் கால் கொலுசு..!! மரம் வளருமென முட்டைகளை புதைத்த அன்று காணாமல் போன கொலுசு..!! 'அழகா இருக்கு திவ்யா..!!' என்று அசோக் ஆசையாக சொன்னவாறு, அன்று தடவிப் பார்த்த கொலுசு..!! இதோ அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாளே.. அவளுடன் திவ்யா பேசாமலிருக்க காரணமான சம்பவம் நடந்த அன்றுதான் இந்தக் கொலுசும் காணாமல் போனது..!! திவ்யாவுடைய வலது கையில் நிரந்தரமாகிப் போன ஒரு நெருப்பு சுட்ட தழும்பும், அன்றுதான் முதன்முறையாக கையில் ஏறியது..!!

இப்போது திவ்யா கொலுசை இறுகப் பற்றியிருந்த கையை மெல்ல திருப்பி, அந்த தழும்பை பார்த்தாள். அதை பார்க்க பார்க்க.. அவளுடைய கண்கள் இன்னும் அதிகப்படியான நீரை சிந்தின. சித்ரா இப்போது தலையை நிமிர்த்தி திவ்யாவை பார்த்தாள். அப்புறம் அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவளுக்கு, திவ்யாவுடைய தழும்பு கண்ணில் பட்டது.

சில வினாடிகள் அந்த தழும்பையே பாவமாக பார்த்த சித்ரா, அப்புறம் தன் வலது கையை மெல்ல நீட்டினாள். திவ்யாவுடைய முழங்கைக்கு அருகே தென்பட்ட அந்த தழும்பை தன் கைவிரல்களால் மெல்ல வருடினாள். திவ்யா தன் கையை சித்ராவிடமிருந்து இப்போது விலக்கிக் கொள்ளவில்லை. அண்ணியின் முகத்தை ஏறிட்டாள். அவளோ இப்போது பரிதாபமான குரலில் சொன்னாள்.

"சின்ன வயசுல.. நான் தெரியாம செஞ்ச தப்பால.. உன் கைல சூடு விழுந்துடுச்சு..!! அன்னைக்கு நான் ரொம்ப சின்னப்பொண்ணு.. ஏதோ கேக்கனுமேன்னு பேருக்கு கேட்டேன்.. இப்போ வளர்ந்து பெரியவளாயிட்டேன்.. என் மனசார கேக்குறேன்.. என்னை மன்னிச்சுடு திவ்யா..!! உன் கைல சூடு விழ வச்சதுக்கு என்னை மன்னிச்சுடு..!!"

சித்ரா சொல்லிவிட்டு அழ, திவ்யாவாலும் அவளுடைய உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சி அலைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. அவளுடைய உதடுகள் துடிக்க, கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது. கண்களில் வழியும் நீருடனே அண்ணியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்ராவும் திவ்யாவும் அவ்வாறு அருகருகே அமர்ந்து கொண்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், மெத்தையில் கிடந்த திவ்யாவின் செல்போன் அலறியது..!!

ஒரே நேரத்தில் திவ்யாவும், சித்ராவும் செல்போனை திரும்பி பார்த்தார்கள். 'DIVAKAR CALLING.. DIVAKAR CALLING..' என்று டிஸ்ப்ளே பளிச்சிட்டது..!! இருவரும் ஒரே நேரத்தில் செல்போனை நோக்கி கைநீட்ட, அது திவ்யாவின் கையில் சிக்கியது. இப்போது சித்ரா லேசான பதட்டத்துடன் சொன்னாள்.

"ப்ளீஸ் திவ்யா.. அ..அந்த காலை கட் பண்ணு.. அண்ணி சொல்றதை கேளு.. அந்த ஆள் சகவாசமே நமக்கு வேணாம்..!! நீ, அசோக், நான், உன் அண்ணன்.. நம்ம நாலு பேரும் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்..!! ப்ளீஸ் திவ்யா.."

திவ்யா ஒரு சில வினாடிகள் அண்ணியின் முகத்தையும், கையிலிருந்த செல்போனையும் மாறி மாறி பார்த்தாள். கொஞ்ச நேரத்திற்கு அவளுடைய மனதில் ஒரு குழப்பமான போராட்டம். அப்புறம் ஏதோ முடிவுக்கு வந்தவளாய், பட்டென காலை பிக்கப் செய்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக்கொண்டே,

"ஹலோ.." என்றாள்.

"........................." அடுத்த முனையில் திவாகர் ஏதோ கேட்க,

"ம்ம்.. கெளம்பிட்டேன்.. இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுவேன்..!!"

திவ்யா சொல்லிவிட்டு காலை கட் செய்ய, சித்ரா இப்போது சுத்தமாய் பேச்சிழந்து போயிருந்தாள். திவ்யாவையே ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

திவ்யா எழுந்தாள். ஈர டவலால் முகத்தை துடைத்துக் கொண்டு, லேசாக பவுடர் பூசிக் கொண்டாள். பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டுகொண்டிருக்கும் சித்ராவை ஓரிரு வினாடிகள் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அவசரமாய் நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள். சித்ரா நீர்த்திரையிட்ட விழிகளுடன், இறுதி வரை எதுவுமே பேசாமல் செல்லும் திவ்யாவின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.