நெஞ்சோடு கலந்திடு - பாகம் 7

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 7

Published on: 2025-06-07 20:19:06

Enjoying this post?
Save it to your favorites to easily find it later.
View Favorites

அத்தியாயம் 25

அப்புறம் ஒரு மூன்று நாட்கள் மிக இறுக்கமாகவே சென்றன. அசோக் அன்று மொட்டை மாடியில் சொன்னதை எல்லாம் திவ்யா அப்படியே செய்தாள். செல் நம்பர் மாற்றிக் கொண்டாள். அசோக் சொன்னமாதிரியே திவாகருக்கு ஒரு இறுதி ஈ-மெயில் அனுப்பிவிட்டு அந்த அக்கவுன்ட்டை க்ளோஸ் செய்தாள். அந்த இறுதி ஈ-மெயிலை கூட அசோக்கிடம் காட்டி சரி பார்த்து வாங்கிக்கொண்டே அனுப்பினாள். திவாகருடனான தொடர்பை முழுவதுமாய் துண்டித்துவிட்டு, அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

"அவ்ளோதானா அசோக்.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?"

"இங்க பாருடா.. மனசை போட்டு குழப்பிக்காத..!! எல்லாம் உன் நல்லதுக்காகத்தான்..!! நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு.. மறந்துடு..!!"

"முடியலை அசோக்.. கஷ்டமா இருக்கு..!!"

"அதெல்லாம் ஒண்ணுல்ல திவ்யா.. உன்னால முடியும்.. எல்லாம் நம்ம மனசுதான் காரணம்..!! கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்..!! அப்புறம் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.. அதுக்கு நான் உத்திரவாதம்..!! சரியா..?"

"ம்ம்.. சரி..!!"

"குட் கேர்ள்..!!"

"அசோக்.."

"ம்ம்..??"

"எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீதான் அசோக்.. நீ எப்போவும் என்கூடவே இருடா.. சரியா..?"

"இருக்குறேன் திவ்யா.. இருக்குறேன்.. எப்போவும் உன் கூடவே இருக்குறேன்..!!" திவ்யாவின் கூந்தலை இதமாய் வருடிக் கொடுத்துக்கொண்டே அசோக் சொன்னான்.

திவாகருக்கு திவ்யாவின் வீட்டு முகவரி தெரியாது. ஆனால் அவள் எந்த காலேஜில் படிக்கிறாள் என்ற விவரம் தெரியும். திவ்யாவிடம் இருந்து அந்த மெயில் சென்ற அடுத்த நாளே அவளை தேடி காலேஜுக்கு சென்றுவிட்டான். திவ்யாவிடம் பேசவேண்டும் என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
"ப்ளீஸ் திவ்யா.. ஏன் இப்படி எல்லாம் பண்ற..? எனக்கு எதுவுமே புரியலை..!!"

"உங்களுக்கு எதுவும் புரியவேணாம் திவாகர்.. நாம லைஃப்ல ஒண்ணுசேர முடியாது.. அது மட்டும் உங்களுக்கு புரிஞ்சா போதும்..!!"

"திவ்யா நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. எனக்கு கொஞ்ச நேரம் டைம் கொடு.. நாம பேசலாம்..!!"

"எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை.. தயவு செஞ்சு இனிமே இங்க வந்து நின்னு.. இந்த மாதிரி தொந்தரவு பண்ணாதீங்க..!! என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க..!!"

"திவ்யா ப்ளீஸ்..!!"

"உங்களுக்கு ஒருதடவை சொன்னா புரியாதா..?? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க..?? உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. போயிடுங்க இங்க இருந்து..!!"

திவ்யா முகத்தில் அறைந்த மாதிரி பேச, திவாகர் நிஜமாகவே திகைத்துப் போனான். அப்பாவியான திவ்யாவா இப்படி எல்லாம் பேசுவது என நம்பமுடியாமல் பார்த்தான். அசோக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என இப்போது வருந்தினான். படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்கிற திவ்யாவின் முதுகையே வெகுநேரம் வெறித்துப் பாத்தவாறு நின்றிருந்தான்.

திவாகரிடம் வீராப்பாக பேசினாலும், திவ்யாவால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்குவது கடினமான காரியமாகவே இருந்தது. தனியாக சென்று அமர்ந்துகொண்டு, தலையை கவிழ்த்துக்கொண்டு நெடுநேரம் அழுவாள். எந்த நேரமும் ஒருவித சோகம் அப்பிய முகத்துடனே சுற்றி திரிந்தாள். தான் முதல்முதலாக கண்ட கனவு இப்படி பாதியில் கலைந்து போனதே என்ற சோகம்..!!


அசோக்கிற்கு திவ்யாவை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் விரைவில் அவள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. முடிந்த அளவுக்கு அவளுடன் அதிகமான நேரத்தை செலவழித்தான். ஏதாவது மொக்கை ஜோக் அடித்து அவளை சிரிக்க வைத்து, அவளுடைய மனதை இலகுவாக்க முயன்றான். அந்த மாதிரியே ஒரு மூன்று நாட்கள் கழிந்தன.

அது ஒரு ஞாயிறுக்கிழமை.. நண்பகல் பதினோரு மணி இருக்கும்..!! காலை உணவு சாப்பிட அக்கா வீட்டிற்கு வந்திருந்த அசோக், அப்புறம் அவ்வளவு நேரம் திவ்யாவின் அறையில்தான் கழித்திருந்தான். சிகரெட் பிடிக்கவேண்டும் போலிருக்க, திவ்யாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகள் ஏறி மொட்டை மாடியை அடைந்தான். அடைந்தவன் அங்கே தன் அக்கா நின்றிருப்பதைக் கண்டதும் திருதிருவென விழித்தான்.

சித்ரா அப்போதுதான் வாஷிங் மெஷின் துவைத்து பிழிந்த துணிகளை, இரண்டு பக்கெட்டுகளில் அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்திருந்தாள். குறுக்கு மறுக்காக கட்டப்பட்டிருந்த கொடிகளில் தொங்கிய கிளிப்புகளை எடுத்தவாறே, கொண்டு வந்திருந்த துணிகளை காயப் போட தயாராகிக் கொண்டிருந்த போதுதான், அவளுடைய தம்பி வந்து அங்கு நின்றான். திருதிருவென விழித்த தம்பியை ஒரு நமுட்டுப்பார்வை பார்த்தவாறே, கேலியான குரலில் கேட்டாள்.

"என்னடா.. புகை விட வந்தியா..?"

"புகையா..?? அ..அதெல்லாம் ஒன்னுலையே..??"

"ஏய்.. நடிக்காதடா..!! எல்லாம் எனக்கு தெரியும்.. வேற எதுக்கு இந்த உச்சி வெயில்ல மொட்டை மாடிக்கு நீ வரப் போற..?"

"ம்ம்.. என்னைய நல்லா புரிஞ்சு வச்சிருக்குற.. சரி நான் போயிட்டு அப்புறம் வரேன்.."

"அடச்சீய்.. இங்க வா..!!"

"என்ன..?"

"தம்மடிக்கத்தான வந்த..?"

"ம்ம்.."

"அப்புறம் எங்க ஓடுற..?"

"அதான் நீ இருக்கியே..?"

"பரவால.. வா.. வந்து அடி.."

"அ..அதெப்படிக்கா உன் முன்னாடி..??" அசோக் இழுத்தான்.

"பரவாலடா.. என் தம்பி தம்மடிக்கிற ஸ்டைல பார்க்கனும்னு எனக்கு கொள்ளை நாளா ஆசை.. வா.. வந்து அடி..!!"

சித்ரா சொல்லிவிட்டு பக்கெட்டில் இருந்த துணி ஒன்றை எடுத்து.. விரித்து பிடித்து.. ஒரு உதறு உதறி.. கொடியில் காயப் போட்டாள். அசோக் கொஞ்ச நேரம் தலையை சொறிந்தவாறே நின்றிருந்தான். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்துக் கொண்டான். தயங்கி தயங்கி புகையை வெளியிட்டான். அசோக் அவஸ்தையாக புகைப்பதையே ஓரக்கண்ணால் பார்த்து சிரித்த சித்ரா, ஒவ்வொரு துணியாக எடுத்து கொடியில் விரித்து போட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு கொடி நெட்டுக்க துவைத்த புடவைகளை விரித்து சித்ரா காயப்போட்டிருக்க, இப்போது அசோக்கிற்கு அந்தப்பக்கம் நின்ற அக்கா கண்ணுக்கு தட்டுப்படவில்லை. துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றான். புகை விட்டுக்கொண்டே அக்காவிடம் கேட்டான்.

"எத்தனை நாளாச்சு தொவைச்சு..? எக்கச்சக்கமா தொவைச்சு எடுத்துட்டு வந்திருக்குற..?"

"ஒருவார அழுக்குடா.. ஒண்ணா சேர்ந்துடுச்சு..!!"

"ம்ம்ம்ம்.."

"அப்பா.. காலைல இருந்து வேலை பெண்டு நிமிந்து போச்சு.."

"ஹ்ஹா.. ரொம்பதான் சலிச்சுகுற..? நீயா எல்லாத்தையும் தொவைச்ச..? வாஷிங் மெஷின்தான தொவைச்சது..?"

"ரொம்பத்தாண்டா கொழுப்பு உனக்கு.. சமைக்கிறது, வீட்டை சுத்தம் பண்றதுலாம் எந்த கணக்குல சேர்க்குறது..? நான் ஒருத்தியா கெடந்து அல்லாடுறேன்.. யாருக்காவது கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரேன்..!! உன் பிரண்டு இருக்காளே.. அந்த திவ்யா மகாராணி.. அட்லீஸ்ட் இந்த வேலையவாவது செய்றதுதான..? காலைல இருந்து ஹாயா ரூமுக்குள்ளயே படுத்து கெடக்குறா..!!"

"அவ பாவம்க்கா.. திட்டாத அவளை..!!"

"அவளை சொன்னா உனக்கு பொறுக்காதே..?"

"அப்படி இல்லக்கா.. அவ ரொம்ப நொந்து போயிருக்கா.. கொஞ்ச நாள் அவளை எதுவும் சொல்லாத..!!"

"நொந்து போயிருக்காளா..? ஏன்..?"

"என்ன.. தெரியாத மாதிரி கேக்குற..? எல்லாம் அந்த திவாகர் போனதை நெனச்சுத்தான்..!!"

"அவன் எங்க போனான்..? நீதான் அவனை பத்தி விட்டுட்ட..!!" சித்ரா கிண்டலாக சொன்னாள்.

"வெளையாடதக்கா.. நான் எங்க பத்தி விட்டேன்..? அவங்க பிரிஞ்சதுக்கு நான் ஒன்னும் காரணம் இல்ல..!!"

"அப்புறம் யாரு..??"

"அந்த திவாகர்தான்..!! அவர் சரியில்லக்கா..!!"

"ம்ம்ம்ம்.. எனக்கென்னவோ நீ சொன்னதை இன்னும் நம்ப முடியலைடா..!!"

"எதை..?"

"அதான்.. அந்த திவாகரே உன்கிட்ட வந்து சவால் விட்டான்னு சொன்னியே..!!"

"அட உண்மைதான்க்கா.. அந்த ஆளுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ்..!! தன்னை மீறி என்ன நடந்திடப் போகுதுன்னு நெனைப்பு..!!"

"ம்ஹ்ம்ம்.. அவன் போனதுக்காக அவ ஃபீல் பண்றாளோ இல்லையோ.. அக்கா ரொம்ப ஃபீல் பண்றேண்டா தம்பி..!!"

"நீ ஃபீல் பண்றியா..? ஏன்..?"

"ஆமாம்.. நீ அந்த திவ்யாவை உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த.. எனக்கு பக்கு பக்குன்னு இருந்தது..!! அப்போத்தான் அந்த திவாகர் வந்து சேர்ந்தான்.. என் தம்பி தப்பிச்சுட்டான்னு நான் நிம்மதியா இருந்தேன்..!! இப்போ.. மறுபடியும் மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு..!!"

"ஹாஹா..!! நீ பயப்படலாம் தேவையே இல்ல..!!"

"ஏன் அப்படி சொல்ற..?"

"திவ்யாவுக்கு என் மேல லவ்லாம் வரும்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே போயிடுச்சுக்கா..!!"

"அவ உனக்காக உருகுறது மருகுறதுலாம் பார்த்தா.. எனக்கென்னவோ அப்படி தோணலை..!! கூடிய சீக்கிரம் அந்த திவாகர்ட்ட வுட்ட லவ் டயலாக்லாம் உன்கிட்ட வுட போறா பாரு..!!"

"ஹாஹா..!! அவ லவ் டயலாக் விடுறாளோ இல்லையோ.. நீ சொல்றதை கேக்குறப்போ எனக்கு குளுகுளுன்னு இருக்குது..!!" அசோக் சிரிப்புடன் சொல்ல, சித்ரா இப்போது கிண்டலான குரலில் சொன்னாள்.

"ஓஹோ.. குளுகுளுன்னு இருக்கா..?? இருக்கும் இருக்கும்..!! பாவிப்பயலே.. உன்னை எவ்வளவு நல்லவன்னு நெனச்சேன்.. இப்படி பண்ணிட்டியடா..?"

"நானா..? நான் என்ன பண்ணினேன்..?"

"உன் லவ் சக்சஸ் ஆகணும்னு.. இல்லாததும் பொல்லாததுமா சொல்லி.. இப்படி ரெண்டு அப்பாவி காதல் கிளிகளை பிரிச்சுட்டியேடா..!! நீ நல்லாருப்பியா..?" நக்கலாக சொன்ன சித்ரா, கிளிப்புகள் எடுப்பதற்காக தொங்கிக்கொண்டிருந்த துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றாள்.

"ஆமாம்.. நான்தான் என் லவ்வுக்காக அவங்க லவ்வை ப்ளான் பண்ணி பிரிச்சுட்டேன்.. ஏன்க்கா நீ வேற..?"

சித்ராவுக்கு பதில் சொல்லிக்கொண்டே அசோக்கும், துணிகளை விலக்கி அந்தப்பக்கம் சென்றான். சென்றவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றான். அங்கே சித்ரா ஒருமாதிரி மிரட்சியாக நின்றிருக்க, அவளுக்கு அருகே திவ்யா முகமெல்லாம் ஆத்திரம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள்..!!!

அதுவரையான தன் வாழ்க்கையில் அந்த மாதிரியான ஒரு மோசமான சூழ்நிலையை அசோக் சந்தித்ததே இல்லை. நடந்ததை நம்ப முடியவில்லை அவனுக்கு..!! விவரம் தெரிந்த நாளில் இருந்தே திவ்யாவின் மீது அவனுக்கு விருப்பம் உண்டு..!! தனது காதலை எப்படி எல்லாம் திவ்யாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் கனவு கண்டிருக்கிறான்.!! ஆனால்.. இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் தன் காதல் அவளுக்கு தெரிய வரும் என்று நிச்சயமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. திக்கித்துப்போய் நின்றிருந்தான்..!!

திவ்யாவும் கடந்த ஒரு நிமிடமாக தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவளாகவே காட்சியளித்தாள். தான் அத்தனை நாட்களாய் நம்பிய அசோக்கா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பது போல அவனையே வெறுப்பாக பார்த்தாள். அவளது கண்கள் கலங்கி, நீரை பொழிய ஆரம்பித்தன. அவளுடைய உதடுகள் படபடத்தன. அந்த உதடுகளை பற்களால் அழுத்திக் கடித்தவாறே, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள். அப்புறம்..

"ச்சை..!!"

என்று அசோக்கின் மீது ஒரு அருவருப்பான பார்வையை வீசிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். படபடவென படியிறங்கி கீழே சென்றாள். அசோக் திகைத்துப் போனவனாய் தன் அக்காவை திரும்பி பார்த்தான். அவளும் இப்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

"எ..என்னடா இது.. இப்படி ஆயிடுச்சு..? நான் ஏதோ வி..விளையாட்டுக்கு சொல்லப்போய்..?? இப்போ என்னடா பண்றது..?"

"அ..அதான்க்கா எனக்கும் புரியலை..!!"

"போடா.. போய் அவளை சமாதானப் படுத்து.. போ..!!"

அக்கா சொல்ல அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான். அவனும் அவசரமாக படியிறங்கி கீழே ஓடினான். வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்கதைவை தள்ளி, உள்ளே புகுந்தான்.

உள்ளே.. திவ்யா ட்ரசிங் டேபிள் டிராயரை வெளியே இழுத்து வைத்து.. அதற்குள் எதையோ அவசரமாக தேடிக் கொண்டிருந்தாள். அசோக் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அசோக்தான் அவளை அழைத்து அவளுடைய கவனத்தை கலைத்தான்.

"தி..திவ்யா..!!"

இப்போது திவ்யா அசோக்கை ஏறிட்டு முறைத்தாள்.

"எங்க வந்த..?" என்று வெறுப்பை உமிழ்ந்தாள்.

"தி..திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!"

"இன்னும் என்ன சொல்லப் போற..? இன்னும் என்னெல்லாம் சொல்லி என்னை பைத்தியக்காரியா ஆக்கப் போற அசோக்..? ம்ம்..??" திவ்யா கத்தினாள்.

"திவ்யா.. ப்ளீஸ்.."

"எப்படி அசோக்.. எப்படி உன்னால இப்படி ஒரு காரியம் செய்ய முடிஞ்சது..?? நான் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்..?? கடவுளை விட உன் மேல நெறைய நம்பிக்கை வச்சிருக்கேன்னு சொன்னேனே..?? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா.. அந்த நம்பிக்கைக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிருப்பியா..? 'எல்லாம் என் நல்லதுக்காக பண்றேன்.. என் நல்லதுக்காக பண்றேன்..'ன்னு சொல்லிட்டு.. இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே..?? உனக்காக நான் என் காதலையே தூக்கி எறிஞ்சனே.. ஆனா நீ..???? உன் காதலுக்காக.. என் வாழ்க்கைல கேம் ஆடிட்டியே..?? ச்சீய்..!!!"

திவ்யாவின் வார்த்தைகள் அசோக்கின் உடம்பெல்லாம் 'சுளீர்.. சுளீர்..' என சாட்டை சொடுக்கின..!! அவனது உச்சந்தலையில் 'படார்.. படார்..' என சம்மட்டியை இறக்கின..!!

"ஐயோ.. நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்ட திவ்யா..!!"

"இல்ல.. இப்போத்தான் நான் எல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டேன்..!! நீ என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சப்புறந்தான் எனக்கு எல்லாமே தெளிவா புரியுது..!!"

"எ..என்ன சொல்ற நீ..?"

"ஆரம்பத்துல இருந்தே உனக்கு திவாகரை புடிக்கலை.. எங்க லவ்வை புடிக்கலை.. எப்படியாவது எங்க லவ்வை கெடுக்குறதுலயே குறியா இருந்திருக்க நீ.."

"இ..இல்ல திவ்யா..!!"

"நடிக்காத..!! அன்னைக்கு.. திவாகர் என்கிட்டே ஃபர்ஸ்ட் டைம் 'ஐ லவ் யூ' சொன்னப்போ.. நான் அவரை லவ் பண்ணலைன்னு சொல்ல சொன்னியே.. ஏன்..?? எங்க காதலை கெடுக்கனும்ன்ற கெட்ட எண்ணம்தான..?" திவ்யா அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, அவன் திணறினான்.

"இ..இங்க பாரு திவ்யா.. அன்னைக்கு நான் அந்த மாதிரி எண்ணத்துல சொன்னது என்னவோ உ..உண்மைதான்.. ஆனா.. அப்புறம்.."

"அப்புறம் என்ன..?? திடீர்னு நல்லவனா மாறிட்டியோ..??"

"உனக்கு புரியலை.. அதுக்கப்புறம்.. அவர் திரும்ப வந்ததுக்கப்புறம்.. நான் நெஜமாவே உங்களை சேர்த்து வைக்க நெனச்சேன்..!!"

"பொய் சொல்லாத அசோக்..!!"

"ஐயோ.. இல்ல திவ்யா.. அதுதான் உண்மை..!!"

"இல்ல.. இல்ல..!! பொய்..!! நீ சொன்ன பொய்யெல்லாம் நான் கேட்டு ஏமாந்தது.. இன்னைக்கு மொட்டை மாடியோட போயிடுச்சு..!! எனக்கு எல்லாம் தெரியும்..!!"

"ப்ளீஸ் திவ்யா.. என்னை நம்பு.. நான் சொல்றது உண்மைதான்..!!" அசோக் கெஞ்சினான்.

"அப்புறம் ஏன் திருவிழா அன்னைக்கு அப்படி சொன்ன..?"

"எ..என்ன சொன்னேன்..?" அசோக் மிரட்சியாகவே கேட்டான்.

"திவாகர் சூசயிட் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தப்போ.. பட்டுன்னு காலை கட் பண்ணிட்டு என்னையும் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினியே.. அது ஏன்..? 'திவாகர் செத்து போயிடட்டும்.. நம்ம ரூட்டு கிளியர் ஆகும்..'னு ஒரு கேவலமான புத்திதான..?? ச்சை..!!!! உன் காதல் சக்சஸ் ஆகுறதுக்காக ஒரு உசுரை கொல்ல கூட தயங்காத பெர்வர்ட் நீ..!! அப்படி என்ன வெறி உனக்கு..??? அப்படி என்ன என் மேல வெறி உனக்கு..???"

திவ்யா ரவுத்திரமாக அலற, அசோக் அப்படியே மிரண்டு போனான். பேச்சிழந்தான். சிறு வயதில் இருந்தே அன்பில் நனைந்த வார்த்தைகளையே திவ்யாவிடம் இருந்து கேட்டறிந்த அசோக், இப்படி அவள் அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அள்ளி வீச.. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வேதனையில் வெந்து துடித்தான். அவனையும் அறியாமல் அவனது கண்கள் பொலபொலவென நீரை வடிக்க ஆரம்பித்தன.

"தி..திவ்யா.. நீயா இப்படி இல்லாம் பேசுற..? நா..நான் உன் அசோக் திவ்யா..!!" என்று பரிதாபமாக சொன்னான்.

"இல்ல.. நீ என் அசோக் இல்லை..!! என் அசோக் ரொம்ப நல்லவன்.. ரொம்ப ரொம்ப நல்லவன்.. என் பெஸ்ட் ஃபிரண்ட்..!! அவன் கொஞ்ச நேரம் முன்னாடி செத்து போயிட்டான்..!! நீ என் எதிரி.. உலகத்துலேயே நான் ரொம்ப ரொம்ப வெறுக்குற நம்பர் ஒன் எதிரி..!! ச்சை.. உன்கூட பேசுறதே பெரிய பாவம்..!! இனிமே பேச மாட்டேன்.. பேசவே மாட்டேன்..!! உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டேன்..!!"

"ஓ..!!! பே..பேச மாட்டியா.. என்கூட பேசகூட மாட்டியா திவ்யா..?"

"ஏன்.. என்னால உன்கூட பேசாம இருக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..?? என்னைப் பத்தி உனக்கு இன்னும் சரியா புரியலை..!! என்னை மாதிரி யாரையும் விரும்ப முடியாது.. அதே மாதிரி.. என்னை மாதிரி யாரையும் வெறுக்கவும் முடியாது..!! பதினஞ்சு வருஷமாச்சு.. உன் அக்காவோட பேசி..!! அவளாவது என் உடம்புல சூடு போட்டா.. நீ மனசை குத்தி கிழிச்சு தீயில தூக்கி போட்டுட்ட அசோக்..!!"

வெறுப்பாக சொன்ன திவ்யா மீண்டும் அந்த ட்ராயரில் பரபரவென்று எதையோ தேடினாள். அசோக் திக்கித்துப்போய் நின்றிருக்க, திவ்யா தேடியது சில வினாடிகளிலேயே அவளது கையில் சிக்கியது..!! அது.. மூன்று நாட்களுக்கு முன்பாக அவள் கழட்டி தூக்கி எறிந்த சிம் கார்ட்..!! உடனடியாய் அதை தனது செல்போன் கழட்டி செருகிக் கொண்டாள்..!! அணைந்திருந்த செல்போனை உயிர்ப்பித்துக்கொண்டே, அசோக்கிடம் திரும்பி ஆத்திரமாக சொன்னாள்..!!

"நான் என் காதலனோட பேசப் போறேன்.. கதவை மூடிட்டு நீ கொஞ்சம் வெளில போறியா..?? எனக்கு ப்ரைவசி வேணும்..!!"

அவ்வளவுதான்..!!! இதயத்தில் இடி விழுந்தாற்போல ஒரு நிலையை அசோக் அடைந்தான்..!!!! எந்திரம் மாதிரி திரும்பி அந்த அறையை விட்டு வெளியேறினான்..!! உயிரற்ற ஜடம் ஒன்று எழுந்து நடமாடுவது போல.. வீட்டு வாசலை நோக்கி நடந்தான்..!! எதிரே வந்த சித்ரா.. 'தம்பி.. என்னாச்சுடா.. என்னாச்சு.. ஏன்டா ஒரு மாதிரி பாக்குற..?' என்று கேட்டது அவன் காதில் விழவே இல்லை..!!

 

அத்தியாயம் 26

நம்பிக்கை பற்றியும் , நம்பிக்கை துரோகம் பற்றியும் முன்பே சொன்னேன் அல்லவா..? அதை சற்று ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்..!! இப்போது அதை சார்ந்த வேறொரு உண்மையை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன்..!!

மனித மனதில் நம்பிக்கையை விதைப்பது மிகவும் கடினம்..!! பொறாமையும், பழியுணர்வும், சுயநலமும், சூழ்ச்சியும் கொண்ட இந்த உலகத்தில்.. மனித மனதில் ஒருவர் மீதான நம்பிக்கையை விதைப்பது மிக மிக கடினம்..!!

சிறுவயதிலேயே திவ்யாவின் மனதில் அசோக் விதைத்த நம்பிக்கை விதை, வேரூன்றி வளர்ந்து ஒரு ஆலமரம் கணக்காக பிரம்மாண்டமாய் நின்றிருந்தது..!! ஆத்திரத்திலும், அவசரத்திலும், திவாகர் மீது இருந்த எரிச்சலிலும் அசோக் செய்த காரியம்.. ஒரே நொடியில் அந்த ஆலமரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது..!! நம்பிக்கையை உருவாக்குவது கடினமான காரியம் என்றால், உருவாக்கிய நம்பிக்கை உருக்குலைந்து போவது மிக மிக கொடுமையான விஷயம்..!! தனக்கு பிடித்த ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கை செத்து போய் விட்டது என்பதை அறிவது யாருக்குமே மிகுந்த வலியை தரக்கூடியது..!! அசோக்கிற்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது..!!

அசோக் மிக மிக மோசமான மனநிலையில் இருந்தான். விரக்தியின் உச்சம் என்ன என்பதை முழுவதுமாய் உணர்ந்தான். எப்படி என்று உதாரணம் சொல்ல வேண்டுமானால்.. 'சாலையில் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில், எதிரே வரும் லாரி தன்னை அடித்து தூக்கினால் கூட நன்றாக இருக்குமே' என்றெல்லாம் அவனுடைய காயம்பட்ட மூளை, அறிவில்லாமல் சிந்தித்தது..!!

திவ்யாவுடைய இதய சிம்மாசனத்தில், ஒரு சக்கரவர்த்தி போல அவன் வீற்றிருந்தது அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது அவளுடைய கால் செருப்பில் படிந்திருக்கும் ஒரு தூசைப் போலவே தன்னை உணர்ந்தான். அந்த அளவுக்கு திவ்யாவின் வார்த்தைகள் அவனை சுய இரக்கம் கொள்ள செய்தன.

திவ்யாவின் சுடு சொற்கள் அவனுடைய இதயத்தை கீறி ரணமாக்கியது என்றால், இனிமேல் அவள் தன்னிடம் பேசப்போவதே இல்லை என்ற நினைவு அந்த காயத்தில் எப்போதும் வெந்நீர் தெளித்து வேதனையை இன்னும் அதிகமாக்கியது. அதுவுமில்லாமல் அடுத்தநாள் காலையில் அவன் அக்கா வீட்டிற்கு சென்றபோது, எதிர்ப்பட்ட திவ்யா அவனை ஒரு அற்பப்புழு மாதிரி பார்த்த பார்வை.. இதயத்தில் இரத்தத்தையும், கண்களில் கண்ணீரையும் கசிய செய்தது..!!

சாப்பிடுவதற்காக அக்கா வீட்டிற்கு செல்வதை முடிந்த அளவு தவிர்த்தான். எப்போதாவது செல்ல நேர்ந்தாலும், திவ்யா அங்கு இருக்க மாட்டாள் என்று தெரிய வந்தால் மட்டுமே சென்றான். எப்போதும் அன்பாகவே பார்க்கும் திவ்யாவின் கண்கள், இப்போது அருவருப்பான பார்வையை வீசுவதை அசோக்கால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. செல்வாவுடன் சேர்ந்துகொண்டு, புவனா மெஸ்ஸிலேயே பாதி நேரம் சாப்பிடுவான். மீதி நேரம் பட்டினிதான்..!! நொந்து போயிருந்த அசோக்கிற்கு செல்வாதான் மிகவும் ஆறுதலாக இருந்தார்.

திவ்யாவோ வேறு மாதிரி மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் மீது வெறுப்பில் இருந்தாள். அவன்தான் நாடகமாடி, திவாகரை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டான் என்றே நம்பினாள். 'அசோக்கை எவ்வளவு நம்பினோம்.. அவன் இப்படி செய்துவிட்டானே..' என்ற வெறுப்புதான் அவளுடைய நெஞ்சில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. அசோக்கை நம்பி திவாகரை நிறைய காயப்படுத்திவிட்டோமே என்று மனம் வருந்தினாள்.

திவாகருக்கு திவ்யா திரும்ப கால் செய்தபோது, அவன் வேண்டும் என்றே ரொம்பவும் பிகு செய்தான். 'உன்னால் நான் எப்படி துடித்து போனேன் தெரியுமா..? வாழ்க்கையையே வெறுத்து விட்டேன்..!! இனி எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் இப்படியே இருந்து கொள்கிறேன்..!!' என்றெல்லாம் சொல்லி, திவ்யாவின் குற்ற உணர்ச்சியை கொழுந்து விட்டு எரிய வைத்தான். திவ்யா அழுது புலம்பி, திவாகரின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடினாள். அதன் பிறகே அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான்.

சித்ராவுக்கு அன்று அறைக்குள் நடந்த விஷயம் முழுவதுமாக தெரியாவிட்டாலும், என்ன நடந்திருக்கும் என்று எளிதாக யூகிக்க முடிந்தது. தம்பி மனம் காயப்பட்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள். அவனிடம் கேள்வி கேட்டு அந்த காயத்தை கிளற வேண்டாம் என்று நினைத்தாள். அவன் வீட்டிற்கு வருவதை தவிர்க்கவும், விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன், பொறுமையாக இருந்தாள்.

கார்த்திக்கின் பாடுதான் ரொம்ப கஷ்டம்..!! வீட்டில் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன என்று அவனால் உணர முடிந்தது. ஆனால் அது என்ன என்று சுத்தமாக அவனுக்கு விளங்கவில்லை. திவ்யாவும், அசோக்கும் திடீரென எலியும் பூனையுமாய் மாறிப்போனது ஏனென்று அவனுக்கு புரியவில்லை. அசோக்கிடமோ, தங்கையிடமோ அதுபற்றி கேட்டால்.. அவர்கள் கடித்து குதறி விடுவார்கள் என்று பயம்..!! மனைவியிடம் கேட்டால், அவளோ 'உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்..?' என்று யாரோ மூன்றாம் மனுஷனிடம் சொல்வது போல முகத்திலறைந்த மாதிரி சொன்னாள்.

அப்புறம் ஒரு பத்து நாட்களுக்கு மேற்சொன்ன நிலைதான்..!! அந்த பத்து நாட்களில் திவ்யாவிடம் பேசாமல் அசோக்கிற்கு பைத்தியம் பிடித்தாற்போல இருந்தது. திவ்யா தன்னை காதலிக்க வேண்டாம்.. தன்னை புரிந்துகொண்டு தன்னுடன் வந்து பேசிவிட மாட்டாளா என்றே ஏங்கினான்..!!

அவர்களது பிரிவு அசோக் அளவிற்கு திவ்யாவை பாதிக்கவில்லை என்றாலும், அவளும் அசோக்கின் இன்மையை உணராமல் இல்லை. அவள் பார்க்கும் பொருட்கள் எல்லாம், செல்லும் இடங்கள் எல்லாம் அவளுக்கு அசோக்கை நினைவு படுத்த தவறவில்லை. முதல் நாள் அசோக் எதிர்ப்பட்டபோது அவனை அருவருப்பாய் பார்த்து விரட்டினாள் எனினும், அடுத்த நாள் அதே நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டபோது, அசோக்காக இருக்குமோ என்று தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து ஏமாந்தாள். 'ஏன்டா அசோக் இப்படி பண்ணின.. ஏன்..? போடா..!!' என்று மனதுக்குள்ளேயே அசோக்கை அடிக்கடி திட்டிக்கொண்டாள்.

அசோக்கும் திவ்யாவும் பிரிந்த பதினோராம் நாள்.. மாலை ஐந்து மணி..!!

திவாகர் அந்த அகலமான, ஆள்நடமாட்டமற்ற சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். திவ்யாவுடைய கல்லூரி அவனுக்கு இடப்புறமாக கடந்து சென்றது. கல்லூரியை தாண்டியதும், காரின் வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டான். மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டே, சாலையின் இடப்புறமாக பார்வையை வீசிக்கொண்டே சென்றான். ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் அவ்வாறு கடந்ததும், தூரத்தில் ஒரு மரநிழலில் நின்றுகொண்டிருந்த திவ்யா கண்ணுக்கு அகப்பட்டாள்.

அவள் முன்பாக ஒரு மாருதி ஆல்ட்டோ நின்று கொண்டிருந்தது. இவன் அந்த காரை நெருங்க நெருங்கவே அந்த கார் கிளம்பி வேகமெடுத்து பறந்தது. திவ்யா முதலில் திவாகரின் காரை கவனிக்கவில்லை. கிளம்பிய காரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எதேச்சையாக திரும்பி திவாகரின் காரை பார்த்தவள், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அவளுடைய உதட்டில் உடனடியாய் ஒரு செயற்கை புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. கதவு திறந்து காருக்குள் ஏறிக் கொண்டாள்.

"யார் அது திவ்யா..?" திவாகர் ஆர்வமாய் கேட்டான்.

"எது..??"

"அந்த கார்ல..?"

"ஓ.. அதுவா..? அ..அவ.. என் க்ளாஸ்மேட்..!!"

"என்னவாம்..?"

"ஏண்டி இங்க தனியா நிக்குறேன்னு கேட்டா.. பிரண்டுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேன்.. போயிட்டா.. அவ்ளோதான்..!!"

"ஓ.. ஓகே ஓகே..!! ம்ம்ம்.. கெளம்பலாமா..?"

"ம்ம்.."

திவாகர் கியர் மாற்றி காரை கிளப்பினான். கழட்டியிருந்த குளிர் கண்ணாடியை மீண்டும் கண்ணுக்கு கொடுத்துவிட்டு, ஸ்டியரிங்கை வளைத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பெரிய ஷாப்பிங் மால் முன்பாக கார் நின்றது. அது ஐந்து அடுக்குகள் கொண்ட, அரைவட்ட வடிவில் கட்டப்பட்ட ஷாப்பிங் மால்..!! சென்னையில் மிகவும் பிசியான அந்த சாலையில், ஆடம்பரமாய் முளைத்திருந்தது.

அந்த ஷாப்பிங் மாலின் கீழ்த்தளத்தில், கட்டிடத்துக்கு மையமாக ஒரு ஃபவுன்டைன்.. மேல் நோக்கி சரம் சரமாய் நீர் துப்பிக் கொண்டிருந்தது..!! அதை சுற்றி வெண்ணிற டேபிள்களும், டேபிளுக்கு நான்கு சிவப்பு நிற நாற்காலிகளுமாய் போடப்பட்டு.. அந்த திறந்த வெளி உணவகம்..!! வடக்கிந்திய சாட் உணவகம்..!! அங்குதான் திவ்யாவும் திவாகரும் சென்றார்கள்..!! ஃபவுன்டைன் அருகிலேயே ஒரு டேபிள் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். இருவரும் அமைதியாக மெனு கார்ட் புரட்டினார்கள்.

"டூ ப்ரெட் ரோல்.. ஒன் ஆலு டிக்கி.. டூ நிம்பு பானி..!!"

திவாகர் பேரரிடம் ஆர்டர் செய்ய, அவ்வளவு நேரம் மெனுகார்ட் புரட்டிய திவ்யா ஏமாற்றமாய் அவனுடைய முகத்தை ஏறிட்டாள். 'என்ன சாப்பிடுகிறாய்..?' என்று தனது விருப்பத்தை அவன் கேட்கவில்லையே என்ற ஏமாற்றம் அது..!! அசோக்கும் அவளும் தனியாக ரெஸ்டாரன்ட் சென்ற நினைவுகள், இப்போது ஏனோ பட்டென்று அவள் உள்ளத்தில் வந்து அலை அலையாய் மோதின..!!

"ப்ச்.. சைட் அடிக்கிறதுக்குத்தான் ரெஸ்டாரன்ட் வர்றியா நீ..? ஜொள்ளு வுட்டது போதும்.. இந்தப்பக்கம் திரும்பு..!!" திவ்யா அசோக்கின் தலையில் குட்டுவாள்.

"ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ... விட மாட்டியே நீ.. வில்லி..!!" அசோக் உச்சந்தலையை தேய்த்து விட்டுக் கொள்வான்.

"நான் ரோட்டியும், பன்னீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் பண்ணப் போறேன்டா.. உனக்கு என்ன வேணும்..??"

"ஆமாம்.. நான் என்ன ஆர்டர் பண்ணினாலும், கடைசில நீதான் அதையும் சேர்த்து நல்லா மொக்கப் போற.. ஏதோ ஒன்னு நீயே ஆர்டர் பண்ணித்தொலை..!!" என்று சலிப்பாக சொல்பவன், அடுத்த நொடியே

"ஹேய் திவ்யா.. அந்த பச்சை சல்வாரை பாரேன்.." என்று உற்சாகமாவான்.

'என்னை காதலிக்கிறான் என்று நான் கொஞ்சம் கூட உணர முடியாதவாறு.. எப்படி எல்லாம் நடித்து ஏமாற்றிவிட்டான்..??' திவ்யா பழைய நினைவு கலைந்து மீண்டாள். இப்போது திவாகர் திவ்யாவிடம் திரும்பினான். திவாகருக்கு திவ்யாவுடைய ஏமாற்றப் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. கேஷுவலாக கேட்டான்.

"ப்ரெட் ரோல் உனக்கு பிடிக்கும்ல திவ்யா..?"

"ம்ம்.. பி..பிடிக்கும்.." திவ்யா பொய் சொன்னாள்.

"ப்ரெட் ரோல்தான் இந்த ரெஸ்டாரன்ட்ல என்னோட ஃபேவரிட் தெரியுமா..?

"ஓ.!!"

"சாப்பிட்டிருக்கியா நீ..?"

"ம்ம்.. சாப்பிட்டிருக்கேன்..!!"

"ஹாஹா.. வேற எங்கயாவாது சாப்பிட்டிருப்ப..? இங்க சாப்பிட்டு பாரு.. அப்படியே அசந்து போயிடுவ..!!" என்று பெருமையாக சொன்னான்.

"இ..இல்ல.. இங்கதான் சாப்பிட்டிருக்கேன்.."

"இங்கயா..? அப்போ.. ஏற்கனவே இந்த ரெஸ்டாரன்ட்க்கு வந்திருக்கியா நீ..??"


"ம்ம்.. நானும் அசோக்கும் இங்க அடிக்கடி வருவோம்..!!"

அவ்வளவுதான்..!! திவாகர் பட்டென டென்ஷன் ஆனான். அவனுடைய புன்னகை முகம் உடனடியாய் 'உர்ர்ர்..' என்று இறுக்கமாகிப்போனது. திவ்யாவையே சில வினாடிகள் முறைத்து பார்த்தவன், அப்புறம்

"டேமிட்..!!" என்று கத்தியவாறு டேபிளை ஓங்கி குத்தினான்.

"எ..என்னாச்சு..?" என்றாள் திவ்யா பதற்றமாக.

"கொஞ்ச நேரம் கூட அவனைப் பத்தி பேசாம இருக்க முடியாதா உன்னால..?"

"ஸா..ஸாரி.." திவ்யா மெல்லிய குரலில் சொன்னாள்.

"ப்ச்.. பண்றதையும் பண்ணிட்டு என்ன ஸாரி..??"

"ஏ..ஏதோ வாய்தவறி.."

"வாய் தவறியா..?? பொய் சொல்லாத திவ்யா..!! கொஞ்ச நேரம் முன்னாடி கார்ல வரப்போ.. 'டி நகர் போக பத்து நிமிஷம் ஆகும்'னு சொன்னா.. 'இல்லை.. அசோக் கூட பைக்ல போயிருக்கேன்.. அஞ்சு நிமிஷம்தான் ஆகும்'னு சொல்ற..!! ட்ராபிக்ல நிக்கிறப்போ.. 'நம்ம நாட்டோட பிரச்னைக்கு இந்த பாப்புலேஷன்தான் காரணம்'னு சொன்னா.. 'ம்ம்.. அசோக் கூட அப்படித்தான் அடிக்கடி சொல்லுவான்'னு சொல்ற..!! அவன் பேரை சொல்லாம.. ஒரு அஞ்சு நிமிஷம்.. உன்னால என்கிட்டே பேச முடியாதா..?? என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற நீ..??"

"ப்ளீஸ்.. விட்ருங்க.." அவளுடைய குரல் இப்போது கெஞ்சலாக ஒலித்தது.

"அவனை உன்னால மறக்க முடியலைல..? எந்த நேரமும் அவன் நெனைப்பாவே இருக்கேல..?"

"ச்சே.. அ..அப்டிலாம் இல்லை.. நாங்க சின்ன வயசுல இருந்தே ஒண்ணா இருந்துட்டோம்.. இ..இப்போ திடீர்னு பேசாம இருக்குறது ஒரு மாதிரி இருக்கு.. வேற ஒன்னும் இல்ல..!! சீக்கிரமே அவனை சுத்தமா மறந்துடுவேன்..!!"

"இங்க பாரு திவ்யா.. அவன் உனக்கும், நம்ம காதலுக்கும் பெரிய துரோகம் செஞ்சவன்..!!"

"ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!"

"நீ அவனைப் பத்தி பேசுறது சுத்தமா எனக்கு புடிக்கலை..!!"

"சரி.. இ..இனி பேசலை.. மன்னிச்சுடுங்க..!!"

"டேமிட்..!! அவன் ஒரு வக்கிரமான புத்தி உள்ளவன்.. அவனைப்போய் இன்னும் நீ நெனைச்சுக்கிட்டு.." திவாகர் கோபமாக சொல்ல, திவ்யா இப்போது நெற்றி சுருக்கினாள்.

"என்ன பேசுறீங்க நீங்க..? அவனுக்கு என்ன வக்கிரமான புத்தி..?"

"நான் தற்கொலை பண்ணிக்க போனப்போ.. நான் சாகட்டும்னு நெனச்சவந்தான அவன் ..? உன் மேல அவனுக்கு இருந்த வெறில.. ஒரு உயிர் போனாக்கூட பரவாலைன்னு நெனச்சவந்தான..?"

"சேச்சே.. அப்படிலாம் அவனை நெனைக்காதீங்க.. ப்ளீஸ்.."

"நான் எங்க நெனைச்சேன்.. நீதான அன்னைக்கு அவனை அப்படி திட்டினதா சொன்ன..?"

"அ..அது.. அது அன்னைக்கு ஏதோ அவன் மேல எனக்கு இருந்த கோவத்துல.. ஒரு அவசரத்துல அப்படி எல்லாம் சொல்லிட்டேன்..!! ஆனா.. என் மனசார நான் அவனை அப்படி நெனைக்கலை..!! அன்னைக்கு நீங்க அவன்கிட்ட ஃபோன்ல பேசுனதை வச்சு.. நீங்க நடிக்கிறீங்கன்னு தப்பா நெனைச்சுட்டான்.. அதான் ஃபோனை கட் பண்ணிட்டான்.. மத்தபடி உங்க உயிர் போகனும்னுலாம் அவன் சத்தியமா நெனைச்சிருக்க மாட்டான்.. அப்படி எல்லாம் அவன் வக்கிர புத்தி புடிச்சவன் இல்ல..!!"

"ஓஹோ..??"

"ஏதோ என் மேல இருந்த ஆசைல.. இப்படி எல்லாம் பண்ணிட்டான்..!! மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நெனைக்க மாட்டான்..!!"

"ம்ம்.. சர்ட்டிபிகேட்லாம் பலமா இருக்குது.. ரொம்பதான் அவன் மேல நம்பிக்கை போல..?"

"அப்டிலாம் இல்ல.. அதான்.. நான் அவன் மேல வச்சிருந்த நம்பிக்கையை எல்லாம்.. ஒட்டுமொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டானே..?"

"அப்புறமும் ஏன் இப்படி அவனுக்காக உருகுற..? நீ உருகுறதை பாத்தா.. நாளைக்கே அவன் காலுல விழுந்து.. நீ திட்டுனதுக்காக மன்னிப்பு கேட்டாலும் கேட்ப போலருக்கு..!!"

"நோ நோ..!! அப்டிலாம் என்னை தப்பா நெனச்சுடாதீங்க.. நான் ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டன்னா.. ஜென்மத்துக்கும் அதுதான்..!! அவன் கூட பேசுறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. இனி எப்போவும் பேச மாட்டேன்.. என்னை பொறுத்தவரை.. எனக்கும், அசோக்குக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு..!!"

திவ்யா அப்படி உறுதியான குரலில் சொல்லவும், திவாகரின் முகம் இப்போது ஒருவித மலர்ச்சிக்கு போனது. மீண்டும் அவனது உதட்டில் அந்த வசீகர புன்னகை..!!

ஆர்டர் செய்த ஐட்டங்கள் டேபிளுக்கு வந்து சேர்ந்தன. இருவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். ஒரு பத்து நிமிடங்கள்..!! எல்லாம் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில்தான், திவ்யாவின் துப்பட்டாவில் சாட் மசாலா சிந்தியது. அதை வாஷ் செய்வதற்காக கை கழுவும் இடத்துக்கு சென்றாள். துப்பாட்டாவின் கறையை நீர் கொண்டு துடைத்தாள். ஓரளவு கறை நீங்கி சுத்தமானதும் திருப்தியானாள். முகத்தையும் நீர் வாரி இறைத்து கழுவி கொண்டாள்.

டிஷ்யூ பேப்பர் உருவி நீர் வழிந்த முகத்தை துடைத்தவாறே நிமிர்ந்தபோதுதான் அதை கவனித்தாள். அவளுக்கு எதிரே இருந்த கண்ணாடி, அவளுக்கு பின்புறம் தூரமாக அமர்ந்திருந்த திவாகரை காட்டியது. தன் செல்போனில் யாரிடமோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். ஓரிரு வினாடிகள் அதை கவனித்தவள் அப்புறம் இயல்பாக முகத்தை துடைத்துக் கொண்டு, அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி நடந்தாள்.

"வாஷ் பண்ணியாச்சா..??" திவாகர் காலை கட் செய்தவாறே கேட்டான்.

"ம்ம்.."

என்றவாறே திவ்யா அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே அவளுடைய தோள் மீது கைபோட்டு, திவாகர் அவளை தன்னோடு இறுகிக் கொண்டான். திவ்யா அதை எதிர்பார்க்கவில்லை. அவன் அந்த மாதிரி திவ்யாவிடம் நடந்துகொள்வது இதுவே முதல்முறை. திவ்யாவுக்கு ஏனோ அவனுடைய செய்கை பிடிக்கவில்லை. முகத்தை சுளித்தாள். அவஸ்தையாக நெளிந்தாள்.

"எ..என்ன இது திவாகர்.. கையை எடுங்க.. ப்ளீஸ்.."

"ஏன்.. நான் உன் தோள் மேல கை போட கூடாதா..? எனக்கு அந்த உரிமை இல்லையா..?"

"இ..இருக்கு.."

"அப்புறம் என்ன..?"

"இ..இப்படி பப்ளிக்கா.. எல்லாரும் பாக்குறாங்க.."

"பாத்தா பாத்துட்டு போகட்டும்.."

"ப்ளீஸ்ங்க.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. கையை எடுங்க.. ப்ளீஸ்..!!"

திவ்யா கெஞ்சவும், திவாகர் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே சலனமில்லாமல் பார்த்தான். அப்புறம் அவள் தோள் மீதிருந்து கையை எடுத்துக் கொண்டான். புன்னகைத்தான். குரலை உடனடியாய் உற்சாகமாக மாற்றிக் கொண்டு சொன்னான்.

"சரி.. நாளைக்கு என்னோட பர்த்டே.. ஞாபகம் இருக்குல..?"

"ம்ம்.. இருக்கு.."

"நைட்டு பன்னண்டு மணிக்கு நீ எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணனும்.. சரியா..?"

"ம்ம்.. பண்றேன்.."

"நாளைக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கேன்.. கண்டிப்பா நீ கலந்துக்கனும்..!!"

"பா..பார்ட்டியா..???" திவ்யா திகைத்தாள்.

"ஹேய் ஹேய்.. நீ நெனைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் ஃபுட்.. நோ ட்ரிங்க்ஸ்..!! ஓகேவா..?"

"ம்ம்.. ஓகே.. வர்றேன்..!!"

"சரி.. ப்ரெட் ரோல் கொஞ்சம் மிச்சம் இருக்கு பாரு.. சாப்பிட்ரு.."

"இ..இல்லைங்க.. எனக்கு போதும்..!!"

"ஏன்..?"

"சாப்பிட முடியலை.. வயிறு ஃபுல் ஆயிடுச்சு..!! ம்ம்ம்.. சரி எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!"

"என்ன.. அதுக்குள்ளே கிளம்பிட்ட..?"

"இல்லை.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. ஒரு புக் வாங்கணும்.. புக் ஷாப் போயிட்டு அப்படியே வீட்டுக்கு போயிடுவேன்..!!"

"இரு.. நான் ட்ராப் பண்றேன்..!!"

"இல்ல.. பரவால.. நான் ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்..!!"

"ஓகே.. யுவர் விஷ்..!! பை..!!" திவாகர் தோளை குலுக்கிக்கொண்டே சொன்னான்.

"பை.."

திவ்யா சொல்லிவிட்டு தன் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். மாட்டியவள், பேகின் சைட் ஜிப் திறந்திருப்பதை ஓரிரு வினாடிகள் வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் ஜிப்பை இழுத்து மூடிவிட்டு, அந்த ஷாப்பிங் மாலின் எக்ஸிட் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்தாள். ரோட்டின் ஓரமாய் நின்றுகொண்டு, ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று தூரமாய் பார்த்தாள்.

அப்போது.. ஏதேச்சையாகத்தான் அது அவளது கண்ணில் பட்டது..!! அது.. அசோக்கின் பைக்..!! ஷாப்பிங் மால் முன்பாக வரிசையாக பார்க் செய்யப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களுக்குள், இடையில் செருகப்பட்டிருந்த அசோக்கின் பைக், தனியாய் அவள் கண்களில் விழுந்தது. உடனே அவளிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'அசோக் இங்குதான் இருக்கிறானா..??' சில வினாடிகள் சுற்றும் முற்றும், தலையை திருப்பி திருப்பி பார்த்தாள். எங்கும் அவன் தென்படவில்லை..!! அப்புறம் தயங்கி தயங்கி மெல்ல அந்த பைக்கை நெருங்கினாள்..!!

அந்த பைக்கை பார்க்க பார்க்க.. அவள் மனதுக்குள் ஒரு இனம்புரியாத அழுத்தம்.. ஒரு பிடிபடாத ஏக்கம்.. ஒரு காரணமறியாத சோகம்..!! பைக்கின் சீட்டில் அவளுடைய பிஞ்சு விரல்களை அப்படியே படர விட்டாள். பச்சை குழந்தையை தடவுவது போல வாஞ்சையாக அந்த பைக்கை தடவி கொடுத்தாள்.

'எத்தனை நாட்கள் இந்த பின் சீட்டில் அமர்ந்து பயணித்திருக்கிறேன்..? இந்த கம்பியைத்தானே பிடித்துக் கொள்வேன்.. பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அவன் இடுப்பை இறுகப் பற்றிக் கொள்வேன்..? அவன் பைக்கை சீற செய்து பறக்கையில், 'ஊஊஊஊ' என்று உற்சாகமாக கத்தி ஊளையிடுவேன்..? சிக்னலுக்காக அவன் காத்திருக்கையில், என் மூக்கில் துளிர்க்கும் வியர்வையை அவன் முதுகில் துடைத்துக் கொள்வேன்..?? அவ்வளவுதானா..??? எல்லாமே முடிந்து விட்டதா..??? அந்த இனிய கனவு இப்போது கலைந்து விட்டதா..??? இனி நான் இந்த இருக்கையில் அமரவே போவதில்லையா..???'

"எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் வழி விடுறீங்களா..? பைக்கை எடுக்கணும்..!!"

சத்தம் கேட்டு படக்கென திரும்பிய திவ்யா அப்படியே அதிர்ந்து போனாள். அவளுக்கு பின்னால் வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தான். கண்களுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி..!! அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் நின்றிருக்க, திவ்யாதான் உடனடியாய் முகம் வெளிறிப் போனாள். திகைத்தாள்.. தடுமாறினாள்.. பதற்றமாய் விலகி நின்றாள்.. உளறினாள்..!!

"ஸா..ஸாரி.. ஸாரி.."

அசோக் திவ்யாவை ஒரு பொருட்டாக கூட மதியாமல், பைக்கை வெளியே எடுத்தான். கிக்கரை ஒரே உதையாக உதைத்து கிளம்பி, சர்ரென சாலையில் செலுத்தி பறந்தான்..!! அவன் கண்ணில் இருந்து மறையும் வரை.. அதன்பிறகும் அந்த திசையையுமே.. திவ்யா நெடுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இதயம் திடுக் திடுக்கென துடிக்க, அவளுக்குள் இப்போது ஒரு புதுவித தவிப்பு..!!

'ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறான்..?? என்னைப் பார்க்க நேர்ந்ததால் வந்த கோபமா..?? அதற்குள் இந்த அளவுக்கு என்னை வெறுத்து விட்டானா..?? ஏன் வெறுக்க மாட்டான்.. நான் வீசி எறிந்த வார்த்தைகள் அப்படி..!! ஐயோ.. கடவுளே.. இப்படி கண்மண் தெரியாத வேகத்தில் பறக்கிறானே.. அவன் பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும்..!!' திவ்யா கண்களை மூடி மனமார கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு, அவள் செல்ல நினைத்த புக் ஷாப்பிற்கு சென்றாள். புக் வாங்கிக்கொண்டு நடந்தே சென்று மெரீனா பீச்சை அடைந்தாள். நிலவு வெளிச்சத்தில் எழும்பிய வெள்ளி அலைகளையே வேடிக்கை பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தாள். அவளுடைய நெஞ்சக் கடலிலும் பல்வேறு குழப்ப அலைகள்..!! அதையே சிந்தித்து சிந்தித்து அவள் மூளை செயலிழந்து போனது மாதிரி தோன்றியது..!!

திவ்யா வீட்டுக்கு திரும்புகையில் இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது. லிஃப்டுக்குள் இருந்து வெளிப்பட்டதுமே வீட்டு வாசலில் நின்றிருந்த சித்ராவின் முகத்தில்தான் விழிக்க வேண்டியிருந்தது. யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். வீட்டுக்குள் சிக்னல் கிடைக்கவில்லை போலிருக்கிறது.

"ஐயோ.. அப்டிலாம் இல்லப்பா .............. ஆமாம்ப்பா .............. இல்லப்பா.. நான் ............... ம்ம்.. சரிப்பா .............. சரி சொல்றேன் .............. "

அசோக்கின் அப்பா அடுத்த முனையில் இருக்கிறார் என்று திவ்யாவால் உடனடியாய் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கும் அங்கும் அலைந்து பேசிகொண்டிருந்த சித்ராவை கண்டுகொள்ளாமல், அவளை கடந்து திவ்யா வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் இருந்த டிவியில் ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதை திரும்பிகூட பாராமல் தன் அறைக்குள் சென்றாள். முகத்தை கழுவி ரெஃப்ரஷ் செய்துகொண்டு, வேறு உடை மாற்றிக் கொண்டாள். மீண்டும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியே இப்போது சித்ராவை காணோம்.

கொஞ்ச நேரம் குழப்பமாக சித்ராவை தேடிய திவ்யா, அப்புறம் கதவை அறைந்து சாத்திவிட்டு, பக்கவாட்டு படிக்கட்டில் ஏறி மொட்டை மாடிக்கு சென்றாள். கொஞ்ச நேரம் கைகட்டி அமைதியாக நின்றிருந்தாள். இருண்ட வானத்தையும், வட்ட நிலவினையும், நிலவு கடக்கும் மேகங்களையும், மினுக்கும் நட்சத்திரங்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து, அந்த கோணத்தில் இருந்து பார்த்தால், அடுத்த தெருவில் அசோக் தங்கியிருக்கும் அறையும் அதை சுற்றிய மொட்டை மாடியும், உயரமான தென்னை மரங்களும் தெளிவாக தெரியும். அவளுடைய மனதை ஏதோ ஒரு ஏக்கம் வந்து பிசைய, தூரமாய் தெரிந்த அந்த மொட்டை மாடியையே திவ்யா வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அறைக்கு வெளியே எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பு, ஓரளவு வெளிச்சத்தை அந்த மொட்டை மாடி முழுதும் பரப்பியிருந்தது.

அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அசோக் அவனுடைய அறையில் இருந்து வெளிப்பட்டான். அவன் பின்னாலேயே செல்வாவும்..!! அசோக் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய கால்கள் பின்னிக்கொள்ள தடுமாறினான்..!! வெளியே வந்தவன், அப்படியே மொட்டை மாடியில் நின்றவாறே டான்ஸ் ஆட ஆரம்பித்தான். சாவுக்கு ஆடுவார்களே.. அந்த மாதிரி ஒரு குத்தாட்டம்..!! கன்னாபின்னாவென்று.. நளினம் என்பது கொஞ்சமும் இன்றி அவன் இஷ்டத்திற்கு ஆடினான்..!!

செல்வா அவனை சமாதானம் செய்து, அறைக்குள் மீண்டும் அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அசோக் அவருடைய பிடியில் இருந்து திமிறி விடுபட்டு, மனம் போன போக்கில் கையையும் காலையும் ஆட்டி, வெறித்தனமாக ஆடிக் கொண்டிருந்தான். அவனை நிறுத்த கொஞ்ச நேரம் முயன்று பார்த்த செல்வா, அப்புறம் அந்த முயற்சியை கைவிட்டார். கைகளை கட்டிக்கொண்டு ஓரமாய் நின்று அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

அந்தக் காட்சியை பார்த்த திவ்யாவுக்கு, இதயத்தில் யாரோ முள் செருகுவது போலிருந்தது.. வலித்தது..!! அவளையும் அறியாமல் அவளுடைய கண்களில் இருந்து நீர் கசிந்தது..!! உதடுகள் படபடக்க, உடம்பெல்லாம் ஒரு வெடவெடப்பு..!!

'ஏண்டா அசோக் இப்படி ஆடுற..?? என்னடா ஆச்சு உனக்கு..?? யார் மேல உனக்கு கோவம்..?? என் மேலயா..?? என் மேலயா அசோக்..?? உன்னை ரொம்ப காயப் படுத்திட்டேனாடா..?? என்னை மன்னிச்சுடுடா அசோக்.. என்னை மன்னிச்சுடு..!! ப்ளீஸ்.. இப்படிலாம் பண்ணாதடா.. உள்ள போ.. நிம்மதியா படுத்து தூங்கு..!!'

திவ்யா மனதுக்குள்ளேயே அசோக்கிடம் மன்றாடிக் கொண்டிந்தாள். அப்போதுதான்.. சற்றுமுன் அவர்கள் வீட்டில் காணாமல் போன சித்ரா, அங்கே மொட்டை மாடியில் முளைத்தாள். தம்பியின் நிலையை பார்த்து அதிர்ந்து போனாள். அவனை சமாதானம் செய்ய முயன்றாள். கைகளை பிடித்தாள். அசோக் அவளுடைய கையை வெடுக்கென உதற, ஆத்திரமுற்றவளாய் அவனுடைய கன்னத்திலேயே 'பளார்.. பளார்..' என அறைவிட்டாள்..!!

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் திவ்யாவால் அந்த காட்சியை காண சகிக்கவில்லை. கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே படியிறங்கி கீழே ஓடிப்போனாள். தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டவள், 'ஓ..'வென்று கத்திக்கொண்டே சென்று படுக்கையில் வீழ்ந்தாள். குலுங்கி குலுங்கி அழுதாள். அசோக்கின் நினைவுகளே அவளுடைய நெஞ்சத்தை அழுத்தியிருக்க, உணவு பற்றிய நினைப்புமின்றி, திவாகருக்கு வாழ்த்து சொல்லவும் மறந்து போனவளாய் அழுதுகொண்டே உறங்கிப் போனாள்.

அடுத்தநாள் மாலை.. திவ்யா சீக்கிரமே கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிவிட்டாள். கதவை திறந்து விட்ட சித்ரா, அவளை ஒரு மாதிரி கூர்மையாக பார்த்தாள். திவ்யா அவளுடைய பார்வையை கண்டுகொள்ளாமல், அவளை கடந்து உள்ளே சென்றாள். அவளுடைய அறையை அடைந்தவள், முகம் கழுவிக்கொண்டு வெளியே செல்ல.. திவாகரின் பிறந்த நாள் விருந்துக்கு செல்ல.. தயாரானாள்..!! காலையிலேயே தேர்வு செய்து, தயாராக மடித்து வைத்திருந்த புதிய உடையை எடுத்து அணிந்து கொண்டாள். திவாகருக்கு பிடிக்கவேண்டுமே என்று கவனமாக மேக்கப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள்.

எல்லாம் முடிந்து அவள் கிளம்பும் தருவாயில்தான், அவளுடய அறையின் கதவு 'லொட்.. லொட்..' என்று தட்டப்பட்டது. 'யார் அது..?' என்று குழப்பமாய் திரும்பியவள், வாசலில் அவள் கண்ட காட்சியில், அப்படியே திகைத்து போனாள்.

'திவ்யா வாசலில் அப்படி என்ன கண்டாள்..? அவளுடைய அதிர்ச்சிக்கு காரணம் என்ன..?' என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், அடுத்து வரப்போகிற அத்தியாயங்களில் நேற்று நடந்த சில சம்பவங்களை இன்னும் கொஞ்சம் அருகில் சென்று உற்று நோக்கலாம்..!!

 

அத்தியாயம் 27

நேற்று மாலை 4.50

க்ளாஸ் முடிந்ததுமே நண்பிகளின் பார்வையில் இருந்து நைசாக நழுவி, கல்லூரி காம்பவுண்ட் விட்டு திவ்யா வெளியே வந்திருந்தாள். திவாகருக்காக அந்த மர நிழலில் காத்திருந்தாள். அடிக்கடி மணிக்கட்டை திருப்பி கைக்கடிகாரத்தை பார்த்தாள். லேசாக எரிச்சலுற்றாள். 'ச்சே.. இவர் ஏன் இப்படி செய்கிறார்..? எப்போது எங்கே சந்திப்பதாக இருந்தாலும், அரை மணி நேரம் தாமதமாகவே வருகிறார்..!! இதுவே அசோக்கானால் சொன்ன நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே வந்து நிற்பான்..!!'

அதே நேரம் அவளுக்கு இன்னொரு எண்ணமும் கூடவே ஓடியது. 'சில நேரங்களில் அசோக்கிற்காக இந்த மாதிரி காத்திருக்க வேண்டியதாக இருந்தாலும், இப்படி எல்லாம் நான் அப்போது எரிச்சல் அடைந்தது இல்லையே.. அது ஏன்..??' மேலும் கொஞ்ச நேரம் அவளுடைய மூளை அந்த மாதிரியே யோசித்துக் கொண்டிருக்க, உடனடியாய் தன் தலையை சிலுப்பி, அந்த சிந்தனையை நிறுத்தினாள். 'ச்சே.. என்ன நான்..?? இப்போது எதற்காக அசோக்கையும் அவரையும் கம்பேர் செய்கிறேன்..??' திவ்யா தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.

அப்போதுதான் அவள் முன்பாக அந்த மாருதி ஆல்ட்டோ வந்து நின்றது. காரைப் பார்த்ததும் திவ்யா சற்றே துணுக்குற்றாள். அதற்குள் கார்க்கண்ணாடி கீழே இறங்கிக்கொள்ள, உள்ளிருந்து அஞ்சு கையசைத்தாள். சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.

"ஏய்.. என்னடி இங்க நின்னுட்டு இருக்குற..?"

"ஒ..ஒன்னும் இல்லடி.. சும்மாதான்.. ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்..!!" திவ்யா திணறினாள்.

"ஆட்டோக்கா..? ஆட்டோக்குனா காலேஜ் என்ட்ரன்ஸ்லயே வெயிட் பண்ணலாமே.. இங்க வந்து நின்னுட்டு இருக்குற..?"

"சு..சும்மா அப்படியே கொஞ்ச தூரம் வாக்கிங் போகலாம்னு.."

"நாலு மணி வெயில்.. சுள்ளுன்னு அடிக்குது.. உனக்கு வாக்கிங் கேக்குதா..?? சரி வா.. எங்க போகணும்னு சொல்லு.. நான் ட்ராப் பண்றேன்.."

"ப..பரவாலடி.. நீ கெளம்பு.. நான் ஆட்டோலேயே போயிக்குறேன்.."

"ஏய்.. வான்றேல.. வா..!!"

"இல்லடி.. நீ போ..!!"

அவ்வளவு சொல்லியும் திவ்யா மறுக்க, அதுவுமில்லாமல் அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றாமல் போக, இப்போது அஞ்சுவுக்கு லேசாக சந்தேகம் வந்தது. சில வினாடிகள் திவ்யாவையே கூர்மையாக பார்த்தவள், அப்புறம் கார் இன்ஜினை சாவி திருப்பி அணைத்தாள். கதவு திறந்து வெளியே வந்தாள். கண்களை இடுக்கி திவ்யாவின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் குறும்பான குரலில் கேட்டாள்.

"யாருக்காகடி வெயிட் பண்ணுற..?"

"அதான் சொன்னனே.. ஆட்டோக்காக..!!"

"அறைஞ்சுருவேன்.. உண்மையை சொல்லு..!!"

"உண்மையைத்தாண்டி சொல்றேன்.."

"நடிக்காத.."

"நான் ஏன் நடிக்கணும்..?"

"ஹாஹா.. எல்லாம் எனக்கு தெரியும்டி..!!"

"என்ன சொல்ற நீ..?"

"நீ யாருக்காக வெயிட் பண்ணுறேன்னு எனக்கு தெரியும்..!!"

"யாருக்காக..?"

"அசோக்குக்காத்தான வெயிட் பண்ணுற..?"

"ப்ச்.. இல்ல.."

"பொய்..!! நீயும் அவரும் மாத்தி மாத்தி உருகிக்கிறது.. லவ்வோ லவ்வோ லவ்வாங்கி பண்றது.. எனக்கு எல்லாம் தெரியும் மவளே..!!"

"என்னடி லூசு மாதிரி உளர்ற..? நாங்க லவ் பண்றோமா..? அப்டின்னு அந்த அசோக் சொன்னானா..?"

"அப்போ பண்ணலையா..?"

"இல்லை.."

"ம்ம்ம்ம்... சரி உன் மொபைலை கொடு.. எனக்கு அசோக் நம்பர் வேணும்..!!"

"அது எதுக்கு உனக்கு..?"

"இங்க பாரு.. இது பொண்ணுக பசங்ககிட்ட சொல்லுற டயலாக்.. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட சொல்லக் கூடாது.. நம்பர் சொல்லு.. எனக்கு அவர்கிட்ட பேசணும்.."

"எதுக்குன்னு சொல்லு.. தர்றேன்.."

"ம்ம்.. நீதான் லவ் பண்ணலைன்னு சொல்றியே.. அவர் வேற கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்குறாரு.. நான் அவருக்கு ரூட்டு போடலாம்னுதான்..!!"

"ஓஹோ..?? ஏன்.. ஒருநாள் பேசுனதுலையே உன்னை மயக்கிட்டானா..?" இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித ஏரிச்சல் ஏறியிருந்தது.

"அப்படியே வச்சுக்கோ.. நீ நம்பர் குடு..!!"

"குடுக்க முடியாது.. போடீ..!!" திவ்யா கத்தினாள்.

"ஹாஹா.. இதுக்காகத்தான் நம்பர் கேட்டேன்.."

"எதுக்காக..?"

"நீ டென்ஷன் ஆகுறியான்னு பாக்குறதுக்காக..!! அப்பா.. அவரை லவ் பண்ணப் போறேன்னு சொன்னதும் எப்படி உனக்கு கோவம் வருது..!! சரி சரி.. கோச்சுக்காத கண்ணு.. எனக்கு அவரை லவ் பண்ற மாதிரிலாம் ஒன்னும் ஐடியா இல்ல..!! நீயே வச்சுக்கோ உன் ஆளை..!! நான்லாம் போட்டிக்கு வர மாட்டேன்..!!" அஞ்சு கிண்டலாக சொல்ல, திவ்யா டென்ஷனானாள்.

"இப்போ நீ என்கிட்டே செருப்படி வாங்காம போக மாட்டேன்னு நெனைக்கிறேன்..!!"

"ஏண்டி..??"

"பின்ன.. லூசு மாதிரி உளறிட்டு இருந்தா..?? உனக்கு அவன் நம்பர்தான வேணும்..? சொல்றேன் நோட் பண்ணிக்கோ.. அவனை லவ் பண்ணிக்கோ.. மேரேஜ் பண்ணிக்கோ.. என்ன எழவை வேணா பண்ணிக்கோ.. எனக்கு ஒரு கவலையும் இல்ல..!!"

"ஏய்.. சீரியஸா சொல்றியா..?"

"பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..?"

"அப்போ நெஜமாவே நீ அவரை லவ் பண்ணலையா..?"

"பண்ணலை பண்ணலை..!! அவன்தான் என்னை லவ் பண்றான்.. அதுகூட எனக்கு போன வாரந்தான் தெரியும்..!! அவனால நானே செம கடுப்புல இருக்கேன்.. போயிடு..!!"

"அப்புறம் யாருக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருக்குற..?"

"நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்.. அவருக்காகத்தான் இப்போ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. போதுமா..?"

"வேற ஒருத்தரா..? அது யாரு..?"

"அவர் பேர் திவாகர்..!!"

"அவர் எப்படி பழக்கம்..?"

"ஏன்..? ஆன்லைன் மூலமா..!!"

"எத்தனை நாளா அவரை உனக்கு தெரியும்..?"

"ம்ம்ம்.. ஒரு ரெண்டு மூணு மாசமா..?"

"அசோக்கோட லவ்வை உதறி எறிஞ்சுட்டு.. அந்த திவாகரைத்தான் நீ கல்யாணம் செய்துக்க போறியா..?"

"ஆ..ஆமாம்.." திவ்யா சொல்லி முடிக்கும் முன்பே,

"போடீ லூசு..!!" அஞ்சு ஆத்திரமாக கத்தினாள்.

"ஏண்டி கத்துற..?"

"அப்புறம் என்ன..? அசோக் பத்தி நீயே எங்கிட்ட எவ்வளவு சொல்லிருக்குற.. சின்ன வயசுல இருந்து உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கார்னு..!! அவரை விட.. நேத்து வந்த அந்த திவாகர்தான் உனக்கு பெருசா போயிட்டானா..? உன்னை மாதிரி தப்பா முடிவெடுக்குற ஒருசில பொண்ணுகளாதான் எல்லா பொண்ணுகளுக்குமே கெட்ட பேர்டி.. பொண்ணுகன்னாலே நல்லவனை நம்ப மாட்டாளுகன்னு..!!"

"இங்க பாரு அஞ்சு.. நீ விஷயம் தெரியாம பேசுற.. அசோக் பத்தி உனக்கு முழுசா தெரியாது..!!"

"ஆமாம்.. அவரைப் பத்தி எனக்கு முழுசா தெரியாதுதான்.. அவர்கூட ஒரே ஒருநாள்தான் பேசிருக்கேன்.. கொஞ்ச நேரந்தான் ஸ்பென்ட் பண்ணிருக்கேன்..!! ஆனா அந்த கொஞ்ச நேரத்துலையே.. அவர் உன் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கார்னு என்னால முழுசா புரிஞ்சுக்க முடிஞ்சது..!!"

"அ..அப்படி என்ன பண்ணிட்டான்..?" இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித கலக்கமும், ஆர்வமும் பிறந்திருந்தது.

"ஹாஹா.. உனக்கு எப்படி தெரியும்..? நீதான் மயக்கம் போட்டு மட்டையாயிட்டியே..? நாங்க ரெண்டு பேருந்தான உன்னை அள்ளிக் கொண்டு போயி வீட்ல போட்டோம்..!!"

"எ..என்ன பண்ணான்னு சொல்லு.."

"எதுக்கு..?? இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?? நான் சொல்லிட்டா மட்டும் உனக்கு புரியப் போகுதா..?? அதான்.. எனக்கு ஒரு இருபது நிமிஷத்துல புரிஞ்ச விஷயம்.. உனக்கு இருபது வருஷமா புரியலைன்னு சொல்றியே..?? இப்போ மட்டும் புரிஞ்சுக்கவா போற..??"

"ப்ளீஸ்டி.." திவ்யா கெஞ்சலாக கேட்க,

"ம்ம்ம்.. அழுதாரு.. துடிச்சாரு.. கண்ணீர் விட்டாரு..!! போதுமா..??" அஞ்சு அலறினாள்.

"...................."

"அன்னைக்கு அந்த மனுஷன் துடிச்ச துடிப்பு.. உனக்கு என்னாச்சோன்ற அந்த பயம்.. அழுகையை அடக்க முடியாம அவர் பட்ட வேதனை..!! சத்தியமா அதெல்லாம் நான் சினிமாலயும், கதைலயும்தாண்டி பாத்திருக்கேன்..!! ஒரு பொண்ணுக்காக இப்படி துடிக்கிற ஆம்பளை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் திவ்யா..!! எனக்குலாம் இப்படி ஒருத்தன் கெடைச்சா.. காலம் பூரா அவன் காலடில விழுந்து கெடப்பேன்..!!"

"...................." அஞ்சு பேச பேச திவ்யா அமைதியாகவே இருந்தாள்.

"சரி விடு.. எனக்கெதுக்கு அதெல்லாம்..? உன் மேல அவ்ளோ பிரியமா இருந்த அவரையே நீ தூக்கி எறிஞ்சுட்ட.. நான் சொல்றதையா கேட்கப் போற..? இது உன் வாழ்க்கை.. உன் இஷ்டம்..!! நான் கெளம்புறேன்..!!"

சொன்ன அஞ்சு விடுவிடுவென சென்று கார்க்கதவை திறந்து உள்ளே புகுந்து கொண்டாள். காரை ஸ்டார்ட் செய்தாள். கியர் மாற்றி கிளம்பும் முன், திவ்யாவை ஒருமுறை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னாள்.

"நீ ஏதோ பெரிய தப்பு பண்றேன்னு எனக்கு தோணுது திவ்யா.. பாத்துக்கோ.. டேக் கேர்..!!"

கார் சீறிக்கொண்டு கிளம்பியது. திவ்யாவுக்கோ அசோக்கின் நினைவுகள் மனதுக்குள் பீறிக்கொண்டு கிளம்பியது. சிறுவயதில் இருந்து அசோக்குடனான நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அவளுடைய மனதில் வந்து மோத, அவளையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. பிரம்மை பிடித்தவள் போல நின்று கொண்டிருந்தவள், ஒரு சில வினாடிகள் கழித்துதான் தன் எதிரே வந்து நின்ற திவாகரின் காரை கவனித்தாள். உடனே கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். உதடுகளில் ஒரு செயற்கை புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.